Published : 24 Sep 2016 05:49 PM
Last Updated : 24 Sep 2016 05:49 PM
கான்பூர் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டத்தில் இந்தியா தனது 2-வது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.
215 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 3-ம் நாள் ஆட்ட முடிவில் விஜய் 7 நான்குகள், ஒரு ஆறுடன் 64 ரன்களையும், புஜாரா 8 நான்குடன் 50 ரன்களையும் எடுத்து களத்தில் உள்ளனர்.
இருவரும் இணைந்து 3.71 என்ற நல்ல ரன் விகிதத்தில் 2-வது விக்கெட்டுக்காக 107 ரன்களை இதுவரை எடுத்துள்ளனர்.
அவர்கள் விளையாடிய போது மடமடவென சரிந்த விக்கெட்டுகள் இந்தியா விளையாடிய போது ஏன் இல்லை என்ற கேள்வி எழுவது இயற்கை, நியூஸிலாந்து ஸ்பின்னர்கள் லைன் மற்றும் லெந்த் சரியல்ல, பல சமயங்களில் பந்தை தூக்கி வீசாமல் நேராக ஃபிளாட்டாக வீசினர்.
கடைசியில் இஷ் சோதி ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய போது ரவுண்ட் த விக்கெட் பகுதியில் கொதகொதவென இருக்கும் பகுதியில் பந்து பட்டு தாறுமாறாக எழும்பியது. முரளி விஜய் சற்றே ஆடிப்போனார். இந்த உத்தியை நாளை இஷ் சோதி கடைபிடிக்கக் கூடும், முதல் இன்னிங்ஸில் இப்படித்தான் 150/1 என்ற நிலையிலிருந்து இந்திய அணி சரிவு கண்டது, இந்த இன்னிங்ஸில் அப்படி சரிவு ஏற்பட்டாலும் ஒரு வலுவான முன்னிலையை இந்தியா வைக்கும் அளவுக்கு புஜாரா, விஜய் அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
2-வது இன்னிங்சைத் தொடங்கியதும் கே.எல்.ராகுல் ஸ்வீப் ஷாட் மூலம் கிரெய்க் பந்தை பவுண்டரிக்கு விரட்டி தனது முதல் நான்கை அடித்தார். பிறகு சாண்ட்னரை மிக தைரியமாக லெக் திசையில் இறங்கி வந்து ஒதுங்கிக் கொண்டு மிடாஃபில் இன்னொரு நான்கை விளாசினார். ஒருநேரத்தில் கிரெய்க்கை ரிவர்ஸ் ஸ்வீப் செய்து நான்கு விளாசினார். பெடல் ஸ்வீப் மூலம் சாண்ட்னரை 4 அடித்து அவரது லைன் மற்றும் லெந்தை பிரச்சினைக்குள்ளாக்கினார்.
மீண்டும் கிரெய்க் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் 4 அடிக்க முதல் விக்கெட்டுக்காக அரைசதக் கூட்டணி அமைந்தது இதில் ராகுல் மட்டும் 37 ரன்களை எடுத்தார். கடைசியில் இஷ் சோதியின் லெக்பிரேக் பந்தை சற்றே தாமதமாக ஆடி நேராக ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார், அது பாயிண்டில் நான்கு செல்ல வேண்டிய பந்து. 38 ரன்களில் ஆட்டமிழந்தார் ராகுல்.
இன்னிங்சின் 19-வது ஓவரின் 5வது பந்து முதல் 21வது ஓவரின் 3-வது பந்துகளுக்கு இடையே புஜாரா, விஜய் 7 நான்கை விளாசினர். புஜாரா தனது முதல் 16 ரன்களை நான்கிலேயேதான் எடுத்தார். இந்த நான்குகளின் தொடர் அணிவகுப்பு நியூஸிலாந்து பவுலர்களின் உத்வேகத்தைத் தளர்த்தியது. ஒருநேரத்தில் 10 ஓவர்களில் இருவரும் 55 ரன்களை எடுத்து ஆக்ரோஷம் காட்டினர்.
இதனையடுத்து இருவரும் உறுதிபட நின்று ஆடினர். இதனால் இருவரும் அரைசதம் எடுத்து ஆடி வருகின்றனர். 3-ம் நாள் ஆட்டம் இந்தியாவின் வெற்றியை நோக்கி திசைத்திருப்பியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT