Published : 08 Sep 2016 03:14 PM
Last Updated : 08 Sep 2016 03:14 PM

டி20 போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி

ஓல்ட் டிராபர்டில் நேற்று நடைபெற்ற ஒரே டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஒருநாள் போட்டிகளில் ஏற்பட்ட படுதோல்விகளை அடுத்து டி20 கிரிக்கெட் பாகிஸ்தான் அணிக்கு சர்பராஸ் அகமதுவை கேப்டனாக்கியது பாகிஸ்தான் அணி நிர்வாகம்.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களையே எடுத்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் ஷர்ஜீல் கான், காலித் லடீப் மூலம் 11 ஓவர்களில் 107 என்ற அதிரடி தொடக்கம் கண்டு 14.5 ஓவர்களில் 139/1 என்று அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணியின் பீல்டிங், பவுலிங் கறாராக, இறுக்கமாக அமைய கடைசி 10 ஓவர்களில் இங்கிலாந்து 58 ரன்களையே எடுத்தது, குறிப்பாக பவர் பிளேயிற்குப் பிறகு 3 பவுண்டரிகளே இங்கிலாந்தால் அடிக்க முடிந்தது.

இலக்கைத் துரத்தும் போது ஷர்ஜீல் கான், காலித் லடீப் ரன் ஓடுவதைப் பற்றி கவலையில்லாமல் பவுண்டரிகளை விளாசினர். இங்கிலாந்து ஒட்டுமொத்த இன்னிங்ஸிலும் 10 பவுண்டரிகளையே அடிக்க பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் 4-வது ஓவரிலேயே 10 பவுண்டரிகள் பக்கம் அடித்திருந்தனர்.

ஷர்ஜீல் கான் 30 பந்துகளில், காலித் லடீப் 34 பந்துகளில் அரைசதம் கண்டனர், இருவருமே சிக்சர்களில் அரைசதம் எட்டியது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து பந்து வீச்சில் டி.ஜே.வில்லே, ஜோர்டான், லியாம் பிளெங்கெட், பென் ஸ்டோக்ஸ் என்று ஒருவரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. குறிப்பாக ஜோர்டானின் ஒரே ஓவரில் காலித் லடீப் 20 ரன்களை விளாசினார்.

ஷர்ஜீல் கான் 36 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 59 ரன்களையும் காலித் லடீப் 42 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 59 ரன்களையும் எடுத்தனர். ஒரே விக்கெட்டாக ஷர்ஜீல் கான் மட்டுமே ஆட்டமிழந்தார். அடில் ரஷீத் இவர் விக்கெட்டைக் கைப்பற்றினார். பாபர் ஆசம் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சர்பராஸ் அகம்துவின் கேப்டன்சியில் புதுவிதமாக வஹாப் ரியாஸை 11-வது ஓவர்தான் கொண்டு வந்தார், அவர் 4 ஓவர்களில் 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இடது கை சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாசிம், இங்கிலாந்தின் தொடக்க வீரர்களான ஜேசன் ராய் (21), ஹேல்ஸ் (37) ஆகியோரை வீழ்த்தினார், இவர் 4 ஓவர்களில் 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால் முன்னதாக இருவரும் 6.4 ஓவர்களில் 56 ரன்களை விளாசியிருந்தனர். ஜோ ரூட் 6 ரன்களில் வலது கை வேகப்பந்து அறிமுக வீச்சாளர் ஹசன் அலியிடம் ஆட்டமிழந்தார். இவர் பிறகு பென் ஸ்டோக்ஸையும் வீழ்த்தினார், இடையில் பட்லரை வஹாப் ரியாஸ் காலி செய்தார். கேப்டன் மோர்கனும் சோபிக்காமல் வஹாபிடம் அவுட் ஆனார். இங்கிலாந்து 135/7 என்று தேங்கிப் போனது.

பாகிஸ்தான் கச்சிதமாக அனைத்துத் துறைகளிலும் சிறப்பை நிலைநாட்டி தொழில் நேர்த்தியுடன் பெற்ற வெற்றி இது என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x