Last Updated : 12 May, 2017 09:21 AM

 

Published : 12 May 2017 09:21 AM
Last Updated : 12 May 2017 09:21 AM

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட்- ஜூன் 3-ல் ஜூவென்டஸ் அணியுடன் பலப்பரீட்சை

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் அரை இறுதியில் சராசரி கோல் விகிதப்படி 4-2 என்ற கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட் அணியை வீழ்த்திய ரியல் மாட்ரிட் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இரு அணிகளும் மோதிய முதல் கட்ட அரை இறுதியில் ரியல் மாட்ரிட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இந்த ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தியிருந்தார். இந்நிலை யில் நேற்று கடைசி கட்ட அரை இறுதியில் இந்த இரு அணிகளும் மீண்டும் பலப்பரீட்சை நடத்தின.

ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே அட்லெடிகோ மாட்ரிட் ஆதிக்கம் செலுத்தியது. 12-வது நிமிடத்தில் சாவுல் நிகுஸ் அற்புதமாக தலையால் முட்டி அடித்த கோலால் அட்லெடிகோ மாட்ரிட் 1-0 என முன்னிலை பெற்றது.

அடுத்த 4-வது நிமிடத்தில் அட்லெடிகோ மாட்ரிட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை அந்த அணியின் நட்சத்திர வீரரான அந்தோனி கீரிஸ்மான் கோலாக மாற்ற ரியல் மாட்ரிட் அதிர்ச்சியடைந்தது. முதல் பாதி ஆட்டம் முடிவடைய 3 நிமிடங்கள் இருந்த நிலையில் ரியல் மாட்ரிட் பதிலடி கொடுத்தது.

இந்த கோலை இஸ்கோ அடித்தார். முதல் பாதி ஆட்டத்தில் அட்லெடிகோ மாட்ரிட் 2-1 என முன்னிலை வகித்தது. ஆனால் அதன் பின்னர் இரு அணிகள் தரப்பிலும் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் அட்லெடிகோ மாட்ரிட் 2-1 என வெற்றி பெற்றது.

ஆனால் முதல் கட்ட அரை இறுதியில் ரியல் மாட்ரிட் 3-0 என வெற்றி பெற்றிருந்ததால் சராசரி கோல் விகிதப்படி ரியல் மாட்ரிட் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சாம்பியன்ஸ் லீக் தொடரில் ரியல் மாட்ரிட் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இது 15-வது முறையாகும்.

இதில் அந்த அணி 11 முறை பட்டம் வென்றுள்ளது. 3 முறை 2-வது இடம் பிடித்தது. வரும் ஜூன் 3-ம் தேதி இங்கிலாந்தின் கார்டிப் நகரில் நடைபெறும் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட், ஜூவென்டஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்து கிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x