Published : 10 Feb 2017 05:54 PM
Last Updated : 10 Feb 2017 05:54 PM
ஹைதராபாதில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 687 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. வங்கதேசம் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்துள்ளது.
3 பவுண்டரிகளுடன் தன்னம்பிக்கையுடன் ஆடி வந்த சவுமியா சர்க்கார் உமேஷ் யாதவ் வீசிய அபாரமான வேக இன்ஸ்விங்கரில் மட்டையின் அடிவிளிம்பில் பட்டு சஹாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மிகவும் மெலிதான எட்ஜ், மிட் ஆனில் புஜாராவும், மிட்விக்கெட்டில் விஜய்யும் கவரில் கோலியும் எட்ஜில் நம்பிக்கையுடன் இருந்ததையடுத்து ரிவியூவில் அவுட் தீர்ப்பளிக்கப்பட்டது. தமிம் இக்பால் 24 ரன்களுடனும் மொமினுல் ஹக் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று காலை 356/3 என்று தொடங்கிய இந்தியாவின் விராட் கோலி, ரஹானே வங்கதேசத்தின் சில அலட்சியமான பந்து வீச்சைப் பயன்படுத்தி விளாசத் தொடங்கியது. முதல் ஒரு மணி நேர ஆட்டத்தில் 70 ரன்களை இருவரும் விளாசினர், நேற்று இருவரும் ஜோடி சேர்ந்து 122 ரன்களைச் சேர்த்தனர் இன்று மேலும் 100 ரன்களைச் சேர்த்து 4-வது விக்கெட்டுக்காக 222 ரன்களைச் சேகரித்தனர். 11 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் எடுத்து உறுதியான சதம் என்று ஆடிவந்த ரஹானே தைஜுல் இஸ்லாம் பந்தை கவரில் கேட்ச் கொடுத்தார், மெஹதி ஹசன் மிராஸ் டைவ் அடித்து ஒருகையில் கேட்ச் பிடித்தார்.
ஆனால் கோலி ஒருபுறம் வங்கதேசத்தின் தாறுமாறு பவுலிங்குடன் விளையாடினார். தஸ்கின் அகமது போட்டுக் கொடுத்த போது கோலி டீப் பாயிண்ட்டுக்கு மேல், பிறகு அதே திசையில் தரையோடு தரையாக 2 பவுண்டரிகளை விளாசினார். ஸ்லிப் தலைக்கு மேல் ஒரு பவுண்டரியையும் விளாசி தஸ்கின் அகமட் ஸ்பெல்லை கிழித்தார்.
விருத்திமான் சஹா இறங்கியவுடன் தைஜுலின் அருமையான பிளைட்டட் பந்தை சஹா மேலேறி வந்து ஆடி பந்தைக் கோட்டை விட ஸ்டம்பிங் செய்ய ஏகப்பட்ட நேரம் இருந்தும் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் சோடை போனார். அதாவது சஹா கிரீசிற்குள் திரும்புவதற்குள் இருமுறை பைல்களை அகற்ற அவருக்கு வாய்ப்பிருந்தது. ஆனால் முஷ்பிகுர் தனது விக்கெட் கீப்பிங் தொழிலை கைவிட வேண்டிய நேரம் வந்து விட்டது என்று நிரூபித்தார், லிட்டன் தாஸை அழைக்க வேண்டியதுதான்!
கோலியை ஆட்டிய மெஹதி ஹசன் மிராஸ்; தப்பிய சஹா சதம்!
இரட்டைச் சதம் அடிப்பதற்கு முன்பாக கோலி 180 ரன்களில் இருந்த போது ஒரே ஓவரில் கோலியை 3 முறை பீட் செய்தார் மெஹதி. இதில் ஒரு பந்து நன்றாகத் திரும்ப கோலி லெக்திசையில் ஆடும் முயற்சியில் கால்காப்பில் வாங்கினார், நடுவர் ஜோ வில்சன் அவுட் என்று தீர்ப்பளித்தார், ஆனால் கோலி ரிவியூ செய்தார், இதில் பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே செல்வது தெரிந்தது! நாட் அவுட். இரட்டைச் சதம் அடித்து தைஜுல் பந்தை கட் செய்யும் முயற்சியில் மீண்டும் கோலி கால்காப்பில் வாங்க இம்முறை எராஸ்மஸ் கையை உயர்த்த ரிவியூ செய்யாமல் வெளியேறினார், ஆனால் பந்து ஆஃப் ஸ்டம்பை மிஸ் செய்வது ரீப்ளேயில் தெரிந்தது, இரட்டைச் சதம் அடித்தாயிற்றே பிறகு எதற்கு இன்னொரு ரிவியூ என்று கோலி ‘பெரிய மனது’ பண்ணியிருக்கலாம்.
அதன் பிறகு சஹா பிளிக்குகள், கட் ஷாட்கள் என்று 86 பந்துகளில் அரைசதம் கண்டு, ஸ்பின்னர்களுக்கு எதிராக கால்களை நன்றாகப் பயன்படுத்தி தைஜுலை அருமையாக நேராக சிக்ஸ் அடித்தார் 153 பந்துகளில் சஹா சதம் கண்டார். 155 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 106 ரன்களை எடுத்த சஹா நாட் அவுட்டாக திகழ்ந்தார். அஸ்வின் 34 ரன்களை எடுத்து மெஹதி ஹசனிடம் வீழ்ந்தார்.
ஜடேஜா களமிறங்கி 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என்று உத்வேகமாக ஆடி 78 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார். 166 ஓவர்களில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 687 ரன்களை எடுக்க கோலி டிக்ளேர் என்று அறிவித்தார்.
வங்கதேசத்தில் 8 பவுலர்கள் பயன்படுத்தப்பட்டதில் 5 பவுலர்கள் ‘சதமடித்ததுதான்’ மிச்சம்! தைஜுல் இஸ்லாம் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், மெஹதி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். கம்ருல் இஸ்லாம் ராபி 100 ரன்களை 19 ஓவர்களில் விட்டுக் கொடுத்தாலும் நல்ல வேகத்தில் வீசினார்.
கேப்டன்சி இன்னும் கொஞ்சம் டைட்டாக இருந்திருந்தால் இவரை வைத்து கோலியை எளிதில் வீழ்த்த முடியும், இவரது மலிங்கா போன்ற ஆக்சன் நல்ல லெந்தில் நல்ல அவுட்ஸ்விங்கர்களை உற்பத்தி செய்யக்கூடியது. தொடர்ந்து ஆஃப் ஸ்டம்ப் லைனில் கோலியை வெறுப்பேற்றிப் பார்த்திருக்கலாம், குறைந்தது அவரை ரன்களுக்காக ஏங்கவாவது வைத்திருக்கலாம், ஆனால் இவற்றையெல்லாம் நாம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எதிர்பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT