Last Updated : 30 Dec, 2014 03:02 PM

 

Published : 30 Dec 2014 03:02 PM
Last Updated : 30 Dec 2014 03:02 PM

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி திடீரென அறிவித்தார். உடனடியாக ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்ததையடுத்து, விராட் கோலி சிட்னியில் நடைபெறும் 4-வது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயலாற்றுவார்.

மெல்போர்ன் டெஸ்ட் போட்டி டிரா ஆனதையடுத்து அவரிடமிருந்து இந்த அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அனைத்து வடிவங்களிலும் விளையாடுவது கடினமாக இருக்கிறது என்ற காரணத்தினால் அவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதாக பிசிசிஐ தனது செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.

”இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களுள் ஒருவரான தோனி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அனைத்து வடிவங்களிலும் விளையாடுவது கடினமாக இருப்பதாகக் கூறி அவர் ஓய்வு அறிவித்திருந்தார். இவரது தலைமையில் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 நிலையை எட்டியது.

உடனடியாக அவர் ஓய்வு அறிவித்ததையடுத்து, அவர் ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளார். அவரது இந்த முடிவை பிசிசிஐ மிகவும் மதிக்கிறது. மேலும், அவரது பெரும் பங்களிப்புக்காகவும் இந்திய கிரிக்கெட்டிற்கு அவர் கொண்டு வந்து சேர்த்த புகழுக்காகவும் பிசிசிஐ நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

சிட்னி டெஸ்ட் போட்டிக்கு விராட் கோலி கேப்டனாக பணியாற்றுவார்” என்று பிசிசிஐ தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து அவர் 20 ஓவர் கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.

தோனி இதுவரை 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 60 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார்.

இந்த 60 டெஸ்ட் போட்டிகளில் 27 டெஸ்ட்களில் வெற்றி பெற்று சவுரவ் கங்குலியின் 21 டெஸ்ட் வெற்றிகளைக் கடந்து சாதனை புரிந்துள்ளார்.

2008-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கான்பூரில் அனில் கும்ளே இல்லாத காரணத்தினால் பொறுப்பு கேப்டனாக செயலாற்றிய தோனி, அதன் பிறகு ஆஸ்திரேலியா அணியின் இந்தியப் பயணத்தின் போது மொஹாலியில் கேப்டன் பொறுப்பு வகித்தார். அனில் கும்ளே ஓய்வு பெற்றதையடுத்து முழு நேர டெஸ்ட் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார்.

டெஸ்ட் போட்டிகளில் தோனி 4876 ரன்களை 38.09 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இதில் 6 சதங்கள் 33 அரைசதங்கள். 2013ஆம் ஆண்டு அவருக்கு பிடித்தமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மிகப்பெரிய வெற்றியில் டெஸ்ட் போட்டியில் அவரது அதிகபட்ச தனிப்பட்ட ரன்களான 224 ரன்களை எடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x