Published : 11 Oct 2014 10:51 PM
Last Updated : 11 Oct 2014 10:51 PM
டெல்லியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்று முதல் போட்டி தோல்விக்கு பதிலடி கொடுத்தது.
பேட்டிங்கில் கோலி, ரெய்னா, கடைசியில் தோனி ஆகியோர் அரைசதங்கள் எடுக்க பந்து வீச்சில் மொகமது ஷமி 4 விக்கெட்டுகளை மீண்டும் கைப்பற்ற ரவிந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்த இந்தியா ஒரு மிகச்சிறந்த வெற்றியச் சாதித்தது.
மொகமது ஷமி 9.3 ஓவர்கள் வீசி 36 ரன்களுக்கு 4 விக்கெடுகளைக் கைப்பற்றியது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது சிறந்த பந்து வீச்சாக அமைந்தது.
வெற்றி பெற 264 ரன்கள் தேவை என்று களமிறங்கிய மேற்கிந்திய அணியின் வெற்றிப்பாதை 35 ஓவர்கள் வரை அபாரமாகவே இருந்தது. அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை அந்த நிலையில் எடுத்திருந்தது. அதன் பிறகு 45 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களுக்கு 46.3 ஓவர்களில் சுருண்டு தோல்வி தழுவியது.
ஆனால் மொகமது ஷமி, ஜடேஜா தங்களிடையே 6 விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொள்ள அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ் ஆகியோரும் சிக்கனமாக வீசினர். இதனால் மேற்கிந்திய அணி விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.
தோனியின் கள அமைப்பில் பெரும் முன்னேற்றம் தெரிந்தது. ஜடேஜா, மிஸ்ராவை வீச அழைத்த போது நெருக்கமாக பீல்டிங்குகளை அமைத்து விக்கெட்டுகளைக் கைப்பற்றும் தீவிரத்தை வெளிப்படுத்தினார். விக்கெட்டுகளை வீழ்த்தும் அவரது தீவிர கள அமைப்பினால்தான் மேற்கிந்திய அணியின் பேட்ஸ்மென்களுக்கு நெருக்கடி அதிகரித்தது. அடித்து ஆடுவதா, இல்லை சிங்கிள், இரண்டு என்று எடுத்து படிப்படியாக முன்னேறுவதா என்ற குழப்பம் தோன்றியது.
கடந்த போட்டியில் தோனியிடம் இத்தகைய அணுகுமுறை இல்லை. இதனால் பவுலர்களும் ரன்களைக் கசிய விட்டனர். அபாரமாக ஆடி ஏறக்குறைய தனது 97 பந்துகளில் 97 ரன்கள் மூலம் டிவைன் ஸ்மித் மேற்கிந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் செல்லும் நிலையில் பவர் பிளேயின் முதல் ஓவரிலேயே மொகமது ஷமியை தோனி பந்து வீச அழைக்க அபாரமான யார்க்கரில் ஸ்மித் பவுல்டு ஆனார். அதிலிருந்து சரிவு ஏற்படத் தொடங்கியது.
ஆனால் அபாய வீரர் சாமுயெல்ஸ் களத்தில் இருந்தார். ராம்தின், டிவைன் பிராவோ, ரசல், டேரன் சாமி, ரவி ராம்பால், ஜெர்மி டெய்லர் என அனைவரும் பேட்டிங் செய்யக்கூடியவர்கள்தான். அதிரடி ஆட்டம் ஆடக்கூடியவர்கள்தான், இவர்களும் இருந்தனர்.
ஆனால் சாமுயெல்ஸ் இன்று கட்டிப்போடப்பட்டார். 38 பந்துகளில் 1 சிக்சருடன் அவர் 16 ரன்கள் எடுத்து உமேஷ் யாதவ் வீசிய ஷாட் பிட்ச் பந்தை ஆஃப் திசையில் தூக்கி அடிக்க முயன்றார் ஆனால் பந்து பாயிண்ட் திசையில் கோலி கையில் கேட்ச் ஆனது.
தினேஷ் ராம்தின் 3 ரன்களில் அமித் மிஸ்ரா பந்தில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிறகு 43வது ஓவரில் ஜடேஜா, ஆந்த்ரே ரசலை ஸ்டம்ப்டு முறையில் வீழ்த்தினார். தோனி அதி அற்புதமாக ஸ்டம்பிங் செய்தார். பிளாஷ் ஸ்டம்பிங் அது. லேசாகக் காலை மட்டும் தூக்கியிருந்தார் ரசல், அதற்குள் பைலைத் தட்டி விட்டார் தோனி.
அதே ஓவரின் கடைசி பந்தில் டேரன் சாமி ஆக்ரோஷமான ஷாட் ஆட நினைத்து பந்தை கோட்டைவிட்டு பவுல்டு ஆனார். டிவைன் பிராவோ 10 ரன்கள் எடுத்திருந்த போது ஷமி பந்தை நேராக லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்தார். டெய்லர் லாங் ஆன் திசையில் கேட்ச் கொடுத்து ஜடேஜாவிடம் வீழ்ந்தார். கடைசியில் ரவிராம்பால் விக்கெட்டை ஷமி தானே கேட்ச் பிடித்து விக்கெட்டைக் கைப்பற்ற தோனி வெற்றிப் பெருமிதத்தில் எம்பிக் குதித்தார்.
முன்னதாக டேரன் பிராவோ, ஸ்மித் இணைந்து தொடக்க விக்கெட்டுக்காக 64 ரன்களை 13 ஓவர்களில் சேர்த்தனர். டேரன் பிராவோ 26 ரன்கள் எடுத்து ஷமியின் அபாரமான ஆங்கிள் பந்துக்கு பவுல்டு ஆனார். ஆனால் கெய்ரன் பொலார்ட் களமிறங்குவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
அவர் 1 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 50 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து, இவரும் ஸ்மித்தும் இணைந்து 2வது விக்கெட்டுக்காக 15 ஓவர்களில் 72 ரன்ளைச் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். பொலார்ட், மிஸ்ரா பந்தில் அவுட் ஆனதும் ஒரு திருப்பு முனை. இவர் ஆட்டமிழந்த பிறகு 7 ஓவர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வறட்சியாக அமைந்தது. 34 ரன்கள்தான் வந்தது. 170 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற நிலையில் 15 ஓவர்களில் வெற்றி பெற 94 ரன்களே தேவை என்று பலமாகச் சென்று கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி பவர் பிளேயில் ஷமியின் யார்க்கர் வேலையைக் காட்ட ஸ்மித் வெளியேற ஆட்டம் அப்படியே இந்தியாப் பக்கம் சாய்ந்தது.
கடந்த போட்டியை விட பந்துவீச்சு மாற்றம், பேட்டிங் வரிசையில் மாற்றம், கள அமைப்பில் விக்கெட்டுகள் எடுக்கும் அவசியத்தின் தீவிரம் என்று தோனியின் அணுகுமுறையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளது.
ஷமி 2வது போட்டியில் தொடர்ந்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். பாசிடிவ்வாக டாஸ் வென்று பேட் செய்ய முடிவெடுத்ததும் வெற்றிக்கு ஒரு காரணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT