Published : 29 Oct 2014 05:07 PM
Last Updated : 29 Oct 2014 05:07 PM
டான் பிராட்மேன் அறக்கட்டளை சார்பாக சச்சின் டெண்டுல்கர் கவுரவிக்கப்படுவதையொட்டி, சச்சின் தனது தந்தையை சந்தித்து உரையாடிய தருணத்தை ’டான்’ மகன் ஜான் பிராட்மேன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் வீரரான மறைந்த டான் பிராட்மமேன் அறக்கட்டளை சார்பாக சச்சின் டெண்டுல்கர் கவுரவிக்கப்படுவதையொட்டி சிட்னி சென்றுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
இன்று, சச்சின் மற்றும் ஸ்டீவ் வாஹ் ஆகியோருக்கு இரவு உணவு விருந்து அளிக்கப்படுகிறது. இந்நிலையில் டான் பிராட்மேன் அறக்கட்டளை சார்பாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் டான் பிராட்மேனின் வாரிசான ஜான் பிராட்மேன் 1998-ஆம் ஆண்டு அடிலெய்டில் உள்ள இல்லத்தில் டான் பிராட்மேனை, சச்சின் டெண்டுல்கர் சந்தித்த தருணத்தில் தான் இருந்ததையும் அந்தக் கணத்தையும் மலர்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.
அதிகம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத ஜான் பிராட்மேன், சச்சினின் 1998 சந்திப்பு பற்றி வியப்புடன் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
“தந்தையின் (டான் பிராட்மேன்) 90-வது பிறந்த தினத்திற்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஷேன் வார்ன் வந்திருந்தனர். நான் அப்போது அவர்களுடன் இருந்தேன். என் அம்மா அப்போது உயிருடன் இல்லை. நான் என் தந்தைக்கு உதவி புரிந்து கொண்டிருந்தேன் அப்போது சச்சின், ஷேன் வார்ன் வந்தனர். இருவரும் அற்புதமான மனிதர்கள்.
என் தந்தை, சச்சின், வார்ன் ஆகியோருடன் சேர்ந்து நானும் உரையாடினேன். அப்போது சச்சின், ஒரு டெஸ்ட் போட்டிக்கு முன்னால் எப்படி என் தந்தை தன்னை மனரீதியாகத் தயார் படுத்திக்கொள்வார் என்று ஆவலுடன் கேட்டார். அதற்கு என் தந்தை, ‘நான் அலுவலகம் சென்று பணியாற்றுவேன். விளையாட்டு நேரம் என்றால் நான் என் சீருடைகளை அணிந்து கொண்டு மேட்சிற்குச் செல்வேன் என்றார். சச்சினால் அவர் கூறியதை நம்ப முடியவில்லை. என் தந்தையிடம் பேசும்போது அவர் மீது சச்சினுக்கு இருந்த மரியாதை அவரது கண்களில் தெரிந்தது. அது ஒரு அற்புதமான கணம்.
சச்சினுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்படுவதை நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்கிறோம். எங்கள் குடும்பத்திற்கும் டான் பிராட்மேன் அறக்கட்டளைக்கும் பிரச்சினை இருந்தாலும் சச்சின் பற்றி பேசும்போது நான் எப்போதும் உணர்வு பூர்வமான மகிழ்ச்சியுடன் பேசி வருகிறேன்.
என் தந்தை இருந்திருந்தால் சச்சினுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு கவுரவத்தையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றிருப்பார். என் தந்தை, சச்சின் டெண்டுல்கரின் ஆட்ட முறையையும் ரசிப்பார், அவரது விளையாட்டு உணர்வையும் மதிப்பார். பிறகு சச்சினின் தன்னடக்கம் என் தந்தைக்கு மிகவும் பிடித்த ஒன்று. இவ்வாறு என் தந்தையின் மனதைக் கவரும் பல தன்மைகள் சச்சினிடம் உண்டு.
என் தந்தையின் 90-வது பிறந்த நாளுக்கு வந்தபோது சச்சின், என் தந்தையின் ஓவியத்தின் முன்பு நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார். சமீபத்தில் சச்சின் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்தப் புகைப்படத்தை தனது புத்தகத்தில் பயன்படுத்துக் கொள்ளட்டுமா என்று அனுமதி கேட்டார். அவருடன் எந்த ஒரு விஷயத்தைப் பேசினால் உற்சாகமாக இருக்கிறது” என்றார் ஜான் பிராட்மேன்.
பிராட்மேன் மியூசியத்திற்கு சச்சின் மற்றும் ஸ்டீவ் வாஹ் ஹெலிகாப்டரில் செல்லவுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT