Published : 25 Aug 2016 12:27 PM
Last Updated : 25 Aug 2016 12:27 PM

ஜேசன் ராய், ஜோ ரூட் அரைசதங்களால் பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து

ஏஜியஸ் பவுலில் நடைபெற்ற, மழை பாதித்த முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியை இங்கிலாந்து டக்வொர்த் லூயிஸ் முறையில் வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

முதலில் பேட் செய்ய முடிவெடுத்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்களையே எடுக்க முடிந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 34.3 ஓவர்களில் 194 ரன்கள் எடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெற்றி பெற்றனர். தொடக்க வீரர் ஜேசன் ராய், தனது அபாரமான ஒருநாள் பார்மை தொடர்ந்து நேற்றும் அதிரடி அரைசதம் கண்டார், ரூட் 61 ரன்கள் எடுத்தார், பாகிஸ்தான் பவுலர்களில் உமர் குல் சாத்துமுறை. அவர் 6 ஓவர்களில் 46 ரன்களுக்கு வைத்து வாங்கப்பட்டார்.

இந்த வெற்றி மூலம் சூப்பர் சீரிஸ் புள்ளிகளில் 10-8 என்று முன்னிலை வகிக்கின்றனர். இன்னும் 4 ஒருநாள் போட்டிகள் ஒரு டி20 உள்ளது. வரும் சனியன்று லார்ட்ஸில் 2-வது போட்டி நடைபெறுகிறது.

வெற்றி பெற ஓவருக்கு 5.22 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இங்கிலாந்து தொடக்க வீரர்கள் முதல் 10 ஓவர்களிலேயே 66 ரன்களை விளாசினர். அலெக்ஸ் ஹேல்ஸ் உமர் குல் பந்தை தேர்ட் மேன் திசையில் திருப்பி விட முயன்று ஸ்லிப்பில் பிடிபட்டார்.

ஜேசன் ராய் 24 ரன்களில் இருந்த போது செய்த டாப் எட்ஜ் கேட்ச் ஷார்ட் பைன்லெக்கில் உமர் குல்லுக்கு நேராகச் சென்றது, ஆனால் நான் பிடிக்கிறேன் என்று சென்ற விக்கெட் கீப்பர் சர்பராஸ் அகமட் பந்தை தரையில் வழிய விட்டார். அப்போதிலிருந்து இங்கிலாந்து பக்கம் ஆட்டம் சென்றது, ஜோ ரூட் இரண்டு அருமையான ஆஃப் திசை பவுண்டரிகளை அடித்தார். இரண்டுமே ஆமிர் பந்தில். ஜேசன் ராய், இமாத் வாசிமை பேக்வர்ட் ஸ்கொயர் லெக்கில் ஒரு அபாரமான சிக்சரை அடித்தார். ஜேசன் ராய் அடித்த பல ஷாட்கள் அபாரமானவை, லேசாக சேவாகை நினைவூட்டும் பேட்டிங்காக உள்ளது, கடைசியில் லீடிங் எட்ஜ் எடுத்து 56 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 65 ரன் எடுத்து மொகமது நவாஸ் பந்தில் பாபர் ஆசமிடம் லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஜோ ரூட் 56 பந்துகளில் அரைசதம் எடுத்தார். மோர்கன் இவரை ஒரு டைட் சிங்கிளுக்கு அழைக்க அசார் அலியின் நேர் த்ரோவுக்கு வெளியேறினார் ஜோ ரூட். 27.5 ஒவர்களில் 158/3 என்ற போதே டக்வொர்த் முறையில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுவிட்டது, கடைசியில் மழை மொத்தமாகக் குறுக்கிட்ட போது மோர்கன் 33 ரன்களிலும் ஸ்டோக்ஸ் 15 ரன்களிலும் இருக்க ஸ்கோர் 194/3 என்று இருந்தது, இது வெற்றி ஸ்கோர் என்று அறிவிக்கப்பட்டது.

முன்னதாக பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி 84 பந்துகளில் அரைசதம் எடுத்து பிறகு சூழ்நிலையின் அவசரம் கருதி 110 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். சர்பராஸ் அகமது 58 பந்துகளில் 55 ரன்களை விளாசினார். அசார் அலி 9 ரன்களில் இருந்த போது அலெக்ஸ் ஹேல்ஸ் ஒரு கேட்சை விட்டார், துரதிர்ஷ்டசாலி கிறிஸ் வோக்ஸ். மொகமது ஹபீஸ் தனது மோசமான பார்மை சீர்திருத்த முடியவில்லை ஜோ ரூட்டை ஸ்வீப் செய்து டாப் எட்ஜ் செய்து வெளியேறினார்.

பாபர் 42 பந்துகளில் 40 ரன்களுக்கு அருமையாக ஆடினார். அதிரடி வீரர் ஷர்ஜீல் கான் ரிவியூவை வேஸ்ட் செய்ததால் அடில் ரஷீத் பந்தில் மட்டையில் பட்டும் எல்.பி. என்று தீர்ப்பளிக்கப்பட்டு வெளியேறினார். கடைசியில் பாகிஸ்தான் 260 ரன்களை எட்டியது மாலிக், நவாஸ், இமாத் வாசிம் ஆகியோரின் தலா 17 ரன்களினால். ஆட்ட நாயகன் ஜேசன் ராய்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x