Published : 05 Aug 2016 06:01 PM
Last Updated : 05 Aug 2016 06:01 PM

தொடரை இழக்கும் தோல்வியின் பிடியில் ஆஸ்திரேலியா: 2-வது இன்னிங்சிலும் சரிவு

தொடர்ந்து ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிராக தாறுமாறாக தடுமாறி வரும் ஆஸ்திரேலிய அணி கால்லே டெஸ்ட் 2-ம் நாள் ஆட்ட முடிவில் 413 ரன்கள் இமாலய வெற்றி இலக்கை எதிர்கொண்டு 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 25 ரன்கள் என்று தோல்வியின் பிடியில் உள்ளது.

டேவிட் வார்னர் ஆக்ரோஷமான 18 பந்து 22 ரன்களிலும் கேப்டன் ஸ்மித் 1 ரன்னிலும் களத்தில் உள்ளனர். ஜோ பர்ன்ஸ் முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆனார், இம்முறை 2 ரன்கள் எடுத்து ஹெராத் பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்று கவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இரவுக்காவலனாக இறங்கிய நேதன் லயன் பெரேராவின் பந்தில் அருகிலேயே சில்வாவின் அருமையான கேட்ச்சிற்கு ரன் எடுக்காமல் வெளியேறினார்.

அடுத்த பந்தே உஸ்மான் கவாஜா ரன் எடுக்காமலேயே பெரேராவின் பந்தை ஆடாமல் விட்டு பவுல்டு ஆனார். ஒரே நாளில் ஒரே பவுலரிடம் ஒரே மாதிரியாக அவுட் ஆகி ‘அசத்தினார்’ கவாஜா. இந்த பலவந்த மீள்நிகழ்வுக்கு தான் தள்ளப்படுவது பற்றி கவாஜாவுக்கு மோசமான கனவுகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கு ஒரு பந்து ஸ்பின் ஆகுமா அல்லது ஆகாதா என்பதை கணிப்பதே கடினமாக இருக்கிறது, அதனால் முன்னால் வந்து ஆடுவதா, பின்னால் சென்று ஆடுவதா என்ற குழப்பத்தில் ஆடிவருகின்றனர். ஆனால் அவர்கள் பெரும்பாலும் முன்னாலும் வருவதில்லை பின்னாலும் செல்வதில்லை.

தாக்குதல் ஆட்டம் என்றால் ஸ்வீப் ஷாட் மட்டும்தான் அவர்கள் கைவசம் உள்ளது, ஸ்வீப் ஷாட் கத்தி மேல் நடப்பது போன்று, ஒவ்வொரு முறையும் மட்டையை பந்துட கனெக்ட் செய்து விட முடியாது, விட்டால் எல்.பி.தான், பந்து வெளியே பிட்ச் ஆகிறதா என்பதை கணிக்க வேண்டும் அத்தகைய பந்துகள் கூட உட்புறமாக திரும்பினால் ஸ்வீப் ஷாட் ஆடுவதில் பீட் ஆனால் எல்.பி. நிச்சயம்.

இன்று மொத்தம் 21 விக்கெட்டுகள் விழுந்துள்ளன. 2 நாள் ஆட்டத்தில் சுமார் 171 ஓவர்களில் 33 விக்கெட்டுகள் விழுந்துள்ளன என்றால் பிட்சின் தன்மையை புரிந்து கொள்ளலாம்.

ஆஸ்திரேலியாவை ஹாட்ரிக் சாதனை புரிந்த ஹெராத், பெரேரா ஆகியோர் 106 ரன்களுக்குச் சுருட்ட தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி உணவு இடைவேளைக்கு முன்னரே, சில்வா, கருணரத்னே, மெண்டிஸ் ஆகியோரை முறையே ஹேசில்வுட், ஸ்டார்க் ஆகியோரிடம் இழந்தது. எம்.டி.கே.ஜெ. பெரேரா ஆக்ரோஷமாக ஆடி 1 பவுண்டரி 1 சிக்சருடன் 38 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து லயன் பந்தில் பவுல்டு ஆனார். மேத்யூஸ் ஆக்ரோஷ அணுகுமுறை மேற்கொண்டார். 47 ரன்களில் அவர் 5 பவுண்டரிகள் அடித்து லயன் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று பவுல்டு ஆனார். முன்னதாக சந்திமால் மிட்செல் ஸ்டார்க்கின் 3-வது விக்கெட்டாக எட்ஜ் செய்து வெளியேறினார்.

பந்து வீச்சிலும் கலக்கி வரும் திலுருவன் பெரேரா 2-வது இன்னிங்சில் பேட்டிங்கிலும் கலக்கினார், இவர் 89 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்தார். ஹெராத் மீண்டு 26 ரன்கள் பங்களிப்பு செய்தார். இலங்கை தன் 2-வது இன்னிங்ஸில் 237 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்கு 413 ரன்கள்.

மிட்செல் ஸ்டார்க் 50 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது, ஆஸ்திரேலிய ஸ்பின்னர்களான நேதன் லயன் அறிமுக வீச்சாளர் ஜோன் ஹாலந்து ஆகியோருக்கு சாத்துமுறை.

ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 25 ரன்கள் எடுத்துள்ளது. இன்னொரு தொடர் தோல்வியை ஆஸ்திரேலியா தவிர்ப்பது கடினம் என்றே தெரிகிறது. காரணம் ஸ்பின்னுக்கு எதிராக மிகமிக பலவீனமான அணுகுமுறையைக் கொண்டுள்ளது ஆஸ்திரேலியா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x