Published : 24 Aug 2016 06:52 PM
Last Updated : 24 Aug 2016 06:52 PM
கொழும்பு பிரேமதாஸா மைதானத்தில் நடைபெறும் 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பாக்னர் ஹாட்ரிக் சாதனை புரிய இலங்கை அணி முதலில் பேட் செய்து 288 ரன்கள் எடுத்துள்ளது.
46-வது ஓவரின் கடைசி பந்தில் 54 ரன்கள் எடுத்த குசல் பெரேராவை வேகம் குறைந்த ஃபுல் லெந்த் பந்தில் எல்.பி. ஆக்கிய பாக்னர், 48-வது ஓவரின் முதல் பந்தில் 57 ரன்கள் எடுத்த ஆஞ்சேலோ மேத்யூஸ், 2-வது பந்தில் 12 ரன்கள் எடுத்த திசர பெரேரா ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை புரிந்தார்.
மேத்யூஸ், பாக்னர் பந்தை தூக்கி அடிக்க நேர் பவுண்டரி அருகே கேட்ச் பிடிக்கப்பட்டதால் திசர பெரேரா கிராஸ் செய்தார், ஆனால் அவர் அடுத்த பந்தை ஒதுங்கிக் கொண்டு அடிக்க முயன்று பவுல்டு ஆனார். பாக்னர் ஹாட்ரிக் சாதனை புரிந்தார். ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் சாதனை புரியும் 6-வது பவுலராவார் பாக்னர்.
2013-ம் ஆண்டு கடைசியாக கிளிண்ட் மெக்காய் ஹாட்ரிக் எடுத்த பிறகு தற்போது பாக்னர் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்ப்பா 3 விக்கெட்டுகளை அருமையாக வீசி வீழ்த்தினார். இவர் சந்திமால், மெண்டிஸ், டி.எம்.டிசில்வா ஆகியோரை வீழ்த்த 25-வது ஓவரில் 137/2 என்று இருந்த இலங்கை 30.2 ஓவர்களில் 158/5 என்று ஆனது. சந்திமால் 67 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 48 ரன்கள் எடுத்து ஸாம்ப்பாவிடம் எல்.பி.ஆனார். அணியை 12/2 என்ற நிலையிலிருந்து அபாரமாக ஆடி 69 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்த மெண்டிஸும் ஸாம்ப்பாவிடம் எல்.பி.ஆனார். டி.எம்.டிசில்வா 7 ரன்களில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஸாம்ப்பாவிடம் வீழ்ந்தார்.
முன்னதாக தொடக்கத்தில் குணதிலக ஸ்டார்க்கிடம் பவுல்டு ஆனார். தில்ஷான் 10 ரன்கள் எடுத்து லயன் பந்தில் பவுல்டு ஆக இலங்கை 12/2 என்று திணறியது.
பிறகு மெண்டிஸ், சந்திமால், கேப்டன் மேத்யூஸ் (57), மற்றும் குசல் பெரேரா (54) ஆகியோரின் பங்களிப்புடன் ஸ்கோர் 288 ரன்களுக்கு உயர்ந்தது. கடைசி 5 விக்கெட்டுகளை இலங்கை 27 ரன்களுக்கு இழந்தது.
ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், பாக்னர், ஸாம்பா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். லயன் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
289 ரன்கள் வெற்றி இலக்கு இலங்கையின் ஸ்பின் பலத்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவால் சாதிக்கக் கூடியதா என்பது போகப்போகத் தெரியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT