Published : 09 Dec 2013 12:00 AM
Last Updated : 09 Dec 2013 12:00 AM
ஊரகப் பகுதியில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களுக்கும் பிரகாசமான எதிர்காலம் உள்ளது என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், கர்நாடக கிரிக்கெட் சங்க செயற்குழு உறுப்பினருமான ரகுராம் பட் தெரிவித்தார்.
1980-ல் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக விளையாடிய இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ரகுராம் பட், தற்போது கர்நாடக கிரிக்கெட் சங்க செயற்குழு உறுப்பினராக உள்ளார். ஞாயிற்றுக்கிழமையன்று உதகை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
இந்தியாவில் கிரிக்கெட்டைப்போல் பிற விளையாட்டுகளும் பிரபலமாகி வருகின்றன. கிரிக்கெட் மீதான மோகத்தால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை கிரிக்கெட் விளையாடுமாறு வற்புறுத்தக்கூடாது. இதனால் குழந்தைகள் மன அழுத்தத்துக்கு உள்ளாகி எதிர்காலத்தை தொலைத்து விடுவார்கள். விளையாட்டில் ஆர்வம் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும்.
ஒரு காலத்தில் பணக்காரர்களின் விளையாட்டாக இருந்த கிரிக்கெட்டில் இப்போது சாமானியர்களும் சாதிக்க முடியும் என்பதை தற்போது அணியில் உள்ள வீரர்கள் நிரூபித்துள்ளனர். ஊரகப் பகுதியிலும் திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர். அவர்கள் தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர். திறமை எங்கிருந்தாலும் அது நிச்சயம் அங்கீகரிக்கப்படும்.
இருபது ஓவர் போட்டியின் வருகையால் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளை மக்கள் புறந்தள்ளி விடுவார்கள் என கூறப்பட்டது. ஆனால் இன்று டெஸ்ட் போட்டிகளையும் மக்கள் விரும்பி பார்க்கின்றனர். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளைக் காணவும் ரசிகர்கள் மைதானத்திற்கு வருகிறார்கள் என்றார்.
கிரிக்கெட்டில் சூதாட்ட புகார் எழுவது குறித்து கேட்ட போது, “சூதாட்டத்தில் தனி நபர்களே ஈடுபடுகின்றனர். இதனால் அவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள். சூதாட்டத்தால் கிரிக்கெட்டை அழிக்க முடியாது. ஐ.பி.எல். போட்டிகளால் பல வீரர்களுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதோடு நல்ல ஊதியமும் கிடைக்கிறது. எனவே ஐ.பி.எல். போட்டி தொடரும்” என்றார்.
சமீபத்தில் வில்வித்தை வீராங்கனைகள் வெற்றி பெற்று திரும்பியபோது வில்வித்தை சங்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் போதுமான வரவேற்பு அளிக்க வில்லையே என கேட்டதற்கு, எல்லோரும் நாட்டுக்காக விளையாடுகின்றனர். அவர்களுக்கான அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும். வில்வித்தை வீராங்கனைகளை வரவேற்காதது பெரும் தவறு” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT