Published : 08 Mar 2017 12:52 PM
Last Updated : 08 Mar 2017 12:52 PM
அவுட்டைத் தீர்மானிக்க 3-வது நடுவரை அணுகுவதற்காக 3 முறை ஆஸ்திரேலிய வீரர்கள் களத்திலிருந்து ஓய்வறையில் இருக்கும் வீரர்களின் உதவியை நாடியதாக விராட் கோலி புகார் தெரிவித்தார்.
அதாவது களநடுவர் நாட் அவுட் என்று கூறிவிடுகிறார் என்றால், அதனை ரிவியூ செய்தால் தீர்ப்பு நிச்சயம் மாறுமா என்பதைத் தெரிந்து கொண்டு களத்தில் அப்பீல் செய்வது. இது போன்ற விதிமுறைக்குப் புறம்பான அணுகுமுறையை ஆஸ்திரேலிய அணியினர் 3 முறை கையாண்டதாக கோலி நடுவரிடம் புகார் அளித்தார்.
நேற்று ஸ்மித், உண்மையாகக் கூற வேண்டுமெனில் உருண்டு வந்த பந்தில் எல்.பி.ஆனார். அவர் எதிர்முனை வீரரை கலந்தாலோசித்த பிறகு பெவிலியனை நோக்கி ரிவியூ செய்யலாமா என்று சைகையில் கேட்டார். இது பெரிய சர்ச்சையைத் தொடங்கி வைத்துள்ளது. ஆனால் அந்தக்கணத்தில் மைதானத்தில் விராட் கோலி வெறுப்பாக, நடுவர் நைஜல் லாங் மிகச்சரியாகத் தலையிட்டு ஸ்மித்தை ‘வழியனுப்பி’ வைத்தார்.
இந்திய ஆங்கில நாளிதழ் ஒன்று, ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் ஓய்வறையில் இத்தகைய ஆலோசனைகளை வழங்கவே நபர் ஒருவரை நியமித்துள்ளதாகவும் கூறியது, ஆனால் இதற்கெல்லாம் சாட்சியங்கள் இல்லை.
இந்நிலையில் விராட் கோலி கூறும்போது, “நான் பேட்டிங் செய்த போதே அவர்கள் இவ்வாறு இருமுறை செய்ததைப் பார்த்தேன். இருமுறை இவர்கள் ஓய்வறை உதவியைக் கோருகின்றனர் என்று நான் நடுவரிடம் புகார் செய்தேன். அதாவது டி.ஆர்.எஸ். கேட்க ஓய்வறையை ஆஸ்திரேலிய வீரர்கள் பார்ப்பதை நான் இருமுறை கண்டேன். அதனால்தான் நடுவர் ஸ்மித்தை நோக்கி வந்து அவரை அனுப்பி வைத்தார்.
ஸ்மித் திரும்பியவுடனேயே என்ன நடக்கிறது என்பது நடுவருக்குத் தெரிந்து விட்டது. ஏனெனில் நாங்கள் இதனை கவனித்து வந்தோம், ஆட்ட நடுவரிடமும் தெரிவித்தோம். அதாவது கடந்த 3 நாட்களாகவே ஆஸ்திரேலியர்கள் ஓய்வறை உதவியை நாடி வந்ததைக் குறிப்பிட்டேன்.
இதற்கு வேறு பெயர் உண்டு, அந்த வார்த்தையை நான் பயன்படுத்த விரும்பவில்லை. ஆனால் ஸ்மித்தின் இந்த நடத்தை நான் பயன்படுத்த விரும்பாத அந்த வார்த்தைக்குள் அடங்குவதே. கிரிக்கெட் களத்தில் அப்படிப்பட்ட ஒன்றை நான் செய்யவே மாட்டேன்” என்றார்.
பயன்படுத்த விரும்பாத அந்த வார்த்தை ‘ஏமாற்றுவேலை’ என்ற வார்த்தைதானே என்று நிருபர் ஒருவர் கேட்ட போது, “நான் அதைக் கூறவில்லை, நீங்கள் கூறிவிட்டீர்கள்” என்றார்.
ஸ்மித் இது குறித்து கூறும்போது, “குழப்பத்தில் அப்படிச் செய்து விட்டேன், நான் அப்படிச் செய்திருக்கக் கூடாது” என்றார்.
எதிர்முனையிலிருந்த ஹேண்ட்ஸ்கம்ப் கூறும்போது, “நான் தான் ஸ்மித்தை பெவிலியனைப் பார்க்குமாறு கூறினேன் விதிமுறையை அறியாதது என் பிழைதான். ஆனால் இதனால் இந்த அபாரமான டெஸ்ட் போட்டிக்கு களங்கம் ஏற்பட்டு விடாது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT