Published : 02 Mar 2014 05:20 PM
Last Updated : 02 Mar 2014 05:20 PM
ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 245 ரன்களை எடுத்துள்ளது.
இதன்மூலம், மிர்பூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு 246 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங் செய்ய முடிவெடுத்து, இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்தது.
துவக்க ஆட்டக்கார் ரோகித் சர்மா நிதானமாக பேட் செய்து, 58 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார். தவாண் 10 ரன்களிலும், விராட் கோலி 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் இணைந்த ரஹானே - ராயுடு ஜோடி, ஓரளவு நிதானமாக பேட் செய்து ரன் எண்ணிக்கையை கூட்ட முயன்றது. ராஹானே 59 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ராயுடுவுக்கு ஓரளவு நல்ல இணையாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 46 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
அதன்பின், 62 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்த நிலையில், அஜ்மலின் பந்துவீச்சில் ராயுடு ஆட்டமிழந்தார். அஸ்வின் 9 ரன்களிலும், முகமது சமி ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
ஆட்டத்தின் பிற்பகுதியில் நிதானமாக பேட் செய்த ரவீந்தர ஜடேஜா 49 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. அமித் மிஸ்ரா ஆட்டமிழக்காமல் ஒரு ரன் எடுத்தார்.
பாகிஸ்தான் தரப்பில் அஜ்மல் 3 விக்கெட்டுகளையும், தல்ஹா, ஹஃபீஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், உமர் குல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இலங்கை அணி ஏறக்குறைய இறுதிச்சுற்றை உறுதி செய்துவிட்ட நிலையில், இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் மற்றொரு அணி இந்தியாவா அல்லது பாகிஸ்தானா என்பதில் இப்போது போட்டி நிலவுகிறது. இன்றைய போட்டியில் தோற்கும் அணி ஏறக்குறைய இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்துவிடும்.
போனஸ் புள்ளியோடு சேர்த்து 5 புள்ளிகளை வைத்துள்ள பாகிஸ்தான் இந்தப் போட்டியில் வெற்றி பெறும்பட்சத்தில் இறுதிச்சுற்றை உறுதி செய்துவிடும். அதேநேரத்தில் 4 புள்ளிகளை மட்டுமே வைத்துள்ள இந்திய அணி இந்தப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்துவதோடு, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசிப் போட்டியிலும் வெற்றி பெற்றாக வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT