Published : 19 Jan 2017 10:18 PM
Last Updated : 19 Jan 2017 10:18 PM
கட்டாக் ஒருநாள் போட்டியில் 382 ரன்கள் மகாவிரட்டலில் ஈடுபட்ட இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 366 ரன்கள் வரை வந்து தோல்வி அடைந்தது. இதனால் 2-0 என்று இந்தியா கோலி தலைமையில் முதல் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
மொத்தமாக இரு அணிகளும் சேர்ந்து 747 ரன்கள். யுவராஜ், தோனி, பிறகு மோர்கன் என்று 3 அருமையான சதங்களை இன்று ரசிகர்கள் விருந்தாகப் பெற்றனர். கட்டாந்தரை பிட்சில் தொடக்கத்தில் கிறிஸ் வோக்ஸ் தவண், ராகுல், கோலியை வீழ்த்தி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதும், பிற்பாடு ஜடேஜா தொடர்ச்சியாக 10 ஓவர்களை வீசி 45 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மிக முக்கியமான ஜேசன் ராய் (82) விக்கெட்டை அருமையான பந்தில் கைப்பற்றி இந்தப் பிட்சில் ஒரு அரிய சிக்கனத்தை வெளிப்படுத்த நடு ஓவர்களில் ரூட் (54), ஸ்டோக்ஸ் (1), ஜோஸ் பட்லர் (10) ஆகியோரை அஸ்வின் வீழ்த்தயதும் கட்டாந்தரையில் வீசிய அருமையான பந்து வீச்சுகளுக்கு உதாரணமாகும்.
இந்தக் கட்டத்தில்தான் 20 ஒவர்களில் 128/1 என்று சென்று கொண்டிருந்த இங்கிலாந்து ஜடேஜா, அஸ்வின் பவுலிங்கினால் 31.2 ஓவர்களில் 206/5 என்று ஆனது. அதாவது ஜோஸ் பட்லர், அஸ்வின் பந்தில் எகிறி வரப்பார்க்க, அதனை கவனித்த அஸ்வின் பந்தை லெக் திசையில் வேகமாக வீச பட்லரை தோனி சுலபமாக ஸ்டம்ப்டு செய்தார்.
31.2 ஓவர்களில் 206 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையில்தான் இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பை அளித்த கூட்டணியாக மோர்கனுடன் மொயின் அலி சேர்ந்தார்.
மொயின் அலி அஸ்வினை 2 சிக்சர்களையும் பாண்டியாவை ஒரு சிக்சரையும் அடித்தார். மொயின் அலி 43 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 55 ரன்களை எடுத்தார். மோர்கனும் இவரும் இணைந்து 12 ஒவர்களில் 93 ரன்களை விளாச 43.3 ஓவர்களில் 299/5 என்று இங்கிலாந்து உயிர்ப்பு பெற்ற நிலையில் புவனேஷ் குமாரின் வெளீயே சென்ற பந்தை மொயின் அலி ஆடிக்கப் போய் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு பவுல்டு ஆனார். வோக்ஸ். பும்ராவின் இன்ஸ்விங்கரில் பவுல்டு ஆனார், அவர் 5 ரன்களையே எடுத்தார்.
44.2 ஓவர்களில் 304/7 என்ற நிலையில் லியாம் பிளென்கெட், மோர்கனுடன் சேர்ந்தார், இருவரும் சேர்ந்து 4 ஓவர்களில் 50 ரன்களைச் சேர்த்தனர், மோர்கன் காட்டடி தர்பாரில் இறங்கினார், அருமையாக ஆஃப் திசையில் இடைவெளியைப் பயன்படுத்தி பவுண்டரிகளை அடித்து வந்தார், மேலும் பந்து ஈரமாக இருந்ததால் பும்ரா, புவனேஷ் அதிகம் புல்டாஸ்களை வீசினர். பாண்டியா 6 ஓவர்களில் 60 ரன்கள் விளாசப்பட்டார். பிளென்கெட், மோர்கன் இணைந்து ஸ்கோரை 354 ரன்களுக்குக் கொண்டு சென்றனர்.
மோர்கன் மிக அருமையாக விளையாடி ஒரு முனையில் தனிமனிதனாக அச்சுறுத்தி 6 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 81 பந்துகளில் 102 ரன்கள் என்று கேப்டன் இன்னிங்ஸ் ஆடி இந்தியாவை கதி கலக்கினார். ஏனெனில் 381 ரன்களுமே போதவில்லை என்றால் பிட்சை இன்னும் எப்படித்தான் போடுவது என்று கோலிக்கும் கும்ப்ளேவுக்கும் சிக்கல் எழுந்திருக்கும். ஒருவேளை அடுத்து இரு அணிகளும் 500 ரன்களுக்கான பிட்ச் அமைக்க வாய்ப்புண்டு!
இந்நிலையில்தான் பும்ரா ஒரு பந்தை யார்க்கர் லெந்தில் வீச அதனை பிளென்கெட் நேராக பும்ராவிடமே அடித்தார், ஆனால் மோர்கன் ஒரு ரன் எடுக்க ஆசைப்பட்டு நடுபிட்சில் இருந்தார், பும்ரா பந்தை ரன்னர் ஸ்டம்பில் அடிக்க மோர்கன் ஆட்டமிழந்தார்.
இதனால் இங்கிலாந்து 366/8 என்று அருகில் வந்து தோற்றது, நல்ல ‘ஸ்பிரிட்டட் சேஸ்’ என்பார்களே அதைத்தான் இன்று ரசிகர்கள் பார்த்தனர்.
முன்னதாக அலெக்ஸ் ஹேல்ஸ் 14 ரன்களில் பும்ராவின் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே சென்ற பந்தை தோனியிடம் கேட்ச் கொடுத்தார், வழக்கமாக அதிரடி பின்னி எடுக்கும் ஜேசன் ராய் இன்று நிதானம் கடைபிடித்து பிறகு அடித்து ஆடினார், அவர் 73 பந்துகளில் 9 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 82 ரன்கள் எடுத்து ஜடேஜாவின் அருமையான பந்தில் பவுல்டு ஆனார். இது திருப்பு முனையை ஏற்படுத்தியது.
ஜோ ரூட் 55 பந்துகளில் அனாயசமான 8 பவுண்டரிகளுடன் 54 ரன்களை எடுத்து அஸ்வின் பந்தை அடிக்க முயன்று டாப் எட்ஜ் ஆகி கோலியிடம் மிட்விக்கெட்டில் சிக்கினார். ராய், ரூட் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 100 ரன்களை 16 ஓவர்களில் சேர்த்தனர்.
அஸ்வினை கோலி மிகவும் பின்னால்தான் கொண்டு வந்தார், அஸ்வின் 20-வது ஓவரில்தான் கொண்டு வரப்பட்டார், இது நல்ல முடிவு, காரணம் வந்தவுடனேயே ரூட்டை வீழ்த்தினார். இந்தப் பந்தை அஸ்வின் வழக்கத்தை விட தூக்கி மெதுவாக வீச ஸ்லாக் ஸ்வீப் ஆடப் போன ரூட்டின் மட்டைக்கும் பந்துக்கும் கொஞ்சம் அதிகம் இடைவெளி இருந்ததால் டாப் எட்ஜ் எடுத்தது. ரூட் விக்கெட்டுக்குப்பிறகுதான் ராயும் மோர்கனும் 42 ரன்களை 6 ஓவர்களில் சேர்த்தனர் அப்போது ஒருமுனையில் தொடர்ச்சியாக வீசி வந்த ஜடேஜா ராயை பவுல்டு செய்தார். அதிலிருந்து இங்கிலாந்து சற்றே திணறத் தொடங்கியது.
ஆனால் மோர்கன், மொயின் அலி, பிளென்கெட் முயற்சி வீணானது, இந்தியா தொடரைக் கைப்பற்றியது, ஒருவேளை மோர்கன் அவுட் ஆகவில்லை என்றால் இங்கிலாந்து வென்றிருக்கலாம் இவ்வளவு பெரிய இன்னிங்சை ஆடிய மோர்கன் அந்த சிங்கிளை ஏன் எடுக்க அரை பிட்சிற்கு வேகமாக முன்னேற வேண்டும்? அதுதான் கிரிக்கெட் ஆட்டத்தின் ஒரு ஆர்வமூட்டும் திருப்பு முனைத் தன்மை. அந்த ரன் அவுட் இங்கிலாந்துக்கு தொடரை இழக்கச் செய்துள்ளது.
ஆட்ட நாயகனாக 150 ரன்களை விளாசிய ‘ஸ்டைலிஷ்’ யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT