Last Updated : 19 Jan, 2017 07:37 PM

 

Published : 19 Jan 2017 07:37 PM
Last Updated : 19 Jan 2017 07:37 PM

ஆஸ்திரேலிய ஓபன்: அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறினார் ஜோகோவிச்

உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த ‘வைல்டு கார்டு’ வீரர் டெனிஸ் இஸ்டோமின் என்பவரிடம் 6 முறை சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 5 செட்களில் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.

மெல்போர்னில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் நோவக் ஜோகோவிச் 7-6, 5-7, 2-6, 7-6, 6-4 என்ற செட்கணக்கில் 5 மணி நேரம் போராடி இஸ்டோமினின் உறுதியான ஆட்டத்தில் சரணடைந்தார். ஜோகோவிச் வாழ்க்கையில் அவர் அடைந்த மிகப்பெரிய தோல்வி, அல்லது மோசமான தோல்வி இது என்றே டென்னிஸ் நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் மிகச்சிறந்த ஆட்டம் என்று இந்த ஆட்டம் வர்ணிக்கப்படுகிறது. நம்பர் 2 வீரரான ஜோகோவிச் புல்லட் ஷாட்களை ஆடுவார் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக இஸ்டோமினின் புல்லட்களை ஜோகோவிச் எதிர்கொள்ள நேரிட்டது. இஸ்டோமின் தனது டென்னிஸ் வாழ்வில் தரவரிசையில் 33ஐத்தான் அதிகபட்சம் எட்டியுள்ளார், இங்கு 117வது தரவரிசை வீரராகத்தான் ஜோகோவிச்சை எதிர்கொண்டார்.

இஸ்டோமின் ஷாட்கள் அனைத்துமே அவர் நினைத்த விதத்தில் சரியாக அமைந்தது, மாறாக ஜோகோவிச்சிற்கு எதுவும் சரியாக அமையவில்லை, நிறைய மிஸ்ஹிட்கள், சில வேளைகளில் ஹாக்-ஐ-யுமே அவருக்கு சாதகமாக இல்லை.

முதல் செட்டிலேயே ஜோகோவிச் திணறினார், அந்த செட் 85 நிமிடங்கள் நடந்தது. டை பிரேக்கரில் இஸ்டோமின் வென்றார். 2-வது 3-வது செட்களில் ஜோகோவிச் சிறிது நேரம் தனது பழைய சுயத்தைக் கண்டுபிடித்து கொண்டு வெற்றி பெற்றார்.

ஆனால் 4, 5 வது செட்களில் இஸ்டோமின் மீண்டும் பவர் டென்னிஸில் ஜோகோவிச்சை திணறடித்து அதிர்ச்சித் தோல்வியடையச் செய்தார். ரியோ ஒலிம்பிக்கில் 145வது தரவரிசையில் இருந்த டெல் போட்ரோவிடம் தோல்வி அடைந்த பிறகு கிராண்ட்ஸ்லாமில் முதல் முறையாக 117-வது தரவரிசை வீரரான இஸ்டோமினிடம் வீழ்ந்தார் ஜோகோவிச்.

இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 9 முறை சர்வில் டபுள் பால்ட் செய்தார், ஷாட்களை தவறாக ஆடிய விதத்தில் 72 முறை தவறிழைத்தார். முதல் செட் டைபிரேக்கரில் ஜோகோவிச் 4-1 என்று முன்னிலை வகித்தார், ஆனால் இஸ்டோமின் விடாப்பிடியான சில ஷாட்களை ஜோகோவிச் சொதப்பினார், கடைசியில் ஜோகோவிச் தனது சாதகமான ஃபோர்ஹேண்ட் ஷாட்டையே வெளியே அடிக்க முதல் செட் இஸ்டோமின் வசம் வந்தது. 2-3 செட்களை ஜோகோவிச் வெல்ல, 4-வது செட்டில் ஜோகோவிச் சர்வை இஸ்டோமின் பிரேக் செய்தார். அதிலிருந்து இஸ்டோமின் ஆதிக்கம் தொடர அதிர்ச்சித் தோல்வியுற்றார் ஜோகோவிச்.

ஆஸ்திரேலியா ஓபன் வரலாற்றில் மிகப்பெரிய அதிர்ச்சித் தோல்வி இதுவே என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x