Published : 27 Aug 2016 10:23 AM
Last Updated : 27 Aug 2016 10:23 AM
போர்ச்சுக்கலை சேர்ந்த பிரபல நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2016-ம் ஆண்டுக்கான சிறந்த ஐரோப்பிய கால்பந்து வீரருக்கான விருதை வென்றுள்ளார். ஐரோப் பிய கால்பந்து சம்மேளன மான யூஇஎப்ஏ நடப்பு ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான விருதை அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பத்திரிகையாளர்களிடம் நடத்தப்படும் வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த விருதுக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில் கராத் பாலே, அன்டோனி கிரிஸ்மான் ஆகியோரை பின்னுக்கு தள்ளி விருதை வென்றுள்ளார் ரொனால்டோ. கடந்த சீசனில் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை ரியல் மாட்ரிட் அணி கைப்பற்றுவதற்கும், இந்த ஆண்டில் போர்ச்சுக்கல் அணி யூரோ கோப்பை தொடரை வெல்லவும் ரொனால்டோ முக்கிய பங்கு வகித்தார்.
31 வயதான ரொனால்டோ 2-வது முறையாக இந்த விருதை பெறுகிறார். கடைசியாக அவர் 2013-14ம் ஆண்டில் சிறந்த வீரர் விருதை கைப்பற்றிருந்தார். இதுதொடர்பாக ரொனால்டோ கூறும்போது, ‘‘இந்த விருதை பெறுவதில் பெருமை அடைகிறேன். இந்த சீசன் எனக்கு நம்ப முடியாத வகையில் சிறப்பாக அமைந்தது. அன்டோனி கிரிஸ்மான், கராத் பாலே ஆகியோரும் இந்த விருதை பெற தகுதியானவர்களே’’ என்றார். ரியல் மாட்ரிட் அணி 11-வது முறையாக ஐரோப்பிய கோப்பையை வென்றதில் ரொனால்டோவின் பங்கு அதிகமாக இருந்தது. இறுதிப்போட்டியில் அட்லெட்டிகோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெனால்டி முறையில் கோல் அடித்து ரொனால்டோ அசத்தியிருந்தார். யூரோ கோப்பை கால்பந்து தொடரில் 3 கோல்கள் அடித்து பிரான்சின் மைக்கேல் பிளாட்டினியின் சாதனையையும் சமன் செய்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT