Published : 29 Oct 2014 11:30 AM
Last Updated : 29 Oct 2014 11:30 AM
சென்னையில் நேற்று நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்)கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி.அணி 5-1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி அணியைத் தோற்கடித்தது. இதன்மூலம் 3-வது வெற்றியைப் பதிவு சென்னை அணி 9 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியது.
கடந்த வாரம் கனமழையில் நனைந்த சென்னை ரசிகர்கள் இந்த வாரம் சென்னை வீரர்களின் கோல் மழையில் நனைந்தனர்.
ஆரம்பம் முதலே சென்னையின் ஆதிக்கமே தொடர்ந்தது. ஆட்டம் தொடங்கியதுமே நூலிழையில் கோல் வாய்ப்பை தவறவிட்டார் சென்னை மிட்பீல்டர் இலானோ. இதையடுத்து 8-வது நிமிடத்தில் மும்பை வீரர் மானுவேல் பிரெட்ரிச், பெனால்டி ஏரியாவில் சென்னை வீரர் வேலன்சியாவை கீழே தள்ள, பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்து. அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய இலானோ கோலடித்தார்.
இதன்பிறகு 14-வது நிமிடத்தில் மும்பை ஸ்டிரைக்கர் நிகோலஸ் அனெல்காவுக்கு கோலடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும், சென்னை தடுப்பாட்டக்காரர்களின் தடுப்பைத் தாண்டி கோலடிக்க முடியவில்லை.
தொடர்ந்து வேகம் காட்டிய சென்னை அணி 26-வது நிமிடத்தில் 2-வது கோலை அடித்தது. இலானோ மைதானத்தின் நடுவில் இருந்து கொடுத்த அற்புதமான பாஸை பயன்படுத்தி இந்த கோலை அடித்தார் ஜீஜீ லால்பெக்குலா. 35-வது நிமிடத்தில் மும்பை ஸ்டிரைக்கர் அனெல்காவின் கோல் வாய்ப்பை அசத்தலாக தகர்த்தார் சென்னை கோல் கீப்பர் ஷில்டான்.
இதன்பிறகு 39-வது நிமிடத்தில் 29.9 மீ. தூரத்தில் இருந்து ப்ரீ கிக் வாய்ப்பில் அடித்த ஷாட்டை மும்பை கோலி சுப்ரதா பால் தடுத்தபோதும் அவருடைய கையில் இருந்து பந்து நழுவியது. அதற்குள் வேகமாக முன்னேறிச் சென்ற சென்னை வீரர் வேலன்சியா பந்தை கோல் வலைக்குள் தள்ளினார்.
இதன்பிறகு 44-வது நிமிடத்தில் எதிரணியின் பகுதியில் இருந்த சென்னை வீரர் ஹர்மோன் ஜித்திடம் பந்து செல்ல, அவர் அடித்த அதிவேக ஷாட்டை சரியாகக் கணித்த வேலன்சியா, மிக எளிதாக முன்னேறிச் சென்று கோலடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டத்திலேயே சென்னை 4-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் சென்னைக்கு மற்றொரு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைக்க, அதில் இலானோ தனது 2-வது கோலையும், அணியின் 5-வது கோலையும் அடித்தார். அதேநேரத்தில் ஆட்டம் முழுவதும் தடுமாறிய மும்பை அணிக்கு 87-வது நிமிடத்தில் ஆறுதல் கோல் கிடைத்தது. இந்த கோலை நபி அடித்தார். மொத்தத்தில் மும்பையின் ஆட்டம் சொதப்பலாக அமைந்தது.
கோலியான தோனி
சென்னையின் அணியின் உரிமையாளர்களான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் ஆகியோர் இந்தப் போட்டிக்கு வந்திருந்தனர். இடைவேளையின்போது களத்தில் இறங்கிய தோனி, கோல் கீப்பராக மாறினார்.
அப்போது சிலர் பந்தை கோல் கம்பத்தை நோக்கியடிக்க அவர் அசத்தலாக பிடிக்க, ரசிகர்களின் கூச்சலில் மைதானமே அதிர்ந்தது. கிரிக்கெட்டில் மட்டுமல்ல, கால்பந்திலும் தான் ஒரு சூப்பர் கீப்பர் என்பதை நிரூபித்தார் தோனி. தோனி கிரிக்கெட் விளையாடுவதற்கு முன்னதாக கால்பந்து விளையாடியிருக்கிறார். அங்கும் அவர் கோல் கீப்பர்தான் .
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT