Published : 03 Oct 2014 07:25 PM
Last Updated : 03 Oct 2014 07:25 PM
இந்திய ஹாக்கி அணியின் சுவர் என்று அழைக்கப்படும் கோல் கீப்ப்ர் ஸ்ரீஜேஷ் பாகிஸ்தானை வீழ்த்துவோம் என்ற உள்ளுணர்வு தனக்கு இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் தனது உணர்வை அவர் கட்டுப் படுத்திக் கொண்டு விளையாடியதாக தெரிவித்தார் ஸ்ரீஜேஷ். நிகழ்நேர ஆட்டத்தில் சில பாகிஸ்தான் கோல் முயற்சிகளை முறியடித்த ஸ்ரீஜேஷ், பெனால்டி ஷூட் அவுட்டில் இரு அற்புதமான தடுப்பை நிகழ்த்தினார். இதனால் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
“மைதானத்திற்குள் நுழைந்தவுடன் எனக்குள் ஏற்பட்ட ஒரே சிந்தனை இந்தப் போட்டியை வெல்ல வேண்டும், வெற்றி பெற முடியும் என்பதே. இது நமக்கான நாள், நாம் வரலாறு படைப்போம் என்று எனது உள்ளுணர்வு எனக்கு அறிவுறுத்தியது.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி என்பதால் அழுத்தம் அதிகமாகவே இருந்தது. ஆனாலும் மற்ற போட்டிகளைப் போல் இயல்பானதாகவே இந்த போட்டியையும் எடுத்துக் கொண்டேன்.
நானும் எனது சகாக்கலும் உணர்ச்சிகள் எங்களை ஆட்கொள்ளாதவாறு பார்த்துக் கொண்டோம். ஆட்டத்தின் மீது பற்றுடன் ஆடினோம், அதுதான் வெற்றிக்கு வழிகோலியது.
லீக் சுற்றில் பாகிஸ்தானுடன் தோற்றது எங்கள் கண்களைத் திறந்தது. அதன் பிறகு கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டோம், இதனால் அரையிறுதியில் கொரிய அனியை வீழ்த்த முடிந்தது” என்றார் ஸ்ரீஜேஷ்.
1982ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு இறுதிப் போட்டியில் 1-7 என்று பாகிஸ்தானுடன் தோற்றது பற்றிய கேள்விக்குப் பதில் அளித்த ஸ்ரீஜேஷ், “மக்கள் எப்போதும் நல்ல நினைவுகளையே விரும்புவர். இந்த வெற்றிக்குப் பிறகு பழைய தோல்விகள் மறக்கப்படும்.
இப்போது ரசிகர்கள் எங்களிடம் அதிகம் எதிர்பார்க்கக் கூடும். ரியோ ஒலிம்பிக்கில் நாங்கள் சிறப்பாக ஆடவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பார்கள். நாங்கள் அவர்கள் ஆசையைப் பூர்த்தி செய்வோம்.
பாகிஸ்தானை வீழ்த்தினோம், ஆசிய தங்கம் வென்றோம், ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றோம், ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்துள்ளோம். ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பு நிறைய கால அவகாசம் உள்ளது. நாட்டு மக்களை கைவிட மாட்டோம்” என்றார் ஸ்ரீஜேஷ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT