Published : 02 Feb 2017 10:37 AM
Last Updated : 02 Feb 2017 10:37 AM
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப் பட்டுள்ளது. இதில் 4 அறிமுக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ளன. இந்த தொடரின் முதல் ஆட்டம் வரும் 17-ம் தேதி மெல்போர்னிலும், 2-வது ஆட்டம் 19-ம் தேதி விக்டோரியாவிலும், 3-வது ஆட்டம் 22-ம் தேதி அடிலெய்டிலும் நடைபெறுகிறது.
இந்த தொடருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆரோன் பின்ச் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில் அணியில் உள்ள மற்ற வீரர்களின் தேர்வு நேற்று நடை பெற்றது. அதிரடி வீரர் கிறிஸ் லினுக்கு வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது.
கிறிஸ் லின் பிக்பாஷ் டி 20 தொடரில் பிரின்பன் ஹீட் அணிக் காக விளையாடி உள்ளார். கழுத்து பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் அவதிப்பட்டு வரும் நிலையில் அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. போட்டி தொடங்க இருவார காலம் உள்ள தால் அதற்குள் அவர் முழு உடல் தகுதியை பெற்றுவிடுவார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
இந்திய டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டு ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் இந்த தொடரில் இடம்பெறவில்லை. மைக்கேல் லிங்கர், பில்லி ஸ்டான்லேக், ஜெஹி ரிச்சர்ட்சன், ஆஷ்டன் டர்னர் ஆகிய நான்கு புதுமுக வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தேர்வுக்குழு தலைவர் ஹான்ஸ் கூறும்போது, “அணியின் செயல் திறனை அதிகரிக்கும் வகையிலும், ஐசிசி-யின் டி 20 தரவரிசையில் முன்னேற்றம் காணும் வகையிலும் அனுபவம் மற்றும் இளம் வீரர்களை உள்ளடக்கிய அணியை இலங்கை அணிக்கு தொடருக்கு தேர்வு செய்துள்ளோம்.
பிக்பாஷ் டி20 தொடரில் வீரர்களின் செயல்பாடுகளை கருத் தில் கொண்டு அணி தேர்வு நடைபெற்றுள்ளது. தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்களின் ஆட்டம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் அவர்களின் தொடர்ச்சியான செயல்பாட்டையும் கவனத்தில் கொண்டோம்.
36 வயதான லிங்கர் டி 20 போட்டிகளில் மிகசிறந்த பேட்ஸ்மேனாக உள்ளார். லண்டன் மற்றும் பிக்பாஷ் தொடரில் தனது பெர்த் அணிக்காக பல்வேறு ஆட்டங்களில் வெற்றி தேடிக் கொடுத்துள்ளார். இம்முறை பட்டம் வென்ற பெர்த் அணியில் இவரது ஆட்டம் வெற்றிக்கு வழிவகுப்பதாக இருந்தது’’ என்றார்.
விக்கெட் கீப்பர் டிம் பெயினி யும் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். 32 வயதான டிம் பெயினி ஆஸ்திரேலிய அணிக்காக 4 டெஸ்ட், 26 ஒருநாள் போட்டி, ஐந்து டி 20 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். கடைசியாக அவர் 2011-ல் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார். தற்போது 6 வருடங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ளார்.
ஆஸ்திரேலிய அணி விவரம்:
ஆரான் பின்ச் (கேப்டன்), பேட்ரிக் கம்மின்ஸ், ஜேம்ஸ் பால்க்னர், டிரெவிஸ் ஹெட், மோயிஸ் ஹென்ட்ரிக்ஸ், மைக்கேல் லிங்கர், கிறிஸ் லின், டிம் பெயினி, ஜெஹி ரிச்சர்ட்சன், பில்லி ஸ்டான்லேக், அஷ்டன் டர்னர், ஆன்ட்ரூ டை, ஆடம் ஸம்பா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT