Last Updated : 01 Feb, 2017 10:05 AM

 

Published : 01 Feb 2017 10:05 AM
Last Updated : 01 Feb 2017 10:05 AM

நடுவரின் முடிவு குறித்து கவலைப்பட மாட்டோம்: ஜஸ்பிரித் பும்ரா கருத்து

நடுவர் வழங்கும் முடிவுகள் குறித்து நாங்கள் அதிகம் கவனம் செலுத்த மாட்டோம். ஒரு சில நேரங்களில் அது நமக்கு சாதகமாக இருக்கும். சில சமயங்களில் எதிரணிக்கு சாதகமாக இருக்கும் என ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.

நாக்பூரில் நடைபெற்ற இந்தியா வுக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஜஸ்பிரித் பும்ரா வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முன்னணி வீரரான ஜோ ரூட் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

ஆனால் பந்து பேட்டில் பட்டது என்றும் நடுவர் சம்சுதின் இதை சரியாக கவனிக்காமல் தவறான தீர்ப்பு கொடுத்ததால் ஆட்டத்தின் முடிவே மாறிவிட்டதாகவும் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் குற்றம் சாட்டினார். நடுவரின் முடிவு குறித்து மேட்ச் ரெப்ரியிடம் தெரிவிப்போம் என்றும் கூறியிருந்தார்.

நடுவரின் தீர்ப்பு இந்திய அணிக்கு சாதகமாக அமைந்த நிலையில் அந்த ஆட்டத்தில் மிகப் பெரிய திருப்புமுனையாக இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் டி 20 தொடரை 1-1 என சமநிலையை அடையச் செய்தது இந்திய அணி.

ரூட் ஆட்டமிழந்ததும் அடுத்த சில பந்துகளில் ஜாஸ் பட்லர் போல்டாகி நடையை கட்ட மொத்தம் அந்த ஓவரில் இங்கிலாந்து அணியால் 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங்கின் போதும் நடுவர் தவறிழைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஜோர்டான் வீசிய 3-வது ஓவரின் 2-வது பந்து விராட் கோலியின் பேடைத் தாக்கியது. இங்கிலாந்து வீரர்கள் முறையீடு செய்த போதும் நடுவர் அவுட் வழங்க மறுத்தார். ஆனால் டி.வி. ரீப்ளேயில் பந்து நேராக மிடில் ஸ்டம்பை தாக்குவது தெரிந்தது.

இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3-வது டி 20 ஆட்டம் பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சி கொண்டனர். பயிற்சிக்கு முன்னர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நிருபர்களிடம் கூறியதாவது:

நடுவர் வழங்கும் முடிவுகள் குறித்து நாங்கள் அதிகம் கவனம் செலுத்த மாட்டோம். ஒரு சில நேரங்களில் அது நமக்கு சாதகமாக இருக்கும். சில சமயங்களில் எதிர ணிக்கு சாதகமாக இருக்கும். கிரிக்கெட்டில் இது நிகழக் கூடியதுதான். அதனால் நாம் அதில் இருந்து முன்னேறிச் செல்ல வேண்டும்.

ஆசிஷ் நெஹ்ரா எப்போதுமே உதவிகரமாக உள்ளார். டி 20 உலகக் கோப்பையில் அவருடன் இணைந்து விளையாடி உள்ளேன். அவரது வழிகாட்டல் மிகுந்த மதிப்பு வாய்ந்தது. ஏராளமான சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ள அவர் தனது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

இவ்வாறு பும்ரா கூறினார்.

நாக்பூர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமநிலையை அடையச் செய்ததில் ஜஸ்பிரித் பும்ரா முக்கிய பங்கு வகித்தார். கடைசி ஓவரில் இங்கி லாந்து அணிக்கு 8 ரன்கள் தேவைப் பட்ட நிலையில் பும்ரா தனது சிறப்பான பந்து வீச்சால் 2 விக்கெட்களை வீழ்த்தியதுடன் 2 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத் தக்கது. 18-வது ஓவரிலும் பும்ரா 3 ரன்கள் மட்டுமே வழங்கியிருந்தார். இந்த ஆட்டத்தில் நெஹ்ராவும் சிறப்பாக செயல்பட்டு 3 விக்கெட்கள் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x