Published : 04 Apr 2017 10:13 AM
Last Updated : 04 Apr 2017 10:13 AM
பார்சிலோன அணிக்காக 100 கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் லயனோல் மெஸ்ஸி, லூயிஸ் சுவாரஸ் ஆகியோருடன் நெய்மர் இணைந்தார்.
லா லிகா கால்பந்து தொடரில் நேற்று பார்சிலோனா அணி, கிரானாடா அணியை எதிர்த்து விளையாடியது. இதில் பார்சிலோனா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் 44-வது நிமிடத்தில் லூயிஸ் சுவாரஸ், 64-வது நிமிடத்தில் பாகோ அல்கசர், 83-வது நிமிடத்தில் ராகிடிக், 90-வது நிமிடத்தில் நெய்மர் ஆகியோர் கோல் அடித்தனர். கிரானாடா அணி தரப்பில் 50-வது நிமிடத்தில் போகா ஒரு கோல் அடித்தார்.
இந்த ஆட்டத்தில் கோல் அடித்ததன் மூலம் பார்சிலோனா அணிக்காக 100 கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் நெய்மரும் இணைந்தார். 177-வது ஆட்டத்தில் அவர் 100-வது கோலை அடித்துள்ளார். மெஸ்ஸி இந்த சாதனையை 188 ஆட்டங்களில் நிகழ்த்தியிருந்தார்.
மேலும் பார்சிலோனா அணிக் காக 100 கோல்களை அடிக்கும் 3-வது பிரேசில் வீரர் என்ற சாதனையையும் படைத்தார் 25 வயதான நெய்மர். இதற்கு முன்னர் ரிவால்டோ, எவாரிஸ்டோ ஆகியோரும் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.
நெய்மர் அடித்துள்ள 100 கோல்களில் 64 லா லிகா தொடரில் அடிக்கப்பட்டதாகும். 21 கோல்கள் சாம்பியன்ஸ் லீக் தொடரிலும், 14 கோல்கள் கோபா டெல் ரே தொடரிலும், ஒரு கோல் ஸ்பானிஷ் சூப்பர் கோபா தொடரிலும் அடிக்கப்பட்டது.
நெய்மரின் முதல் கோல் 2013-ம் ஆண்டு நடைபெற்ற சூப்பர் கோபா தொடரில் அட்லெடிகோ மாட்ரிட் அணிக்கு எதிராக அடிக்கப்பட்டதாகும். அதிகபட்சமாக அவர் 2014-15-ம் ஆண்டு சீசனில் 39 கோல்கள் அடித்து அசத்தியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT