Published : 07 Jan 2014 11:38 AM
Last Updated : 07 Jan 2014 11:38 AM

தென் ஆப்பிரிக்காவின் சவாலை சந்திக்கத் தயார்: கிளார்க்

தென் ஆப்பிரிக்காவின் சவாலை சந்திக்கத் தயார் என்று ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தென் ஆப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த நிலையில் கிளார்க் மேலும் கூறியிருப்பதாவது:

உலக கிரிக்கெட்டில் தலைசிறந்த பந்துவீச்சைக் கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்வது ஆஸ்திரேலியாவுக்கு கொஞ்சம் சவாலானதாக இருக்கும். தங்கள் அணியில் வலுவான பந்துவீச்சாளர்கள் உள்ளனர் என்பதை தென் ஆப்பிரிக்கா நிரூபிக்கவும் செய்திருக்கிறது. எனவே தென் ஆப்பிரிக்க மண்ணில் விளையாடுவது எங்களுக்கு சவாலாகவே இருக்கும். இதேபோல் ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுடன் விளையாடவுள்ள டெஸ்ட் தொடர் மிகவும் கடினமானதாக இருக்கும்.

தாய்நாட்டுக்கு வெளியில் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்கும்போது வெற்றி பெறுவது கடினமானதாகவே இருக்கும். எனினும் நாங்கள் வெற்றிபெறக்கூடிய அணியை பெற்றிருப்பதாக நம்புகிறோம். இப்போது இங்கிலாந்தை வீழ்த்தியிருக்கிறோம்.

உலக கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா சிறந்த அணி என்பதை நிரூபிக்க அடுத்து வரக்கூடிய டெஸ்ட் தொடர்களில் வெல்வது அவசியம். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வெல்வதற்காக மட்டும் அங்கு செல்லவில்லை. கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலியாதான் தலைசிறந்த அணி என்பதை எல்லோரும் நினைக்கும் வகையில் விளையாட வேண்டும் என்ற எண்ணத்தோடும் செல்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x