Published : 31 Jan 2017 04:57 PM
Last Updated : 31 Jan 2017 04:57 PM
சச்சின் டெண்டுல்கர் ஒருமுறை தான் சென்னைக்கு வந்த போது ஹோட்டல் வெயிட்டர் ஒருவர் கொடுத்த ஆலோசனை தன் பேட்டிங்கை கூர்மைப் படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது:
திறந்த மனதிருந்தால் நீங்கள் பலவிதங்களில் வளர்ச்சியடைய முடியும். சென்னையில் ஒருமுறை ஹோட்டல் வெயிட்டர் ஒருவர் என்னிடம் வந்து நீங்கள் தவறாக நினைக்கவில்லையெனில் நான் ஒரு ஆலோசனை வழங்கலாமா என்றார். நான் கூறுங்கள் என்று ஆவலாகக் கேட்டேன், ஷாட் ஆடும்போது என் பேட் சுழற்சியை எனது முழங்கைக் காப்பு பெரிய அளவுக்கு இடையூறு செய்கிறது என்று கூறினார். அவர் கூறியது 100 சதவீதம் சரியானது. எவ்வளவு துல்லியமாக அவர் கணித்து விட்டார்!
முழங்கைக் காப்பினால் எனக்கு அசவுகரியம் உள்ளது என்று தெரியும், ஆனால் அதை நான் மாற்ற விரும்பவில்லை. என் முழங்கையில் இருமுறை பந்து வந்து தாக்கியது நான் காயமடைந்தேன். அப்போதுதான் முழங்கைக் காப்பில் போதிய பாதுகாப்பில்லை என்பதை உணர்ந்து அதனை போதிய பாதுகாப்பு உள்ளதாகவும் பேட் ஸ்விங்கை சவுகரியமாக்கும் விதமாகவும் மாற்றினேன். நம் நாட்டில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் முதல் நிறுவன சிஇஓ வரை அனைவரும் ஆலோசனை வழங்கும் இயல்புடையவர்கள், நாம் அதனை வரவேற்க திறந்த மனதுடன் இருக்க வேண்டும், என்றார் சச்சின்.
அவர் மேலும் தெரிவிக்கும் போது தன்னுடன் மட்டைகள் பேசும் என்று கூறியதையும் அதனை ஐபிஎல் கிரிக்கெட்டின் போது பொலார்ட், டிவைன் பிராவோ பெரிய நகைச்சுவையாகக் கருதியதையும் பகிர்ந்து கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT