Published : 20 Dec 2013 09:35 PM
Last Updated : 20 Dec 2013 09:35 PM
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் குவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டத்தில் இந்தியா 320 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. வலுவான நிலையில் உள்ள இந்திய அணி இந்த போட்டியை வெற்றி பெறுவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஜோகன்னஸ்பர்கில் இந்தியா தென் ஆப்பிர்க்கா ஆடும் முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 288 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில், தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று தனது முதல் இன்னிங்க்ஸை தொடர்ந்த தென் ஆப்பிரிக்கா, ஆட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஃபிலாண்டர் அரை சதத்தைக் கடந்தார். இந்தியாவின் சார்பில், ஜாகிர் கான் மற்றும் இஷாந்த் சர்மா தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
36 ரன்கள் முன்னிலை பெற்று தனது முதல் இன்னிங்க்ஸை துவக்கிய இந்தியா ஆரம்பத்திலேயே தவானை இழந்தது. பின்னர் களமிறங்கிய புஜாரா, முரளி விஜய் இருவரும் சேர்ந்து தென் ஆப்பிரிக்காவின் வேகப் பந்து வீச்சை சமாளித்து ஆடத் துவங்கினர். முதல் இன்னிங்க்ஸைப் போல் இல்லாமல், இருவரது அணுகுமுறையிலும் மாற்றம் தெரிய இந்தியாவின் ஸ்கோர் நிதானமாக உயர்ந்தது.
39 ரன்கள் எடுத்திருக்கும் போது முரளி விஜய் காலிஸின் பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால் அதுவரை அவர் புஜாராவுடன் ஆடி அணிக்கு ஏற்படுத்திக் கொடுத்த அஸ்திவாரம் முக்கியமானதாக இருந்தது. ஸ்கோர் 90 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என இருக்க, கோலி ஆட வந்தார். அவரும் புஜாராவும் சேர்ந்து, தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை அனாயாசமாக சந்தித்தார்கள். 127 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார் புஜாரா.
மறுபக்கம் கோலியும் தனது முதல் இன்னிங்கஸைப் போலவே சிறப்பாக ஆடி ரன் குவிக்க ஆரம்பித்தார். தென் ஆப்பிரிக்க கேப்டன் ஸ்மித்தின் எந்த யுக்தியும் பலனளிக்காமல் போனது. புஜாரா 168 பந்துகளில், 13 பவுண்டரிகளுடன் சதத்தை அடைந்தார். கோலி 74 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார்.
நிலைத்து ஆடிய இருவரும் இன்றைய ஆட்டம் முடியும் வரை களத்தில் இருந்தனர். ஆட்ட நேர முடிவில் இந்தியா 284 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. புஜாரா 135 ரன்களுடனும், கோலி 77 ரன்களுடனும் நாளைய ஆட்டத்தை தொடருவார்கள்
ஒரு நாள் போட்டிகளிலும், இந்த போட்டியின் முதல் இன்னிங்க்ஸிலும், தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க இந்திய அணி திணறினாலும் இரண்டாவது இன்னிங்க்ஸில் வீரர்களது ஆட்டம் அப்படியே தலைகீழாக இருந்தது. இன்னும் முழுதாக இரண்டு நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில், இந்தியா அதிக ரன்கள் முன்னிலையுடன் டிக்ளேர் செய்து, தென் ஆப்பிரிக்காவை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. அதே போல் நாளை தென் ஆப்பிரிக்காவும் தனது அதிரடியான பவுலிங்கினால் இந்தியாவை விரைவாக ஆட்டமிழக்கச் செய்யவே முயலும். எது எப்படியாக இருந்தாலும், இந்தியாவுக்கான வெற்றி வாய்ப்பு இன்றைய நாளின் ஆட்டத்தால் பிரகாசமாகியுள்ளது.
ஃபிலாண்டர் 100, மார்கல் காயம்
இன்றைய போட்டியில் தவானின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், வேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஃபிலாண்டர் பெற்றார்.
உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரை ஸ்டெய்ன் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை புஜாரா அடிக்க, அதை மார்கல் தடுக்க முயன்றபோது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. வலியில் அப்படியே விழுந்த மார்கெல் பெவிலியனுக்கு கொண்டு செல்லப்பட்டார். கணுக்காலில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவர் இந்த ஆட்டத்தில் மேற்கொண்டு பங்கேற்க மாட்டார் என்றும், குணமாக 7-10 நாட்கள் ஆகும் என்பதால் அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்பதும் சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT