Last Updated : 20 Jul, 2016 04:12 PM

 

Published : 20 Jul 2016 04:12 PM
Last Updated : 20 Jul 2016 04:12 PM

உலக நாடுகளுக்கு ஹாக்கி கற்றுத் தந்த இந்தியா- மொகமது ஷாகித் உதிர்த்த முத்துகள்!

மறைந்த ஷாகித் கூறியது, “நாம் உலகிற்கு ஹாக்கி சொல்லி கொடுத்தவர்கள்... ஆனால் இன்று அயல்நாட்டுப் பயிற்சியாளர்கள் நமக்கு பயிற்சி அளிக்கின்றனர்”

இந்தியாவின் மிகச்சிறந்த ஹாக்கி நட்சத்திரம் மொகமது ஷாகித் இன்று உடல்நலக் கோளாறு காரணமாக காலமானார். அவரது மறைவிற்கு பலரும் புகழாஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அவர் சமீபமாக ஹிந்தி மொழி ஸ்போர்ட்ஸ் இதழ் ஒன்றில் எழுதிய பத்தியில் கூறியதாவது:

“அயல்நாட்டுப் பயிற்சியாளர்களே நமக்குப் பயிற்சி அளிக்கச் சிறந்தவர்கள் என்றால் அவர்கள் ஏன் தாங்கள் சார்ந்த நாட்டின் பயிற்சியாளராகவில்லை? நாம் 8 முறை ஒலிம்பிக் சாம்பியன்களானவர்கள். இது நமக்கு பெருமையளிக்கும் ஒரு மிகப்பெரிய சாதனை. ஆனால் இப்போதைய சூழ்நிலையில் ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்க முடியாத துரதிர்ஷ்ட நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியர்களிடம் உலகநாடுகள் ஹாக்கி கற்றுக் கொண்டன. எனவே அயல்நாட்டுப் பயிற்சியாளர்கள் நமக்கு ஹாக்கி பயிற்சி அளிக்கிறார்கள் என்பது என்னைப் பொறுத்தவரையில் மிக அபத்தமான ஒன்று. நாம் ஏன் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்? கடந்த 20 ஆண்டுகளாக ஏகப்பட்ட அயல்நாட்டு பயிற்சியாளர்கள் வந்து சென்றுவிட்டனர், ஆனால் அயல்நாட்டு பயிற்சியாளர்களுடன் நம் வீரர்களும் புரிந்துணர்வு கொள்ளவில்லை, அவர்களும் நம் வீரர்களை புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை” என்று அவர் அந்தப் பத்தியில் சாடியிருந்தார்.

ஷாகித் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் இவரும் சஃபர் இக்பாலும் அமைத்த தாக்குதல் கூட்டணியைக் கண்டு பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட அணிகளே அச்சங்கொண்டிருந்தன.

அவருடன் ஆடிய சஃபர் இக்பால் கூறும்போது, “என் வாழ்நாளில் மொகமது ஷாகித் போன்ற ஆட்டம் கைவரப்பெற்ற ஒரு வீரரை நான் கண்டதில்லை. ஹாக்கி உலகிற்கு ஷாகிதின் மறைவு ஒரு பேரிழப்பு. களத்தில் எங்கள் இருவரிடையே பெரிய புரிந்துணர்வு இருந்தது. அவரை நாம் இழந்து விட்டோம்” என்றார் உருக்கமாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x