Published : 05 Jun 2017 11:53 AM
Last Updated : 05 Jun 2017 11:53 AM

மோசமான பீல்டிங், கேப்டன்சி, பேட்டிங்...: பாகிஸ்தானின் ஒட்டுமொத்த பின்னடைவு

இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபியில் 124 ரன்கள் (டக்வொர்த் முறையில்) வித்தியாசத்தில் தோல்வியடைந்தது, அந்த அணியின் பேட்டிங், பவுலிங், பீல்டிங், கேப்டன்சி என்ற ஒட்டுமொத்த பின்னடைவினாலேயே.

முதலில் டாஸ் வென்று பேட் செய்ய வேண்டிய பிட்ச் என்று கங்குலி தனது பிட்ச் அறிக்கையில் கூறுகிறார், ஆனால் சர்பராஸ் அமகது டாஸ் வென்று பீல்டிங் என்கிறார். இது எப்படி?

ஜுனைத் கான் அணியில் இடம்பெறாதது பற்றி தகவல்கள் இல்லை. இந்திய அணியின் பேட்டிங் வரிசை திணறி வரும் வரிசையே. ஏனெனில் ரோஹித் சர்மா, ஷிகர் தவண் ஜோடி சுமார் 17 மாதங்களுக்குப் பிறகு ஒன்றாக தொடக்கத்தில் களமிறங்குகின்றனர். இதனால் முதல் ஓவரிலேயே ஆமிரிடம் ரோஹித் சர்மா வழிந்தது தெரிந்தது.

அடுத்த முனையிலும் வேகப்பந்து வீச்சை கொடுத்து வலுவான ஸ்லிப் பீல்டிங்கை வைத்து ஒரு நல்ல ஆஃப் ஸ்டம்ப் லைனில் போடச்செய்திருந்தால் ஷிகர் தவன், ரோஹித் சர்மா பேட்டிங் நெருக்கடிக்குள்ளாகி அவுட் கூட ஆகியிருக்கலாம்.

ஆனால் இடது கை ஸ்பின்னர் இமாத் வாசிமை புதிய பந்தில் அதுவும் 2-வது ஓவரில் கொண்டு வந்ததன் புதிர் என்ன என்பது புரியவில்லை, எந்த காலத்தில் இந்திய அணி இடது கை ஸ்பின்னரிடம் திணறியுள்ளது? விக்கெட்டுகளைக் கொடுத்துள்ளது? குறிப்பாக ஒருநாள் போட்டிகளில், எந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில் சர்பராஸ் இந்த முடிவை எடுத்தார்? தெரியவில்லை, அல்லது இந்த மாதிரி கேள்வியைக் கேட்கக் கூடாது. சரி, கொண்டு வந்தால் களவியூகம் நெருக்கமாக அமைய வேண்டமா? அதுவும் இல்லை. அதனால் ரோஹித், தவண் நிலைபெற்றனர். பாயிண்ட்டில் ஷெசாத்தை நிறுத்தியது பெரும் தவறு, அங்கு அவர் நின்று கொண்டிருந்தார் அவ்வளவே, மற்றபடி ஒன்றும் செய்யவில்லை.

இந்தியா, இமாத் வாசிமை வெகுசுலபமாக ஆடி வரும் நிலையில், இமாத் ஓவர்களை அவசரம் அவசரமாக முடித்து விடுவதிலேயே சர்பராஸ் குறியாயிருந்தது ஏன் என்பதற்கும் விடையில்லை. இமாத்தை இந்திய அணி அடித்தெல்லாம் நொறுக்கவில்லை. அவர் தன் முதல் 8 ஓவர்களில் 43 ரன்களையே கொடுத்தார், ஆனால் விக்கெட்டுகள் இல்லை. அவரால் ஒரு அச்சுறுத்தலும் இந்திய பேட்டிங்குக்கு ஏற்படவில்லை.

தவற விட்ட கேட்ச்கள்

இன்னிங்ஸில் திருப்பு முனை ஏற்படுத்திய யுவராஜ் சிங்குக்கு ஒரு எளிதான கேட்சையும், விராட் கோலிக்கு அதே போல் எளிதான கேட்ச்சையும் பாகிஸ்தான் கோட்டை விட்டது. இதனால் என்ன ஆனது, கேட்சை விட்ட பிறகு யுவராஜ் 24 பந்துகளில் 45 ரன்களையும் விராட் கோலி 12 பந்துகளில் 38 ரன்களையும் விளாசினர். கடைசி 6 ஓவர்களில் 89 ரன்கள் விளாசப்பட்டது.

பாகிஸ்தானின் புண்ணில் உப்பைத் தடவுவது போல் ஆமிர், வஹாப் ரியாஸ் இருவருமே காயமடைந்து பந்து வீச முடியாமல் போனது, 8.4 ஓவர்களில் வஹாப் ரியாஸ் 87 ரன்களை வாரி வழங்கினார், இதோடு ஒருநாள் போட்டிகளில் 4-வது முறையாக அவர் 80 ரன்களுக்கும் மேல் வழங்குகிறார். லஸிமலிங்கா 7 முறை 80க்கும் மேல வழங்கியுள்ளார். மொகமது ஆமிர் 8.1 ஓவர்கள் 32 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அவரும் காயமடைந்தது பெரும் பின்னடைவாகப் போனது. பொதுவாகவே பேட்ஸ்மெனின் லெக் ஸ்டம்பை குறிவைத்து வஹாப் வீசுவது அவரை இந்த ஒருநாள் போட்டிகளுக்கு லாயக்கற்ற ஒரு பவுலராக மாற்றிவிட்டது. 2015 உலகக்கோப்பையில் ஆஸி.க்கு எதிராக வீசிய வஹாப் ரியாஸா இது என்பது போல் வீசினார்.

தடுமாறும் இந்திய பேட்டிங் வரிசைக்கு தொடர்ந்து இலவசப் பந்துகளை வஹாப் ரியாஸ் தலைமையில் பாகிஸ்தான் அணி கேப்டனின் உதவியோடு வாரி வழங்கியதுதான் நடந்தது. 24.3 ஓவர்களில் ரோஹித், தவண் 136 ரன்களை சேர்த்தது நல்ல அடித்தளமாக மாறியது, இது இந்திய பேட்டிங்கினால் அல்ல மாறாக பாகிஸ்தானின் சொதப்பலான பீல்டிங் மற்றும் கேப்டன்சியினால் தான்.

25-வது ஓவரிலிருந்து 35-வது ஓவர் வரையிலும் விராட் கோலி, ரோஹித் சர்மா மந்தமாகவே ஆட முடிந்தது. 138/1 என்பதிலிருந்து 35-வது ஓவர் முடிவில் 176/1 என்ற அளவே ரன் இருந்தது. அதன் பிறகு கேட்ச்கள் கோட்டை விடல், மிஸ் பீல்டிங், மோசமான பந்து வீச்சு, தவறான களவியூகம், ஆமிர், வஹாப் இல்லாதது எல்லாம் சேர்ந்து ஷாட்கள் அடிக்கத் திணறிய, தயங்கிய விராட் கோலியை வீறு கொண்டு எழச்செய்தது.

யுவராஜ் சிங்கும், கேட்ச் விட்டதை சரியாகப் பயன்படுத்தி சில பிரம்மிக்கதக்க ஷாட்களை ஆடினார். கடைசி 48-வது ஓவரை இமாத் வாசிம் வீசினார். ஹர்திக் பாண்டியா அவரை கேட்டுக் கேட்டு சிக்ஸர்களை அடிக்க, அவ்வளவுதான் 319 ரன்கள் எனும்போதே ஆட்டம் இங்கேயே முடிந்து விட்டது. காரணம் பாகிஸ்தான் பேட்டிங் மிகமிக பலவீனமானது. அதுவும் வலுவான இந்தியப் பந்து வீச்சுக்கு எதிராக பாகிஸ்தான் எவ்வள்வு அடிக்கின்றனர் என்பதைப் பார்க்கும் வெறும் ஆவலாக முடிந்ததே தவிர இந்திய வெற்றி அப்போதே உறுதியாகிவிட்டது.

பாகிஸ்தான் பேட்டிங் அசார் அலி, பாபர் ஆஸமைச் சுற்றியே இருந்து வருகிறது. இதில் அசார் அலி 50 ரன்கள் எடுத்தார், ஆனால் பாபர் ஆஸம் 8 ரன்களில் ஜடேஜா, உமேஷ் இணையிடம் வீழ்ந்தார். ஹபீஸ் 33 ரன்கள் எடுத்தார். மேலும் கடைசி 13 போட்டிகளில் பாகிஸ்தான் அணி எதிரணிக்கு 250 ரன்களுக்கும் மேல் விட்டுக்கொடுத்த போட்டிகளில் குறிப்பாக டாப் 8 அணிகளுக்கு எதிராக ஒருமுறையே வெற்றி பெற்றுள்ளது. மழைதான் காப்பாற்ற வேண்டும் என்ற பரிதாப நிலையில் பாகிஸ்தான் மாட்டிக் கொள்ள, மழையும் கைவிட்டது.

இந்திய அணியும் பீல்டிங்கில் சொதப்பியது. 2 கேட்ச்களை விட்டது, 2 ரன் அவுட் வாய்ப்புகளை நழுவ விட்டது. சில மிஸ்பீல்டிங்குகளும் இருந்தது. அசார் அலி, அகமது ஷெசாத், ஹபீஸ் ஆகியோரை தவிர மற்ற பேட்ஸ்மென்கள் 20 பந்துகளைக் கூட சந்திக்கவில்லை எனும்போது அந்த பேட்டிங்கைப் பற்றி அலச என்ன இருக்கிறது? மொத்தத்தில் பரிதாபமான ஒரு தோல்வியை பாகிஸ்தான் சந்தித்துள்ளது எனும் அதே வேளையில் பாகிஸ்தானை வென்றுவிட்டதனாலேயே இந்திய அணியின் பேட்டிங் பிரச்சினைகள் முடிவுக்கு வந்து விட்டது என்று கூறுவதற்கும் இல்லை.

இந்த வெற்றியை ஒரு மாடல் வெற்றியாகக் கொண்டு குதூகலமடையவும் ஏதுமில்லை. ஏனெனில் மற்ற அணிகள் நிச்சயம் இவ்வளவு மோசமாக ஆடாது. எனவே இந்திய அணிக்கு இந்த வெற்றி ஒரு எச்சரிக்கையே தவிர உத்வேகமல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x