Published : 23 Jul 2016 09:53 AM
Last Updated : 23 Jul 2016 09:53 AM
இரண்டாம் உலகப் போர் காரணமாக 1940, 1944-ம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. 12 ஆண்டுகளுக்குப் பிறகு 14-வது ஒலிம்பிக் போட்டி 1948-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்றது. ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெற்ற இப்போட்டியில் 59 நாடுகளைச் சேர்ந்த 3,714 வீரர்கள், 390 வீராங்கனைகள் என மொத்தம் 4,104 பேர் கலந்து கொண்டனர்.
17 விளையாட்டுகளில் 136 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 2-வது உலகப் போரில் தீவிரமாக செயல்பட்ட ஜெர்மனி, ஜப்பான் நாடுகள் இப்போட்டியில் சேர்க்கப்படவில்லை. அமெரிக்கா 38 தங்கம், 27 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 84 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. ஸ்வீடன் 16 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 44 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், பிரான்ஸ் 10 தங்கம், 6 வெள்ளி, 13 வெண்கலம் என 29 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன.
இந்தியாவுக்கு 4-வது தங்கம்
ஹாக்கிப் போட்டியில் இந்தியா 4-வது முறையாக தங்கப் பதக்கம் கைப்பற்றியது. இறுதி போட்டியில் இந்தியா 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இங்கிலாந்து வெள்ளியும், நெதர்லாந்து வெண்கலமும் வென்றன.
பிளாங்கர்ஸ்
2 குழந்தைகளின் தாயான நெதர்லாந்தின் 30 வயது தடகள வீராங்கனை பேனி பிளாங்கர்ஸ் கோயன் 4 தங்கம் வென்றார். 100 மீட்டர், 200 மீட்டர், 80 மீட்டர் தடை தாண்டுதல் போட்டி, 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் தங்கம் வென்றார். தனது சாதனை மற்றும் குடும்பப் பின்னணியின் காரணமாக இவர் தி பிளையிங் ஹவுஸ் வைஃப் என்று அழைக்கப்பட்டார். நெதர்லாந்து தடகள வரலாற்றில் தலைசிறந்த வீராங்கனையாக கருதப்படும் பிளாங்கர்ஸூக்கு ஆம்ஸ்டெர்டாமில் சிலை வைக்கப்பட்டுள்ளது.
ஆர்தர் வின்ட்
இலங்கை வீரர் டங்கன் ஒயிட் 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றார். இலங்கைக்கு கிடைத்த முதல் ஒலிம்பிக் பதக்கம் இதுதான். ஜமைக்காவின் ஆர்தர் வின்ட் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கமும், 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளியும் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் ஜமைக்கா வீரர் என்ற பெருமையை பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT