Published : 11 Apr 2016 04:51 PM
Last Updated : 11 Apr 2016 04:51 PM

ஐபிஎல் வர்ணனையிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கவில்லை: ஹர்ஷா போக்ளே

கிரிக்கெட் வர்ணனை என்றாலே தவிர்க்க முடியாத ஒரு குரல் ஹர்ஷா போக்ளேயுடையது, ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் வர்ணனை குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

2008-ம் ஆண்டு தொடக்க ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முதல் ஹர்ஷா போக்ளே தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட்டை தனது உற்சாகமான வர்ணனையின் மூலம் மதிப்புக் கூட்டியுள்ளார் என்பது வர்ணனையை உன்னிப்பாக கவனிக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு ஒருவாரம் முன்னதாக ஹர்ஷா போக்ளேயின் ஐபிஎல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இவருக்கான விமான டிக்கெட்டுகளைக் கூட ஒளிபரப்பு நிறுவனம் முடிவு செய்து விட்ட நிலையில் இந்த திடீர் ஒப்பந்த ரத்து நிகழ்ந்துள்ளது.

சோனி தொலைக்காட்சி நிறுவனம் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைகளைப் பெற்றிருந்தாலும், பிசிசிஐ கட்டுப்பாட்டில்தான் பல விஷயங்கள் முடிவாகின்றன என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திடீரென போக்ளே நீக்கப்பட்டதற்கான காரணத்தை பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர், அல்லது ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா ஆகியோர் கூட இதுவரை தெரிவிக்கவில்லை.

ஆனால் இது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பெயர் கூற விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, “வர்ணனையாளர்களைத் தீர்மானிப்பதில் நாங்கள் ஒவ்வொருவரின் ஆலோசனையையும் பெறுவோம். சமூக வலைத்தளங்களைப் பார்ப்போம், அதில் வர்ணனையாளர்கள் பற்றி என்னென்ன பின்னூட்டங்கள் இடப்படுகின்றன என்பதையும் பார்ப்போம். மேலும் வீரர்களிடமிருந்தும் கருத்துகள் கேட்போம்” என்றார்.

ஆனால், உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியின் போது விதர்பா கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவரிடம் ஹர்ஷா போக்ளே கடுமையான வாக்குவாதம் புரிந்ததே கடைசி நிமிடத்தில் ஐபிஎல் வர்ணனை ஒப்பந்தம் அவருக்கு ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்று பிசிசிஐ-யில் ஒருசிலர் தெரிவிப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று தனது செய்தியில் தெரிவித்தது.

இந்நிலையில் தனது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் பற்றி போக்ளே தெரிவிக்கையில், “ஒருவரும் என்னிடம் எந்த வித காரணங்களையும் கூறவில்லை. இது பிசிசிஐ முடிவு என்பது மட்டும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

ஹர்ஷா போக்ளே மீதான இந்த திடீர் முடிவின் பின்னணி:

உலகக்கோப்பை டி20 போட்டித் தொடரின் போது இந்திய வர்ணனையாளர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் தீவிரமாக உரையாடலில் ஈடுபட்டனர். இதில் வங்கதேசத்துக்கு எதிரான 1 ரன் வெற்றி குறித்து அமிதாப் பச்சன் தனது ட்விட்டரில், “அனைத்து மரியாதையுடன் நான் கூற விரும்புவது என்னவெனில், இந்திய வர்ணனையாளர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பற்றி அதிகம் பேச வேண்டும், எப்போதும் அயல்நாட்டு வீரர்களைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பது சரியல்ல” என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து ட்விட்டரில் அமிதாபை பின் தொடர்பவர்கள், யார் அந்த வர்ணனையாளர் என்று கேட்டு துளைத்தெடுக்க, அதற்கு அமிதாப், நான் சுனில் கவாஸ்கரையோ, மஞ்சுரேக்கரையோ குறிப்பிடவில்லை என்று ட்வீட் செய்தார். இதனால் ஹர்ஷா போக்ளேயைத்தான் அமிதாப் குறிப்பிடுகிறார் என்ற பரவலான எண்ணம் எழுந்தது.

இதனையடுத்து போக்ளே தனது பேஸ்புக் பதிவில் தெளிவுபடுத்தும் போது, “ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 என்பது உலகம் முழுதும் பார்க்கக் கூடிய ஒரு சேனல். உலகம் முழுதும் உள்ள கிரிக்கெட் பார்வையாளர்களைச் சென்றடையவது இது. வங்கதேசம், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என்று அனைத்து நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.

எனவே ஒரு ஒளிபரப்பு என்பது நடுநிலையுடன், புறவயமாக பாரபட்சமின்றி நிகழ்வுகளை வர்ணிப்பது அவசியம். எனவே வர்ணனையை இந்திய கிரிக்கெட் வீரர்கள் மையமாக எடுத்துச் சென்றால் மற்ற அணி வீரர்களையும் அதே நேசத்துடன் பார்க்கும் மற்ற நாட்டு ரசிகர்களின் கிரிக்கெட் ரசனைக்கு நியாயம் செய்வதாகாது. உதாரணமாக வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியைப் பற்றி மட்டும் பேசிக்கொண்டிருந்தால் வங்கதேசத்தில் உள்ள பார்வையாளர்களுக்கு நாம் பின்னடைவு ஏற்படுத்துவதாகவே பொருள்” என்று வங்கதேச போட்டி முடிந்தவுடன் அவர் எழுதியிருந்தார்.

ஆனால், தற்போது இவரது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதற்கான முக்கிய நிகழ்வாகக் கூறப்படும் விதர்பா கிரிக்கெட் சங்க அதிகாரியுடனான வாக்குவாதம் குறித்து ஹர்ஷா போக்ளே கூறும்போது, இந்தி வர்ணனையாளர்களுக்கான இடமும் ஆங்கில வர்ணனையாளர்களுக்கான இடமும் தொடர்பின்றி துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் இருமொழிகளிலும் வர்ணனை செய்ய வேண்டியவர்கள் ஏகப்பட்ட படிகளை இறங்கி ஏற வேண்டிய நிலை இருந்தது. இதனை எதிர்த்தேன் என்றார்.

இந்த விவகாரம் பிசிசிஐ தலைவர் ஷஷான்க் மனோகருக்கு தெரிவிக்கப்பட்டிருக்கலாம் இதனையடுத்தே ஹர்ஷா போக்ளே ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்று ஊடக வட்டாரங்கள் பேசத் தொடங்கியுள்ளன. “நாக்பூர் சம்பவம்தான் காரணம் என்றாலும், அதில் கூட என் தரப்பை ஒருவரும் கேட்கவில்லையே” என்கிறார் போக்ளே.

பொதுவாகவே பிசிசிஐ, இந்திய வீரர்களை புகழ்ந்து பேசும் வர்ணனையாளர்களையே அதிகம் விரும்பும் என்பது ஒன்றும் புதிதான செய்தியல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x