Published : 18 Jul 2016 02:48 PM
Last Updated : 18 Jul 2016 02:48 PM

1996-க்குப் பிறகு லார்ட்ஸில் பாகிஸ்தான் வெற்றி; யாசிர் ஷாவிடம் மடிந்த இங்கிலாந்து

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை 75 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. வெற்றி பெற 283 ரன்கள் தேவை என்ற நிலையில் இங்கிலாந்து தன் 2-வது இன்னிங்சில் 207 ரன்களுக்குச் சுருண்டது.

1996-ம் ஆண்டு லார்ட்ஸில் வக்கார் யூனிஸும் முஷ்டாக் அகமதும் பாகிஸ்தானை ஒரு அரிய வெற்றிக்கு இட்டுச் சென்ற பிறகு தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு வெற்றியில் லெக்ஸ்பின்னர் யாசிர் ஷா சாதித்துள்ளார்.

முன்னதாக பாகிஸ்தான் தன் இரண்டாவது இன்னிங்சில் 215 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பேட்டிங்கிலும் யாசிர் ஷா அருமையாக ஆடி 30 ரன்கள் எடுத்து முக்கியப் பங்களிப்பு மேற்கொண்டார். இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளையும் 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி யாசிர் ஷா 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே இங்கிலாந்துக்கு ‘ஆப்பு’ வைத்தது. ஆனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் இல்லாததுமே இங்கிலாந்துக்கு ஒரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது, இங்கிலாந்தின் நடுவரிசை பலவீனமானது என்று துல்லியமாகக் கணித்த பாகிஸ்தான் அதனை நிரூபித்தும் காட்டியது.

இரு அணிகளும் அருமையான உணர்வுடன் ஆடிய ஒரு அருமையான டெஸ்ட் போட்டி. அதுவும் கடைசி விக்கெட்டாக ஜேக் பால் விக்கெட்டை மொகமது ஆமிர் வீழ்த்தியது 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்துள்ள அவருக்கு ஒரு உணர்ச்சிகரமான தருணமாக அமைந்தது.

இங்கிலாந்து அணி தொடக்கத்தில் 3 ஓவர்களில் 19 ரன்கள் எடுத்த நிலையில் ரஹத் அலியின் பந்து குக் மட்டை விளிம்பின் மீது மோகம் கொண்டு தொட்டுச் சென்றது. 8 ரன்களில் குக் அவுட். அலெக்ஸ் ஹேல்ஸ் 3 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் எடுத்த நிலையில் ரஹத் அலி பந்தை கட் செய்ய முயன்றதால் ஏற்பட்ட எட்ஜில் மொகமது ஹபீஸிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். ஜோ ரூட் 9 ரன்களில் ரஹாத் அலியின் பந்தை புல் ஆட அது டாப் எட்ஜ் ஆகி யாசிர் ஷாவிடம் கேட்ச் ஆனது. இங்கிலாந்து 47/3 என்று ஆனது.

இம்முறை விமர்சிக்கப்பட்ட மிடில் ஆர்டர் போராடியது. வின்ஸ்(42), கேரி பேலன்ஸ் (43), ஜானி பேர்ஸ்டோ (48) ஆகியோர் போராடி நல்ல தொடக்கம் கண்டு பிறகு கைவிட்டனர். வின்ஸுக்கு 9 ரன்களில் யூனிஸ் கான் கேட்ச் ஒன்றைக் கோட்டை விட்டார். வஹாப் ரியாஸ் அருமையான ரிவர்ஸ் ஸ்விங் பந்துகளையும் வலது கை பேட்ஸ்மென்களுக்கு விலகிச்செல்லும் பந்துகளையும் அருமையாக வீசிக் கொண்டிருந்தார், அவரது பந்தில்தான் வின்ஸ், யூனிஸ்கானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பேலன்ஸ் நன்றாக திரும்பிய யாசிர் ஷா பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார், அடுத்த பந்து சற்றே ஃபுல் லெந்த். பிளிக் செய்ய முயன்று பீட் ஆகி பவுல்டு ஆனார். மொயீன் அலி நீண்ட நேரம் நீடிக்கவில்லை, யாசிர் ஷாவை அடிக்க முயன்றார் பந்து பேட்டுக்கும், கால்காப்புக்கும் இடையில் பகுந்து மிடில் ஸ்டம்பின் மேல் பகுதியை தாக்கியது. 139/6 என்ற நிலையில் பாகிஸ்தானுக்கு வெற்றி நம்பிக்கை கூடியது. பிறகு பேர்ஸ்டோவையும் யாசிர் ஷா பவுல்டு செய்தார். இந்த ஆட்டத்தின் இங்கிலாந்தின் சிறந்த ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் 23 ரன்கள் எடுத்திருந்த போது யாசிர் ஷாவின் 4-வது விக்கெட்டாக வெளியேறினார். பிராட், பால் ஆகியோர் மொகமது ஆமிரிடம் பவுல்டு ஆக இங்கிலாந்து 207 ரன்களுக்குச் சுருண்டு தோல்வி தழுவியது.

மிக்கி ஆர்தர் பயிற்சியில் முதல் டெஸ்ட் வெற்றியை பாகிஸ்தான் ருசித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x