Published : 07 Jun 2016 03:10 PM
Last Updated : 07 Jun 2016 03:10 PM
கோப்பா அமெரிக்கா பிரிவு டி கால்பந்து போட்டியில் அர்ஜெண்டீனா அணி சிலியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தங்களது கணக்கைத் தொடங்கியது.
ஆட்ட நாயகன் ஆஞ்செல் டி மரியா, கொன்சாலோ ஹிகுவெய்ன், எவர் பனேகா ஆகிய வீரர்கள் அர்ஜெண்டீன அணியின் தாக்குதல் ஆட்ட சுமையை சுமந்து அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றனர். மெஸ்ஸி காயத்திலிருந்து குணமடைந்து கொண்டிருப்பதால் இந்தப் போட்டியில் ஆடவில்லை. அடுத்த போட்டியில் ஆடுவார் என்று கூறப்படுகிறது.
மெஸ்ஸிக்குப் பதிலாக ஆடிய நிகலஸ் கெய்டன், டி மரியாவுடன் இணைந்து சக்தி வாய்ந்த கூட்டணி அமைத்தனர். ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே டி மரியாவின் கிராஸை கெய்டன் தலையால் கோலை நோக்கி அடிக்க அது மேல் பாரைத் தாக்கியது. 8-வது நிமிடத்திலும் கெய்டன், டிமரியா கூட்டணி கோல் நோக்கி அச்சுறுத்தல் மேற்கொண்டது.
ஆனால் டி மரியா, பனேகா இருவரது கோல்களும்தான் அர்ஜெண்டினாவுக்கு வெற்றி தேடித் தந்தது. ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் பனேகா அடித்த பந்தை எடுத்த டி மரியா அதனை கோலாக மாற்றினார். சிலி கோல் கீப்பர் கிளாடியோ பிரேவோ இன்னும் கொஞ்சம் முயன்று தடுக்க முனைப்பு காட்டியிருக்கலாம். டி மரியாவின் பாட்டி சில மணிநேரங்களுக்கு முன்னர்தான் உலகை விட்டு பிரிந்தார். அவருக்கு அர்ப்பணிப்பு செய்யும் விதமாக டி மரியா இந்த கோலை அடித்தவுடன் சில செய்கைகளைச் செய்தார், பிற்பாடு ஆட்டம் முடிந்த பிறகான நேர்காணலில் டி மரியா தன் பாட்டிக்காக கண்ணீர் சிந்தினார்.
முதல் கோலுக்கு 6 நிமிடங்கள் கழித்து நடுக்களத்தில் பந்தை அற்புதமாகச் சேகரித்த டி மரியா, சிலி தடுப்பாட்ட வீரர்களை கடந்து பனேகாவிடம் பந்தை தள்ளி விட்டார், பனேகா அதனை கோலாக மாற்றினார். ஆனால் இது சிலி வீரர் இஸ்லாவின் காலில் பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.
சிலியை பொறுத்தவரை முதல் பாதியில் 25-வது நிமிடத்தில் பனேகா ஏறக்குறைய சிலிக்கு ஒரு கோலை விட்டு கொடுத்திருப்பார். ஆனால் ரமிரோ மோரி சரியான தருணத்தில் வந்து தடுத்து காப்பாற்றினார்.
இதற்கு 5 நிமிடங்கள் கழித்து பனேகா மீண்டும் ஒரு பெரிய தவறிழைக்க, அதாவது மோசமான பாஸ் ஒன்றை ஆட அதனை சிலி வீரர் மார்செலோ டயஸ் பந்தை எடுத்து சிலபல விரைவு கதி பாஸ்களுக்குப் பிறகு அலெக்சிஸ் சான்சேஸ் கோல் அடிக்க வாய்ப்பு பெற்றார், ஆனால் அவரது ஷாட்டை அர்ஜெண்டின கோல் கீப்பர் செர்ஜியோ ரொமீரோ தடுத்தார். இந்தத் தடுப்பு திருப்பு முனையாக அமைந்தது. அதே போல் இடைவேளைக்குப் பிறகு சிலி வீரர் கொன்சாலோ ஜராவின் தலையால் ஆடிய ஷாட் கோல் போஸ்டின் மேல் பகுதியைத் தாக்கியது.
93-வது நிமிடத்தில்தான் சிலி வீரர் ஜோஸ் பெட்ரோ ஒரு கோலை அடித்தார். இதிலும் ரொமீரோ தன்னை சரியாக நிறுத்திக் கொள்ளாததால், கோல் இடம் காலியாக இருந்தது. ஃப்ரீ கிக் ஒன்றை பதிலி வீரர் ஜோஸ் பெட்ரோ தலையால் முட்டி கோலை அடித்தார். ஆனால் இது ஆறுதல் கோலாகவே அமைந்தது.
இதே பிரிவில் மற்றொரு ஆட்டத்தில் பனாமா அணி பொலிவியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அர்ஜெண்டீனாவுக்கு கடினமான குரூப் பிரிவு போட்டி சாதகமான வெற்றியுடன் முடிந்திருப்பதால், பொலிவியா, பனாமா அணிகளுக்கு எதிரான ஆட்டமும் அர்ஜெண்டினாவுக்கு சாதகமாகவே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே போல் சிலி அணியும் பனாமா, பொலிவியா அணிகளை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேற பார்க்கும் என்று கூறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT