Published : 10 Mar 2014 10:24 AM
Last Updated : 10 Mar 2014 10:24 AM
அமெரிக்காவின் இன்டியன் வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் பி.என்.பி. பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான ரஷியாவின் மரியா ஷரபோவா, ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
சனிக்கிழமை இரவு நடை பெற்ற 2-வது சுற்றில் ஷரபோவா 6-1, 6-4 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் ஜூலியா ஜார் ஜஸைத் தோற்கடித்தார். போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவரான ஷரபோவா ஒரு மணி நேரம், 6 நிமிடங்களில் ஜூலியாவைத் தோற்கடித்தார். இன்டியன்வெல்ஸ் போட்டியில் 2006, 2013 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்றுள்ள ஷரபோவா, மூன்றாவது பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளார். சர்வதேச தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ஷரபோவா, இந்த ஆண்டில் 4-வது போட்டியில் விளையாடி வரும் நிலைய, இதுவரை ஒன்றில்கூட இறுதிச்சுற்றுக்கு முன்னேறவில்லை.
கடந்த மாதம் ரஷியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஜோதியை ஏந்திச் சென்ற ஷரபோவா, அமெரிக்காவைச் சேர்ந்த என்.பி.சி. தொலைக்காட்சிக்காக பணிபுரிந்தார். அதனால் டென்னிஸ் போட்டியில் பங்கேற்காத அவர், இப்போது இன்டியன்வெல்ஸ் போட்டியில் பங்கேற்று 3-வது சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார்.
இந்தப் போட்டியில் முதல் சுற்றில் “பை” பெற்றதன் மூலம் நேரடியாக 2-வது சுற்றில் ஆடிய ஷரபோவா, வெற்றி குறித்துப் பேசுகையில், “சில வாரங்களாக விளையாடாமல் இருந்துவிட்டு மீண்டும் விளையாடுவது எப் போதுமே கடினமானதுதான். ஜூலியா சவாலான எதிராளி. அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப் படுத்தக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர். இந்தப் போட்டியில் நான் செய்ய வேண்டியதை செய்திருப்பதாக நினைக்கிறேன்” என்றார்.
ஷரபோவா அடுத்ததாக இத் தாலியின் கேமிலா ஜியோர்கியை சந்திக்கிறார். ஜியோர்கி தனது 2-வது சுற்றில் 7-6 (3), 6-3 என்ற நேர் செட்களில் தரவரிசையில் 25-வது இடத்தில் இருப்பவரான ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியாவை தோற்கடித்தார்.
ஃபெடரர் வெற்றி
ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் முன்னாள் முதல் நிலை வீரரும், தற்போது 8-வது இடத்தில் இருப்பவருமான ரோஜர் ஃபெடரர் 6-2, 7-6 (5) என்ற நேர் செட்களில் பிரான்ஸின் பால் ஹென்றி மேத்யூ வைத் தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இன்டியன்வெல்ஸ் போட்டியில் இதுவரை 4 முறை பட்டம் வென்றுள்ளார் ஃபெடரர்.
போராடி வென்ற நடால்
மற்றொரு ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் கடும் போராட்டத்துக்குப் பிறகு 2-6, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபானக்கை தோற்கடித்தார்.
காலிறுதியில் சானியா ஜோடி
இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது. சானியா-காரா ஜோடி தங்களின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ரகேல் காப்ஸ் ஜோன்ஸ்-அபிகெய்ல் ஸ்பியர்ஸ் ஜோடியைத் தோற்கடித்தது. சானியா-காரா ஜோடி தங்களின் 8 பிரேக் வாய்ப்புகளில் 5-ஐ `சேவ்’ செய்தது. அதேநேரத்தில் 9 முறை எதிர்ஜோடியின் சர்வீஸை முறி யடிக்கும் வாய்ப்பை பெற்ற சானியா ஜோடி, அதில் 5-ஐ முறியடித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT