Published : 13 Jun 2016 06:31 PM
Last Updated : 13 Jun 2016 06:31 PM

2-வது போட்டி: ஜிம்பாப்வேயை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இந்தியா

ஹராரேயில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியிலும் ஜிம்பாப்வேயை இந்திய அணி வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

இன்னொரு ஒருதலைபட்சமான ஆதிக்கத்தில் தொடரை இந்தியா இப்போதைக்கு 2-0 என்று கைப்பற்றியது.

திங்களன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தோனி மீண்டும் ஜிம்பாப்வேயை பேட் செய்ய அழைத்தார். அந்த அணி சிபாந்தாவின் அரைசதம் மற்றும் இவரும் சிகந்தர் ரசாவும் இணைந்து 3-வது விக்கெட்டுக்காகச் சேர்த்த 65 ரன்கள் என்பதைத் தவிர எழும்பவில்லை. குறிப்பாக சிபந்தா, சிகந்தர் ரசா இருவருமே மோசமான ஷார்ட் தேர்வில் தங்கள் விக்கெட்டை விட்டுக் கொடுக்க கடைசி 6 விக்கெட்டுகளை வெறும் 20 ரன்களுக்கு இழந்த ஜிம்பாப்வே 55 பந்து இடைவெளியில் மோசமாக 34.3 ஓவர்களில் 126 ரன்களுக்குச் சுருண்டது. யஜுவேந்திர சாஹல் ஒரு நேரத்தில் ஹாட்ரிக் வாய்ப்பு பெற்றார், கடைசியில் 6 ஓவர்கள் 2 மெய்டன்கள் 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாகக் கைப்பற்றினார். பும்ரா, அக்சர் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும், பரீந்தர் சரண் மற்றும் தவல் குல்கர்னி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆடிய இந்திய அணி 26.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராயுடு மீண்டும் எந்தவித பிரச்சினைகளையும் எதிர்கொள்ளாமல் 44 பந்துகளைச் சந்தித்து 7 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ராகுல் 33 ரன்கள் எடுத்தும் கருண் நாயர் 39 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர், கடைசியில் மணீஷ் பாண்டே தான் எதிர்கொண்ட முதல் பந்தை கவர் திசையில் பவுண்டரி அடித்து வெற்றி பெறச் செய்தார்.

ஜிம்பாப்வே அணியின் ஆட்டத்திறன் துயரத்துடன் கிரெய்க் எர்வினுக்குப் பதிலாக அணிக்குள் வந்த சான் வில்லியம்ஸ் காயம் காரணமாக பேட்டிங் செய்ய முடியாமல் போன துயரமும் சேர்ந்து கொண்டது.

பந்து வீச்சிலும் எந்த வித தாக்கமும் இல்லை, இந்திய பேட்ஸ்மென்களுக்கு எந்த வித சவால்களும் அளிக்கப்படவில்லை. அணியில் தேர்வு செய்யப்படும் அனைவருக்கும், தோனி உட்பட, பேட்டிங் பெற வேண்டுமென்றால், டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்திருக்கலாம்.

3-வது ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

106/3 என்ற நிலையில் ஜிம்பாப்வே நிச்சயம் 200 ரன்களைக் கடக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் சிகந்தர் ரசா, சாஹல் பந்தை லாங் ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார், தேவையற்ற ஷாட். அடுத்த பந்தே சாஹல், சிகும்பராவை எல்.பி. செய்தார். களமிறங்கிய முதும்பாமி ஹாட்ரிக்கைத் தடுத்து நிறுத்தினார். சிபந்தா 69 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 53 ரன்கள் எடுத்து ஆடி வந்த போது 28-வது ஓவரில் சாஹலிடம் வீழ்ந்தார்.

முதல் போட்டியில் சிறப்பாக வீசியும் 1 விக்கெட்டுகளுக்கு மேல் கிடைக்காத சாஹல் இந்தப் போட்டியில் சிறப்பாக வீசினார், பிளைட், லெந்த், திருப்புதல் என்று அனைத்திலும் சிறப்பாகச் செயல்பட்டார் சாஹல். சிபாந்தா நன்றாக ஆடிக்கொண்டிருந்த போதே அலட்சியமான, பொறுப்பற்ற ஷாட்டில் ரசா போலவே ஆட்டமிழந்தார். சான் வில்லியம்ஸ் காயம் காரணமாக இறங்க முடியாத நிலையில் ஜிம்பாப்வே 126 ரன்களுக்கு மடிந்தது.

இந்திய இன்னிங்ஸ் தொடங்கிய போது கருண் நாயர், நோ-பாலில் பிழைத்தார். டெண்டய் சதாரா வீசிய பந்தை விக்கெட் கீப்பரிடம் எட்ஜ் செய்தார் கருண் நாயர். பிறகு நன்றாக ஆடினார், பேக்புட், பிரண்ட் புட் இரண்டிலுமே ஷாட்களை ஆடினார் நாயர். பந்துவீச்சும் எப்படி வேண்டுமானாலும் ஆடலாம் என்ற சுதந்திரத்தை வழங்கியது. ஆட்ட நாயகனாக சாஹல் தேர்வு செய்யப்பட்டார்.

இது போன்ற தொடர்களால் யாருக்குப் பயன் என்பதை பிசிசிஐ, ஐசிசி யோசிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x