Published : 24 Sep 2013 12:04 PM
Last Updated : 24 Sep 2013 12:04 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி - ஹசி, ரெய்னா அபாரம்

டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, இந்த ஆட்டத்தில் ஹசி, ரெய்னா ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்தனர். அதே நேரத்தில் நமது பந்துவீச்சாளர்கள் மேலும் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியது: 186 ரன்கள் என்பது கடினமான இலக்கு. ஆனால் ரெய்னா, ஹசி ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.

முதல் 10 ஓவர்களில் பந்துகளை எதிர்கொள்வது கடினமாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் அப்படி இல்லாமல் இருந்தது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. பந்துவீ்ச்சாளர்கள் சற்று மோசமாக பந்து வீசும்போது, அதனை அடித்து ஆடுவது இதுபோன்ற பெரிய இலக்குகளை எட்டுவதற்கு மிகவும் அவசியம். இந்த ஆட்டத்தில் அதனை நாங்கள் சிறப்பாக செய்தோம்.

அதே நேரத்தில் நாங்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தது சற்று கவலை அளிக்கிறது. இனி வரும் ஆட்டங்களில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். அதுதான் இத்தொடரில் மேலும் பல வெற்றிகளைப் பெற உதவும். 20 ஓவர் போட்டிகளில் ஒரு ஓவரில் 6 அல்லது 7 ரன்கள் எடுக்கப்படுவது சாதாரண மானதுதான். ஆனால் 11 முதல் 18 ரன்களை வரை விட்டுக் கொடுப்பது கடினமானது என்றார் தோனி.

டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹென்றி டேவிட்ஸ் கூறியது: இந்த ஆட்டத்தில் நாங்கள் எடுத்தது மிகவும் சிறப்பான ஸ்கோர். ஆனால் உதிரி ரன்களாக 24 கொடுத்தது எங்கள் வெற்றியைப் பறித்துவிட்டது. பந்து வீச்சாளர்கள் கூடுதல் கவனத்துடன் பந்துவீசியிருக்க வேண்டும் என்றார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற சுரேஷ் ரெய்னா: பவுன்சர்களை எதிர்கொள்வதில் எனக்குப் பிரச்சினை இருந்தது. ஆனால் இந்திய ஏ அணியில் பங்கேற்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடியது, அதில் இருந்து மீண்டுவர உதவியது. டைட்டன்ஸ் அணியினர் 140 கி.மீ. வேகம் வரை பந்து வீசுவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். பந்துகளை சரியாக கணித்து விளையாடினேன் என்றார் ரெய்னா.

26 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவிய மைக் ஹசி: எதிரணியினர் சிறப்பான இலக்கை எங்களுக்கு நிர்ணயித்தனர். ரெய்னாவுடன் இணைந்து பேட்டிங் செய்வது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். எங்கள் தொடக்கம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதுபோலவே அமைந்தது. ரெய்னாவின் சிறப்பான ஆட்டம் எனக்கு நெருக்கடியை குறைத்தது. இதனால் அதிக ரன்களை எடுக்க முடிந்தது. சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுடன் விளையாடுவது எப்போதுமே எனக்கு உற்சாகம் தரக்கூடியது. கடந்த 6 ஆண்டுகளாக அதனை உணர்ந்து வருகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x