Published : 10 Aug 2016 02:51 PM
Last Updated : 10 Aug 2016 02:51 PM

அணித்தேர்வுக்கு முரளி விஜய் தயாராகவே இருந்தார்; ஷிகர் தவண் தேர்வு நிர்வாக முடிவு: சஞ்சய் பாங்கர்

செயிண்ட் லூசியா டெஸ்ட் போட்டியில் முரளி விஜய் அணித்தேர்வுக்கு உடல் தகுதி அளவில் தயாராக இருந்தும் தேர்வு செய்யப்படாதது அணி நிர்வாகத்தின் முடிவு என்று பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்தார்.

புஜாராவை உட்கார வைத்ததை புரிந்து கொள்ள முடிகிறது என்றால் விஜய்யை உட்கார வைத்தது பெரிய தவறாக நேற்று முடிந்தது, கோலியும் பவுன்சரில் வெளியேற திடீரென இந்திய பேட்டிங் 200 ரன்களுக்குள் ஆல் அவுட் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. பிறகு அஸ்வின், சஹாவின் உறுதியினால் தப்பித்தது. புஜாரா 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடி ஓரளவுக்கு அந்த பிட்ச், பவுலிங் தன்மைகள் மீதான புரிதலை எட்டியிருக்கும் வேளையில் அவரை உட்கார வைத்தது சரியல்ல என்று தற்போது உணரப்படுவதாகத் தெரிகிறது.

அதே போல் சீரான முறையில் ரன் எடுப்பதில் தொடர்ந்து தோல்வி அடைந்து வரும் ஷிகர் தவணை தக்க வைத்ததும் தற்போது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. அதுவும் அவர் லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தில் அவுட் ஆன விதம் அணியில் அவரது இடம் பற்றிய கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது.

மேலும் புதிராக, ரோஹித் சர்மாவை திடீரென தேர்வு செய்தது எப்படி என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. அவர் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார் என்ற கேள்வி அனைவரையும் உறுத்தும் ஒன்றாகும்.

ஏனெனில் அவர் கடைசியாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெல்லியில் 2015 டிசம்பரில் ஆடிய போது 6-ம் நிலையில் இறங்கி முதல் பந்தில் ஸ்லிப்பில் அவருக்கு கேட்ச் விடப்பட்டது, ஆனால் அவரோ அடுத்த பந்தே டேன் பியட்டை தூக்கி அடித்து லாங் ஆனில் கேட்ச் கொடுத்தார். 1 ரன்னில் அவுட். அடுத்த இன்னிங்ஸில் 3-ம் நிலைக்கு உயர்த்தப்பட்டார், ஆனால் முதல் பந்திலேயே மோர்னி மோர்கெல் பந்தில் பவுல்டு ஆனார். எந்த தகுதியின் அடிப்படையில் அவர் புஜாராவை விட உயர்ந்த பேட்ஸ்மென் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

நேற்றும் ரோஹித் சர்மா, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தில் எட்ஜ் செய்து 9 ரன்களில் வெளியேறினார். பெரிய பந்து ஒன்றுமில்லை, ஆனால் பவுலர்களுக்கு ரோஹித் சர்மா பேட் முழுதும் எட்ஜ் உள்ளது தெரிந்துள்ளது என்றே கூற வேண்டும்.

ஆனால் முரளி விஜய் தேர்வுக்குத் தயாராக இருந்த போது அவரை உட்கார வைத்தது பற்றி பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறும்போது, “முரளி விஜய் தேர்வுக்கு தயாராகவே இருந்தார், ஆனால் ஷிகர் தவண் ஆடட்டும் என்பது நிர்வாகத்தின் முடிவு. முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு நல்ல 84 ரன்களை அவர் எடுத்தார். ஆண்டிகுவாவில் நல்ல தொடக்கம் கொடுத்தார். கோலியுடன் ஒரு சதக்கூட்டணியும் அமைக்க பங்களிப்பு செய்தார், இதுதான் விஜய் ஆடும் 11-க்குள் வர முடியாததற்குக் காரணம்.

ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர், புஜாராவும் நன்றாகவே ஆடினார், ஆனால் அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டியுள்ளது” என்றார்.

ஆனால் இத்தகைய முடிவு முரளி விஜய், புஜாரா மனதில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அணி நிர்வாகம் யோசிக்குமா என்று தெரியவில்லை. அதே போல் ஸ்திரமடைந்து வரும் ஒரு பேட்டிங் வரிசையை இத்தகைய முடிவுகள் எப்படி கலைத்துப் போடும் என்பதையும் அணி நிர்வாகம் யோசித்ததாகத் தெரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x