Published : 20 Jun 2015 09:52 AM
Last Updated : 20 Jun 2015 09:52 AM
சிலியில் நடைபெற்று வரும் தென் அமெரிக்காவின் புகழ்பெற்ற கால்பந்து போட்டியான கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பெரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெனிசுலாவைத் தோற்கடித்தது.
முதல் ஆட்டத்தில் பிரேசிலிடம் தோல்வி கண்ட பெரு அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் காலிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.
சிலியின் வால்பேரட்சோ நகரில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் பந்தை வசப்படுத்துவதற்காக வெனிசுலாவின் பின்கள வீரர் பெர்னாண்டோ அமோர்பீட்டாவும், பெருவின் பாவ்லோ கெர்ரோவும் போராடினர்.
அப்போது பெர்னாண்டோ, கெர்ரோவை பிடித்து இழுத்து கீழே தள்ளினார். இதையடுத்து அவருக்கு நடுவர் ரெட் கார்டு கொடுக்க, வெனிசுலா 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் முதல் பாதி ஆட்டத்தில் கோல் எதையும் விட்டுக்கொடுக்கவில்லை.
தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 72-வது நிமிடத்தில் பெரு மிட்பீல்டர் கிறிஸ்டியான் கியூ பெனால்டி பாக்ஸுக்கு பந்தை கடத்த, அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பெரு கேப்டன் கிளாடியோ பிஸாரோ, அதிவேகமாக கோல் கம்பத்தை நோக்கி பந்தை உதைத்தார்.
அது கோல் கம்பத்தின் மேல் பகுதி வழியாக கோல் வலைக்குள் நுழைந்து கோலானது. பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில் பெரு 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
சி பிரிவில் இடம்பெற்றுள்ள பிரேசில், பெரு, வெனிசுலா, கொலம்பியா ஆகிய 4 அணி களும் தலா 3 புள்ளிகளுடன் உள்ளன. தற்போதைய நிலையில் 4 அணிகளுக்குமே காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.
அடுத்த சுற்று ஆட்டங்களின் வெற்றியைப் பொறுத்தே காலிறுதி வாய்ப்பு இறுதி செய்யப்படும். வரும் ஞாயிற்றுக்கிழமை நடை பெறும் கடைசி லீக் ஆட்டத்தில் பெரு, கொலம்பியாவைச் சந்திக் கிறது. பிரேசில், வெனிசுலாவுடன் மோதுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT