Published : 25 Sep 2016 01:02 PM
Last Updated : 25 Sep 2016 01:02 PM
உலக சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி 20 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
துபையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 19.5 ஓவர்களில் 115 ரன்களுக்கு சுருண்டது. ஜான்சன் சார்லஸ் 7, லீவிஸ் 1, பிளெட்சர் 2, மார்லன் சாமுவேல்ஸ் 5, நிக்கோலஸ் பூரன் 5 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதில் சார்லஸை தவிர மற்ற 4 வீரர்களும் இமாத் வாசிம் சுழலில் ஆட்டமிழந்தனர்.
4.3 ஓவர்களில் 22 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த நிலையில் டிவைன் பிராவோ மட்டும் போராடினார். எனினும் அடுத்து வந்த கெய்ரன் பொலார்டு 9, கேப்டன் கார்லோஸ் பிராத் வெயிட் 0, சுனில் நரேன் ஒரு ரன்களில் நடையை கட்டினர்.
11.3 ஓவரில் 8 விக்கெட்களை இழந்து 48 ரன்கள் மட்டுமே எடுத்து தத்தளித்த நிலையில் 9-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜெரோம் டெய்லருடன் இணைந்து பிராவோ அணியை சற்று தூக்கி நிறுத்தினார்.
பிராவோ 54 பந்தில், 4 பவுண் டரிகள், 2 சிக்ஸருடன் 55 ரன்களும், ஜெரோம் டெய்லர் 21 ரன்களும் சேர்த்ததால் மேற்கிந்தியத் தீவுகள் அணி சற்று கவுரவமான ஸ்கோரை எடுக்க முடிந்தது. இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு எதிராக பாகிஸ் தானின் சயத் அஜ்மல்-சோகைல் தன்வீர் ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் எடுத்திருந்தது.
பாகிஸ்தான் தரப்பில் இமாத் வாசிம் 4 ஓவர்கள் வீசி 14 ரன் களுக்கு 5 விக்கெட்கள் வீழ்த்தினார். இதையடுத்து எளிதான இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 14.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாபர் அஷாம் 37 பந்துகளில், 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 55 ரன்னும், காலித் லத்தீப் 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஷர்ஜீல்கான் 22 ரன்கள் சேர்த்தார்.
ஆட்ட நாயகனாக இமாத் வாசிம் தேர்வானார். 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT