Published : 24 Feb 2017 05:55 PM
Last Updated : 24 Feb 2017 05:55 PM

ஓகீஃப், ஸ்மித் அபாரம்: இந்தியாவை வீழ்த்தும் வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

புனே டெஸ்ட் போட்டியில் எதிர்பாராத ஓகீஃப் திருப்பத்தினால் இந்தியா 105 ரன்களுக்கு மடிய, 155 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 2-ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்துள்ளது.

கேப்டன் ஸ்மித் பிரமாதமான திறமையை வெளிப்படுத்தி 59 ரன்களுடனும், மிட்செல் மார்ஷ் 21 ரன்களுடனும் களத்தில் இருக்க ஆஸ்திரேலியா ஒட்டுமொத்தமாக 298 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது, இந்திய கவலையை அதிகரிக்கும் விதமாக இன்னும் 6 விக்கெட்டுகள் மீதமுள்ளன.

கேப்டன் ஸ்மித் இந்தியாவுக்கு எதிராக 7 டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்து சாதனை புரிந்துள்ளார். இந்திய அணி 105 ரன்களில் ஆட்டமிழந்த பதற்றத்தில் ஆடிவருவதால் ஸ்மித்துக்கு 3 வாய்ப்புகளை நழுவ விட்டது. விஜய், அபினவ் முகுந்த ஆகியோர் வாய்ப்புகளைக் கோட்டை விட்டனர்.

பிட்சில் பந்துகள் ‘ஸ்கொயர்’ ஆக திரும்பி எழும்பி வருகிறது எனவே 350 ரன்கள் இலக்கைத் துரத்துவது ஒரு இமாலயப் பணியாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்தத் தொடருக்காக நன்றாக தயாரிப்பு செய்துள்ளோம் என்ற ஆஸ்திரேலியாவின் கூற்றுகளை இந்திய அணியினர் உணர்வுபூர்வமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது குழிபிட்ச் போட்டதிலிருந்தே தெரிகிறது. இன்று மட்டும் 15 விக்கெட்டுகள் சரிந்த பிட்சில் 350 ரன்கள் இலக்கை துரத்துவது மிகமிகக் கடினம். அதுவும் சேவாக், திராவிட், சச்சின், லஷ்மண் போன்ற ஜாம்பவான்கள் ஒய்வுபெற்ற பிறகு இது கடினமானதே. உள்நாட்டுத் தொடரில் முதன்முதலாக கோலி டக் அவுட் ஆகியுள்ளார். ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்புக்கு மேல் வாய்ப்புகள் கோட்டை விடப்பட்டன.

ஆஸ்திரேலியாவின் 2-வது இன்னிங்ஸில் வாந்தி காரணமாக ரென்ஷா தொடக்கத்தில் இறங்கவில்லை அவருக்குப் பதிலாக வார்னருடன் ஷான் மார்ஷ் இறங்கினார். இவர் 21 பந்துகள் போராடி டக் அவுட் ஆனார். அஸ்வினின் திருப்பப்படாத பந்தில் நேராக கால்காப்பில் வாங்கினார். வார்னரையும் அஸ்வின் வீழ்த்தினார். இந்நிலையில் நம்மைப் போலவே ஆஸியும் சரிவடையும் என்று இந்திய அணி எதிர்நோக்கியிருக்கும், ஆனால் நடக்கவில்லை, ஹேண்ட்ஸ்கம்ப் 19 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தில் லெக் கல்லியில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

உடல்நலக்கோளாறுடன் இறங்கிய ரென்ஷா, மிக அருமையாக ஸ்பின் பவுலிங்கை எதிர்கொண்டார், அதுவும் அஸ்வினை பந்து ஸ்பின் ஆகும் திசைக்கு எதிர்த்திசையில் அதாவது ஆன் திசையில் அடித்த பவுண்டரி அவரது தன்னம்பிக்கைக்குச் சான்று அவர் 31 ரன்கள் எடுத்து ஜெயந்த் யாதவ்விடம் வீழ்ந்தார்.

ஸ்மித் 23 ரன்களில் இருந்த போது அஸ்வின் பந்தை பிளிக் செய்தார் இந்த கேட்ச் வாய்ப்பை முரளி விஜய் நழுவவிட்டார். பிறகு 29 ரன்களில் ஸ்மித் இறங்கி வந்து ஜடேஜாவை அடித்தார் மிட் ஆனில் இப்போது அபினவ் முகுந்த் கேட்சை விட்டார். பிறகு 37 ரன்களில் இதே அபினவ் முகுந்த் மேலும் எளிதான கேட்ச் வாய்ப்பை அஸ்வின் பந்தில் ஷார்ட்-லெக்கில் நழுவ விட்டார். ரென்ஷாவுக்கும் 25ல் ஒரு லைஃப், ஹேண்ட்ஸ்கம்புக்கும் லைஃப் வழங்கப்பட்டது.

ஆட்ட முடிவில் ஸ்மித் 7 பவுண்டரிகளுடன் 59 ரன்களுடனும் மிட்செல் மார்ஷ் ஒரு மிகப்பெரிய சிக்ஸ், 2 பவுண்ட்ரிகளுடன் 21 ரன்களிலும் உள்ளனர். இந்திய அணியில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் ஜெயந்த் யாதவ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x