Published : 08 Oct 2014 11:08 AM
Last Updated : 08 Oct 2014 11:08 AM
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் வரும் 12-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இதில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடனமாடுகிறார்.
இங்குள்ள விவேகானந்தா யுவ பாரதி கிரிரங்கம் மைதானத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள தொடக்க விழாவில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி, நீதா அம்பானி என பல்வேறு பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள். பாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா, வருண் தவன் உள்ளிட்டோர் நடனமாடுகிறார்கள்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியைத் தொடங்கி வைக்கிறார். இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ள பல்வேறு அணிகளின் உரிமையாளர்களான அபிஷேக் பச்சன் (சென்னையின் எப்.சி.) ரன்பீர் கபூர் (மும்பை), சல்மான் கான் (புணே), ஜான் ஆப்ரஹாம் (குவஹாட்டி) வருண் தவன் (கோவா அணியின் தூதுவர்), சச்சின் டெண்டுல்கர் (கொச்சி), எம்.எஸ். தோனி (சென்னை), விராட் கோலி (கோவா), சவுரவ் கங்குலி (கொல்கத்தா) ஆகியோர் இந்தத் தொடக்க விழாவில் கலந்துகொள்கிறார்கள்.
அட்லெடிகோ டி கொல்கத்தா அணியின் உரிமையாளர்களில் ஒருவரான உத்சவ் பரீக் கூறுகையில், “அமிதாப், சச்சின், சல்மான்,கங்குலி என ஏராளமான நட்சத்திரங்கள் கொல்கத்தாவுக்கு படையெடுக்க இருக்கிறார்கள். எனவே தொடக்க விழா ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். பிரியங்கா சோப்ரா, வருண் ஆகியோர் 500 துணை நடனக் கலைஞர்களுடன் நடனமாடுகிறார்கள்” என்றார்.
போட்டிக்கான டிக்கெட் கட்டணம் குறித்துப் பேசிய உத்சவ், “ரூ.200, ரூ.300, ரூ.400, ரூ.500, ரூ.750, ரூ.1250, ரூ.2500 ஆகிய விலைகளில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஏற்கெனவே 5,700 டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டன. இந்த மைதானத்தில் 12 ஆயிரம் பேர் அமரலாம்.
இதுபோன்ற தரமான போட்டிகளுக்கு இவ்வளவு குறைவான விலையில் டிக்கெட் விற்பனை செய்வது கடினமானது. ஆனாலும் ரசிகர்கள் போட்டியை ரசிக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு குறைவான விலையை நிர்ணயித்துள்ளோம். கொல்கத்தாவில் நடைபெறும் 6 போட்டிகளுக்கும் டிக்கெட் வாங்குபவர்களுக்கு 7-வது போட்டிக்கான டிக்கெட் இலவசமாக வழங்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT