Published : 28 Dec 2013 09:07 AM
Last Updated : 28 Dec 2013 09:07 AM

டர்பன் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸ்சில் 334 ரன்கள் குவித்தது இந்தியா

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 111.3 ஓவர்களில் 334 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.



தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 61 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்திருந்தது.

முரளி விஜய் 91, புஜாரா 58 ரன்களுடன் களத்தில் இருந்தனர். போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல்நாள் ஆட்டம் 61 ஓவர்களோடு நிறுத்தப்பட்டதால் 2-வது நாள் ஆட்டம் அரைமணி நேரம் முன்னதாகத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மழை பெய்ததால் 2-வது நாள் ஆட்டம் சுமார் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் தாமதமாகவே தொடங்கியது. இந்திய அணி இரண்டாவது நாளில் மேலும் 17 ரன்கள் சேர்த்த நிலையில் புஜாராவின் விக்கெட்டை இழந்தது. 132 பந்துகளைச் சந்தித்த புஜாரா 9 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்து ஸ்டெயின் பந்துவீச்சில் வீழ்ந்தார்.

நழுவியது சதம்...

இதையடுத்து விராட் கோலி களம்புகுந்தார். மறுமுனையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முரளி விஜய் 97 ரன்களில் (226 பந்துகளில் 18 பவுண்டரிகளுடன்) ஸ்டெயின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டிவில்லியர்ஸிடம் கேட்ச் ஆனார். இதையடுத்து வந்த ரோஹித் சர்மா, தான் சந்தித்த முதல் பந்திலேயே கிளீன் போல்டு ஆனார்.

இதன்பிறகு கோலியுடன் இணைந்தார் அஜிங்க்ய ரஹானே. இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்தது. 87 பந்துகளைச் சந்தித்த கோலி 5 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து மோர்கல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ரஹானேவும், தோனியும் இணைந்து 6-வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்தனர். தோனி 40 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்து வெளியேற, பின்னர் வந்த ரவீந்திர ஜடேஜா, ஜாகீர் கான் ஆகியோர் டக்அவுட் ஆகினர். இஷாந்த் சர்மா ஒரு பவுண்டரி அடித்த கையோடு ஆட்டமிழந்தார். இதையடுத்து முகமது சமி களம்புகுந்தார். ரஹானே அரைசதம்...

மறுமுனையில் நிதானமாக ஆடிய ரஹானே 112 பந்துகளில் அரைசதம் கண்டார். இது டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த முதல் அரைசதமாகும். கடைசி விக்கெட்டாக முகமது சமி 1 ரன்னில் நடையைக் கட்ட, இந்தியா 111.3 ஓவர்களில் 334 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ரஹானே 121 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக்கத் தரப்பில் டேல் ஸ்டெயின் 6 விக்கெட்டுகளையும், மோர்ன் மோர்கல் 3 விக்கெட்டு களையும் வீழ்த்தினர்.

காலிஸ் 200...

ரவீந்திர ஜடேஜாவின் கேட்சை பிடித்தபோது டெஸ்ட் போட்டியில் 200 கேட்சுகளை பிடித்தார் ஜாக்ஸ் காலிஸ். அவர் தனது 166-வது போட்டியில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 200 கேட்ச் பிடித்த 2-வது வீரர் காலிஸ் ஆவார். இந்தியாவின் ராகுல் திராவிட் 164 போட்டிகளில் விளையாடி 210 கேட்சுகளை பிடித்து டெஸ்ட் போட்டியில் அதிக கேட்சுகள் பிடித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 39 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் கிரீம் ஸ்மித் 26 பந்துகளில் 21 ரன்களும், ஆல்விரோ பீட்டர்சன் 34 பந்துகளில் 19 ரன்களும் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தனர். இந்தியாவின் முதல் இன்னிங்ஸை ஸ்கோரை எட்ட தென் ஆப்பிரிக்கா 295 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x