Published : 29 Aug 2016 02:59 PM
Last Updated : 29 Aug 2016 02:59 PM
அமெரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரில் முதல் போட்டியை வென்ற மே.இ.தீவுகள், 2-வது போட்டியில் வெற்றி தோல்வி முடிவு தெரியாமல் போனதால் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரைக் கைப்பற்றியது.
இந்திய அணி நவீன அதிரடி வீரர்கள் கொண்ட மே.இ.தீவுகளை அருமையான பந்து வீச்சின் மூலம் 143 ரன்களுக்குச் சுருட்டியது ஆனால் இந்திய அணி 2 ஓவர்களே ஆட முடிந்தது, இதில் 15 ரன்கள் எடுத்தது.
ஆட்டம் தாமதமாகத் தொடங்கியதற்கு போட்டி அமைப்பாளர்கள் எந்தவித பொது அறிவிப்பையும் வெளியிடவில்லை, சிறிய அளவாக இருந்தாலும் பெரிய தொகையைக் கொடுத்து பார்க்க வந்த ரசிகர் கூட்டம் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்தனர். காரணம் போட்டியின் தொலைக்காட்சி ஒளிபரப்பில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆட்டம் தாமதப்படுத்தப்பட்டது என்று கூறப்பட்டது. ஆனால் மைதானத்திற்கு வந்து அதிக தொகை கொடுத்து டிக்கெட் எடுத்தவர்கள் நிலை என்ன என்பது யோசிக்கப்படவில்லை, பெரிய அளவிலான தொலைக்காட்சி நேயர்கள்தான் போட்டி அமைப்பாளர்களுக்கு பிரதானமாக இருந்தது.
பின்னால் மழை பெய்யும் என்று அறிவித்துள்ள நிலையில் 40 நிமிடங்கள் தொடக்கத்தை தாமதம் செய்தது நிச்சயம் சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
மே.இ.தீவுகளை 143 ரன்களுக்கு மட்டுப்படுத்திய பிறகு வெற்றி பெற்று தொடரைச் சமன் செய்யும் முனைப்புடன் இருந்த இந்திய அணி களமிறங்கியவுடன் 2 ஓவர்கள் கழித்து 20 நிமிடங்கள்தான் மழை பெயதது. மைதானம் முழுதும் கவர் செய்யப்படவில்லை, சூப்பர் சாப்பர் என்ற மிகப்பெரிய நீர் உறிஞ்சியும் இல்லை. புறமைதானமும் ஓரளவுக்கு தயாராக இருந்தது, பிட்சும் தயாராகவே இருந்தது, ஆனால் பவுலர்கள் ஓடி வரும் இடம் காயவில்லை. ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
நேற்றும் சார்லஸ் அதிரடி காட்டினார். 25 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சருடன் அவர் 43 ரன்கள் எடுத்து அமித் மிஸ்ராவின் முதல் பந்தில் அவுட் ஆனார். அதன் பிறகு ஜடேஜா, அஸ்வின் ஆகியோரும் ஆதிக்கம் செலுத்தினர். ஜடேஜா 2 ஓவர்களை சிக்கனமாக விறுவிறுப்பாக வீசினார், அஸ்வின் சாதுரியமாக வீசி லெண்டில் சிம்மன்ஸ், பொலார்ட் ஆகியோரை வீழ்த்தி 3 ஓவர்களில் 11 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஸ்பின்னர்கள் ஆதிக்கத்தினால் ஜஸ்பிரீத் பும்ரா 10 ஓவர்களுக்குப் பிறகுதான் கொண்டு வரப்பட்டார், அவரும் சாமுவேல்ஸை சொற்ப ரன்களுக்கு வீழ்த்தினார். பிராத்வெய்ட் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 18 ரன்கள் எடுத்து மிஸ்ராவிடம் அவுட் ஆனார். மிஸ்ரா மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்து சார்லஸ், பிராவோ, பிராத்வெய்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி 4 ஓவர்களில் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பும்ரா, சாமுவேல்ஸையும் ஆந்த்ரே பிளெட்சரையும் வீழ்த்தினார். 19.4 ஓவர்களில் மே.இதீவுகள் 143 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
எளிதில் வெற்றி பெற்றிருக்க வேண்டிய ஆட்டம், மழை நின்ற பிறகும் மைதானத்தின் நிலையினால் ஆட முடியாமல் போக மே.இ.தீவுகள் தொடரை வென்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT