Published : 27 Sep 2013 02:34 PM
Last Updated : 27 Sep 2013 02:34 PM
மூத்த வீரர்களான ஷோயிப் மாலிக், அப்துல் ரசாக் ஆகியோருடன் இணைந்து விளையாடுவதில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று பாகிஸ்தான் இருபது ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் முகமது ஹபீஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்ட அப்துல் ரசாக், தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார். சமீபத்தில் ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் படுதோல்வி கண்ட நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணி வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்படவுள்ளது. ஷோயிப் மாலிக்கும் அப்துல் ரசாக்கும் மீண்டும் அணியில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஹபீஸ் மேலும் கூறியிருப்பதாவது: தேர்வுக் குழுவினருக்கும், அவர்கள் தேர்வு செய்யும் அணிக்கும் நான் மரியாதை அளிப்பவன் என்பதை எல்லா நேரங்களிலும் கூறியிருக்கிறேன். கேப்டன் என்ற முறையில் எனக்கு கொடுக்கப்பட்ட அணியில் இருந்து சிறந்த வீரர்களை ஆடும் லெவனுக்கு தேர்வு செய்வேன். அதனால்தான் பாகிஸ்தான் அணி டி20 தரவரிசையில் 9-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்றார்.
ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரில் மோசமாக விளையாடிய பாகிஸ்தானின் முன்னணி வீரர்கள், அக்டோபர் 14-ல் தொடங்கவுள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்படமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அது குறித்துப் பேசிய முகமது ஹபீஸ், “நான் அணியில் இருந்து நீக்கப்பட்டால், அதை ஏற்றுக்கொள்வதற்கு மனரீதி யாக தயாராகிவிட்டேன். நான் நீக்கப்பட்டால் பணிவோடு ஏற்றுக்கொள்வேன். என்னை சேர்க்கவில்லை என புகார் கூறமாட்டேன். அணியில் இருந்து நீக்கப்படுவது என்பது எல்லா வீரர்களுடைய வாழ்க்கையிலும் நடக்கக்கூடியதுதான். எனவே யாராக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு அணியில் மீண்டும் இடம்பிடிக்க கடுமையாக உழைக்க வேண்டும். நான் மீண்டும் அணிக்குத் திரும்பவும், டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னை நிலைநாட்டவும் எனக்கு ஒரு பெரிய இன்னிங்ஸ் தேவைப்படுகிறது என நம்புகிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment