Published : 18 Oct 2014 04:22 PM
Last Updated : 18 Oct 2014 04:22 PM

சச்சின் - திராவிட் சாதனையை முறியடித்து தென் ஆப்பிரிக்க வீரர்கள் உலக சாதனை

ஒருநாள் கிரிக்கெட்டில் ஜோடி சேர்ந்து அதிக ரன்கள் எடுத்த வகையில் உலக சாதனையை வைத்திருந்த சச்சின் - திராவிட் சாதனையை தென் ஆப்பிரிக்க ஜோடி உடைத்துள்ளனர்.

நேற்று புளூம்ஃபாண்டீன் மைதானத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

தென் ஆப்பிரிக்க உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட்டில் (லிஸ்ட் ஏ) டால்பின் அணியின் தொடக்க வீரர்களான மோர்னி வான் விக் மற்றும் கேமருன் டெல்போர்ட் ஜோடி 50 ஓவர்கள் முழுதையும் ஆட்டமிழக்காமல் விளையாடி 367 ரன்களைக் குவித்தனர். நைட்ஸ் அணிக்கு எதிராக நேற்று இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது.

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின், திராவிட் ஜோடி இணைந்து 1999ஆம் ஆண்டு நியுசீலாந்துக்கு எதிராக ஐதராபாதில் நடந்த ஒருநாள் போட்டியில் 331 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்து வந்தது. இந்தச் சாதனையை நேற்று வான் விக்-டெல்போர்ட் ஜோடி முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளனர்.

மோர்னி வான் விக் 171 பந்துகளில் 15 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 175 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக வெளிவர, மற்றொரு தொடக்க வீரர் டெல்போர்ட் 130 பந்துகளில் 12 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 169 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

தொடர்ந்து ஆடிய நைட்ஸ் அணியின் தொடக்க வீரர் ஆர்.ஆர்.ஹெண்ட்ரிக்ஸ், 135 பந்துகளில் 16 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 181 ரன்களை எடுத்தார். மற்றொரு வீரரான ஆர்.எஸ்.செகண்ட் என்பவர் 107 ரன்களை எடுத்தார். எனினும் நைட்ஸ் அணி 342 ரன்கள் வரை வந்து தோல்வி தழுவியது.

தொடக்க விக்கெட்டுக்காக பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் குலாம் அலி மற்றும் சொகைல் ஜாபர் இணைந்து ஒருநாள் போட்டி ஒன்றில் 326 ரன்கள் எடுத்ததே முதல் தர கிரிக்கெட் தொடக்க விக்கெட்டுக்கான அதிக பட்ச ரன் எண்ணிக்கையாக இருந்து வந்தது.

அனைத்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் இந்த பார்ட்னர்ஷிப் ரன்களே அதிகபட்சம் என்ற வகையில் சச்சின், திராவிட் சாதனையையும் இவர்கள் தாண்டியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x