Published : 11 Oct 2014 10:52 AM
Last Updated : 11 Oct 2014 10:52 AM

2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: தோல்வியிலிருந்து மீளுமா இந்தியா?

இந்திய-மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடைபெறுகிறது. முதல் போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்ட இந்திய அணி, வீழ்ச்சியிலிருந்து மீண்டு இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் உள்ளனர்.

ஊதிய விவகாரம் தொடர்பான பிரச்சினையில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் கடும் அதிருப்தியில் இருந்தாலும்கூட, முதல் போட்டியில் அபாரமாக விளையாடி 321 ரன்கள் குவித்தனர். கிறிஸ் கெயில், சுநீல் நரேன் என இரு முன்னணி வீரர்கள் இல்லாதபோதிலும் இந்தத் தொடரை அபார வெற்றியோடு தொடங்கியிருக்கிறது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி சரிவிலிருந்து மீள்வதற்கு போராடும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்திய அணியின் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டுமே முதல் போட்டியில் எடுபடவில்லை. கடந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவன் 68 ரன்கள் குவித்ததுதான் இந்தியாவுக்கு ஆறுதல் அளித்த ஒரே விஷயம்.

தடுமாறும் கோலி

அதேநேரத்தில் மிடில் ஆர்டரில் விராட் கோலி தொடர்ந்து சொதப்பி வருவது கவலையளிப்பதாக உள்ளது. கோலியின் ஆட்டநுணுக்கத்தில் உள்ள பிரச்சினை குறித்து வெளிப்படையாக பேசியிருக்கும் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், அவர் மீண்டும் பார்முக்கு திரும்புவதற்கு வசதியாக அவரை பின்வரிசையில் களமிறக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்தத் தொடரை இந்தியா கைப்பற்றுவது கோலியின் ஆட்டத்தைப் பொறுத்தே அமையும். கோலிக்கு அடுத்தபடியாக சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, கேப்டன் தோனி ஆகியோர் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே இந்தியாவின் ரன் குவிப்பு அமையும்.

மோஹித் சர்மாவுக்கு காயம்

இந்தியாவின் பந்துவீச்சும் கவலையளிப்பதாகவே உள்ளது. புவனேஸ்வர் குமாரைத் தவிர மற்ற யாரும் சொல்லிக்கொள்ளும்படி பந்துவீசவில்லை. மோஹித் சர்மாவுக்கு காலின் முன்னெலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பதால் அவர் இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். இஷாந்த் இன்றைய போட்டியில் சேர்க்கப்படும்பட்சத்தில் அது இந்தியாவின் பந்துவீச்சுக்கு வலு சேர்ப்பதாக அமையும். சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி டுவைன் ஸ்மித், கேப்டன் டுவைன் பிராவோ, சாமுவேல்ஸ், தினேஷ் ராம்தின், கிரண் போலார்ட் என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. கடந்த போட்டியில் சதமடித்த சாமுவேல்ஸ் இந்த ஆட்டத்திலும் அந்த அணிக்கு வலு சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் ராம்பால், டெய்லர், டேரன் சமி, பிராவோ, ரஸல், சுலைமான் பென் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

இந்தியா: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ஷிகர் தவன், அஜிங்க்ய ரஹானே, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார், முகமது சமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முரளி விஜய், குல்தீப் யாதவ்.

மேற்கிந்தியத் தீவுகள்: டுவைன் பிராவோ (கேப்டன்), டேரன் பிராவோ, ஜேசன் ஹோல்டர், லியோன் ஜான்சன், கிரண் போலார்ட், தினேஷ் ராம்தின், ரவி ராம்பால், கெமர் ரோச், ஆண்ட்ரே ரஸல், டேரன் சமி, மார்லான் சாமுவேல்ஸ், லென்ட் சிம்மன்ஸ், டுவைன் ஸ்மித், ஜெரோம் டெய்லர்.

போட்டி நேரம்: பிற்பகல் 2.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x