Published : 10 Jun 2016 04:51 PM
Last Updated : 10 Jun 2016 04:51 PM
ஜிம்பாப்வேவுக்கு எதிராக இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடும் தொடரில் நாளை (சனிக்கிழமை) முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் தொடங்குகிறது.
இந்திய அணியில் தோனி, மணிஷ் பாண்டே, அம்பாத்தி ராயுடு தவிர மற்றோர் அனுபவமில்லாதவர்கள். அன்னிய மண்ணில் அனுபவமற்ற வீரர்களை நம்பி தோனி ஜிம்பாப்வே பிட்சில் களமிறங்குகிறார். அதுவும் தோனி ஜிம்பாப்வேவுக்கு கடைசியாக சென்று விளையாடியது 2005-ம் ஆண்டு, அவரது கிரிக்கெட் வாழ்வின் ஆரம்ப காலமாகும் அது. இந்நிலையில் ஜிம்பாப்வே அணியின் சமீபத்திய ஆட்டங்கள் அந்த அணியை பெரிய அச்சுறுத்தலாகக் காட்டவில்லை என்றாலும், உள்நாட்டு மைதானம், கிரீமர் தலைமையில், மகாயா நிடினி பயிற்சியில் நிச்சயம் இந்திய அணிக்கு சிலபல பிரச்சினைகள் காத்திருப்பதையே நமக்கு அறிவுறுத்துகிறது.
குறிப்பாக தோனி தோல்வியடையாமல் வர வேண்டும் என்பதோடு, அவரது பேட்டிங் பார்ம் நிச்சயம் ரசிகர்களிடையே கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொடரில் அவர் பேட்டிங்கில் முன்னால் களமிறங்கி தனது பழைய பாணி ஆட்டத்துடன் இறுதி வரை நின்று அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது. எனவே பலமட்டத்தில் இந்தத் தொடர் தோனிக்கு சோதனையானதே.
கே.எல்.ராகுல் குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் தனது அறிமுகப் போட்டியில் ஆடவிருக்கிறார். ஜிம்பாப்வே தொடர் என்றாலே பெயருக்கு ஆடப்படும் ஒரு தொடராகவே இருந்து வருகிறது. அதுவும் பிசிசிஐ எப்போதும் 2-ம் தர அணியையே தேர்ந்தெடுத்து அனுப்புகிறது, ஆனால் வீரர்கள் இரண்டாம் தர வீரர்களல்ல, இவர்கள் ரெகுலராகவே இந்திய அணியில் இடம்பெற ஓரளவுக்குத் தகுதி பெற்றவர்கள் எனினும் குறிப்பாக இத்தகைய தொடர் முடிந்தவுடன் இதில் நன்றாக ஆடிய விளிம்பு நிலை வீரர்கள் கூட கவனம் பெறாமல் புறக்கணிக்கப்படுவதையே நாம் பார்த்து வந்துள்ளோம் இதற்கு சிறந்த உதாரணம் கேதர் ஜாதவ்.
உதாரணமாக இந்தத் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட மந்தீப் சிங், லோகேஷ் ராகுல், கருண் நாயர், மீண்டும் கேதர் ஜாதவ், ரிஷி தவண் ஆகியோர் சிறப்பாக ஆடினாலும் இவர்கள் இந்தத் தொடரோடு சரி, அதன் பிறகு பழைய வீரர்கள் திரும்பி விடுவர். இவர்கள் மீண்டும் உள்நாட்டு தொடர்களில் ‘கவனம்’ செலுத்த வேண்டியதுதான்.
ஆனால் இந்த 2-ம் நிலை அணிகள் 2013 மற்றும் 2015-ல் 5-0, 3-0 என்று ஒயிட் வாஷ் வெற்றிகளைச் சாதித்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தோனிக்கு இரட்டை நெருக்கடி ஏற்பட்டுள்ளது, ஒரு போட்டியையும் அவர் தோற்கக் கூடாது என்ற எதிர்பார்ப்பு இருப்பதோடு, விராட் கோலியின் பிராட்மன் ரக பார்மினால் 3 வடிவங்களுக்கும் கோலியே கேப்டனாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருவதால் தோனிக்கு இரட்டை அழுத்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால் கேப்டன் கூல் எந்த அழுத்தத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்பவர் இல்லை என்றாலும் அடிக்கடி அவரே தற்போது தனது முழு உடற்தகுதி குறித்து செய்தியாளர்களிடம் கூறிவருவது அவர் மனதளவில் எதிர்கொள்ளும் அழுத்தத்தை அறிவுறுத்துவதாக அமைகிறது.
எனவே தோல்வி ஏற்பட்டால் அது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தும் என்பதை தோனியும் அறிந்திருக்கிறார், பந்து வீச்சில் தவல் குல்கர்னி, ஜஸ்பிரீத் பும்ரா, பரீந்தர் சரன் அல்லது ஜெய்தேவ் உனட்கட் வேகப்பந்தை கவனித்துக் கொள்ள சுழற்பந்துக்கு அக்சர் படேல், யஜுவேந்திர சாஹல், ஆல்ரவுண்டர் ரிஷி தவண் உள்ளனர். பேட்டிங் பெரும்பாலும் தோனி, ராயுடு, மணிஷ் பாண்டேயை நம்பியே உள்ளது.
ஜிம்பாப்வே அணி இந்திய அணியின் ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிரான பேட்டிங் அணுகுமுறையை நன்கு அறிந்திருப்பதால், டைமிசென் மருமா என்ற லெக்பிரேக் கூக்ளி பவுலர் தவிர மற்ற ஸ்பின் பவுலர்களை சேர்க்க வாய்ப்பில்லை கேப்டன் கிரீமர் ஒரு லெக் பிரேக் பவுலர். தவந்தா முபரிவா நல்ல வேகத்தில் வீசக்கூடியவர், டவ்ராய் முசரபானியும் நல்ல வேகம் வீசக்கூடியவர். இவர் தவிர டோனல்ட் திரிபானோ என்ற வேகப்பந்து வீச்சாளரும் மகாயா நிடினியின் பயிற்சியில் நல்ல வேகம் வீசக் கூடியவர். இவர்கள் தவிர அனுபவசாலியான எல்டன் சிகும்பரா வேகமாக வீசக் கூடியவர், டெண்டய் சதாரா என்பவரும் உள்ளார். ஒரு சர்ப்ரைஸ் பேக்கேஜாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் டெண்டய் சிசோரோ என்பவர் உள்ளார், இவர்களில் எந்த 4 பேர் 11 வீரர்கள் கொண்ட இறுதி அணியில் இடம்பெறுவார்கள் என்பது தெரியாது.
பேட்டிங்கைப் பொறுத்தவரை ஜிம்பாப்வே அணியில் கிரெய்க் எர்வின், ஹாமில்டன் மசகாட்சா, சிகந்தர் ரசா, சான் வில்லியம்ஸ், வுசி சிபாந்தா ஆகியோர் உள்ளனர். இதில் மசாகாட்சா என்ன மூடில் இறங்குகிறார் என்பது அவருக்கே தெரியாத ஒன்று. நிச்சயம் மகாயா நிடினி ஆக்ரோஷமான பேட்டிங்கையே இவர்களுக்குப் போதித்திருப்பார். பிட்ச் வேகப்பந்துக்கு சாதகமாக அமைந்தால் ஜிம்பாப்வே பந்து வீச்சு நிச்சயம் முன்னிலை பெறும்.
எனவே எளிதில் விட்டுக் கொடுக்காத ஆட்டத்தை ஜிம்பாப்வே கையாளும் என்பதோடு, அனுபவமற்ற இந்திய அணிக்கும் அனுபவம் பெற்ற தோனிக்கும் சில சோதனைகளை ஜிம்பாப்வே தொடர் அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
நாளை (சனிக்கிழமை) பகல் 12.30 மணிக்கு முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT