Published : 02 Sep 2016 02:35 PM
Last Updated : 02 Sep 2016 02:35 PM

இங்கிலாந்தை வெல்ல முடியாமல் திணறும் பாகிஸ்தான்: 4-0 முன்னிலை

ஹெடிங்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தானை இங்கிலாந்து வீழ்த்தி, தொடரில் 4-0 என்று முன்னிலை வகிக்கிறது.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் எடுக்க இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஜோஸ் பட்லருக்கு எதிர்பாராத காயம் ஏற்பட்டதால் ஜானி பேர்ஸ்டோ அழைக்கப்பட்டார். இவர் தனது அழைப்பை நிரூபிக்கும் விதமாக 61 ரன்கள் எடுத்ததோடு பென் ஸ்டோக்ஸுடன் 103 ரன்கள் கூட்டணி அமைத்தார். பென் ஸ்டோக்ஸ் 70 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார்.

இங்கிலாந்து 59/3 என்று திணறிய வேளையில் ஸ்டோக்ச் இறங்கினார். டிரெண்ட் பிரிட்ஜ் அதிரடியை அலெக்ஸ் ஹேல்ஸ் (8) இன்னொரு முறை நிகழ்த்த முடியவில்லை. ஜோ ரூட் (30), இயான் மோர்கன் (11) ஆகியோர் விரைவில் பிட்சிலிருந்து விடைபெற ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

ஸ்டோக்ஸ் 34 ரன்கள் இருந்த போது இமாத் வாசிம் பந்தில் கேட்ச் விடப்பட்டது, அதனைப் பயன்படுத்திய அவர் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களை விளாசினார். கடைசியில் இமாத் வாசிமை ஸ்லாக் ஸ்வீப் செய்து டீப்பில் கேட்ச் ஆனார். ஜானி பேர்ஸ்டோ நேர் பவுண்டரி மூலம் தனது 18-வது ஓருநாள் போட்டியில் 2-வது அரைசதம் கண்டார். இவர் அசார் அலியின் நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். ஆனால் இங்கிலாந்துக்கு 34 பந்துகளில் 24 ரன்களே வெற்றிக்குத் தேவையாக இருந்தது. மொகமது இர்பான் (2/26) அருமையாக வீசினாலும் இரண்டாவது முறை பந்து வீச அழைக்கப்பட முடியாமல் காயமடைந்தார்.

கடையில் மொயின் அலி (45 நாட் அவுட்), அசாரை நேர் சிக்ஸ் அடித்து போட்டியை ஸ்டைலாக வெற்றி பெற்றார்.

முன்னதாக பாகிஸ்தான் பேட்டிங்கில் எந்த வித உயிரோட்டமும் இல்லை, முதல் 10 ஓவர்களில் 3 பவுண்டரிகள் 1 சிக்சரே அடிக்க முடிந்தது. அதிரடி இடது கை வீரர் ஷர்ஜீல் கான் 16 ரன்களில் பென் ஸ்டோக்ஸினால் கவர்திசையில் பிடித்துப் போடப்பட்டார். அசார் அலி அடுத்தடுத்த ஓவர்களில் சிக்ஸர்கள் அடித்தாலும் எதிர்முனையில் யாரும் உறுதுணையாக ஆடத் தயாராக இல்லை. அசார் அலி 62 பந்துகளில் அரைசதம் கண்டார். சர்பராஸ் அகமது 12 ரன்களில் பிளங்கெட்டின் அபார கேட்சுக்கு வெளியேறினார். பாபர் ஆசம் முன்னதாக 12 ரன்களில் மொயின் அலியிடம் வீழ்ந்தார்.

104 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 80 ரன்கள் எடுத்த அசார் அலியும் அடில் ரஷீத்திடம் வெளியேற 38-வது ஓவர் முடிவில் 169/6 என்று ஆனது பாகிஸ்தான். மொயின் அலி 10 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், இவரது ஒட்டு மொத்த ஓவர்களிலும் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை பாகிஸ்தான்.

கடைசியில் இமாத் வாசிம் தனக்கேயுரிய பாணியில் ஆடியதும், சக்தி வாய்ந்த ஷாட்களும் கைகூட 41 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 57 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், பாகிஸ்தான் 247/6 என்ற ஸ்கோரை எட்டியது. பாகிஸ்தான் அணியில் கடந்த போட்டியில் சாத்துமுறை வங்கிய மொகமது ஆமிர் இல்லை.

ஆட்ட நாயகனாக பேர்ஸ்டோ தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x