Published : 17 Aug 2016 05:37 PM
Last Updated : 17 Aug 2016 05:37 PM
தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்காக விளையாடுவதாக டிவில்லியர்ஸ் உறுதி அளித்துள்ளார்.
3 வடிவங்களிலும் அதிக வேலைப்பளு காரணமாக ஓரிரண்டு வடிவங்களிலிருந்து டிவில்லியர்ஸ் ஓய்வு பெறுவது உறுதி போன்ற செய்திகள் சிலகாலங்களாக உலவி வந்தன. மேலும் அவரது சுயசரிதை நூல் ஒன்று அடுத்த மாதம் வரவுள்ள நிலையில் டிவில்லியர்ஸ் ஓய்வு உறுதியானதே என்று நம்பப்பட்டது.
இந்நிலையில் நியூஸிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் டிவில்லியர்ஸ் முழங்கை காயம் காரணமாக ஆட மாட்டார் என்ற செய்தியும் சேர்ந்து கொள்ள, தென் ஆப்பிரிக்காவின் இட ஒதுக்கீட்டு முறை பற்றிய செய்திகளும் பரவலாக டிவில்லியர்ஸ் கரியர் முடிவுக்கு வந்துவிட்டதாகவே ஊடகங்கள் எழுதின.
இந்நிலையில் டிவில்லியர்ஸ் கூறும்போது, “என் தாய்நாட்டுக்காக ஆடுவது எனக்கு மிகவும் நேசத்திற்குரியது. என்னால் முடிந்தவரை ஆடியே தீருவேன். நம் உடல்நிலையைக் கவனித்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது. அதுதான் இந்த 6 வாரங்களாக நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து தொடருக்குப் பிறகு நான் மீண்டும் ஆடத் தொடங்கிவிடுவேன், அக்டோபரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வேன். அயர்லாந்துடன் ஒரு போட்டி உள்ளது, அதில் எனது உடல் தகுதியை சோதிக்க முடிவெடுத்துள்ளேன்” என்றார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு அடுத்த 10 மாதங்கள் நெருக்கமான தொடர்களுக்கான காலக்கட்டமாகும். ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்தில் தொடர்கள் (சாம்பியன்ஸ் டிராபி உட்பட) பிறகு இலங்கையுடன் தங்கள் நாட்டில் டெஸ்ட் தொடர் என்று நெருக்கமாக உள்ளது.
டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1-லிருந்து 7-ம் இடத்துக்கு சரிந்துள்ள தென் ஆப்பிரிக்கா இந்தத் தொடர்களில் மீண்டும் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டுவார்கள் என்று டிவில்லியர்ஸ் மேலும் கூறுகையில் நம்பிக்கை தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT