Published : 16 Jan 2014 12:00 AM
Last Updated : 16 Jan 2014 12:00 AM
மொனாக்கோவில் 2005-ல் நடைபெற்ற உலக தடகள பைனலில் நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற ரஷிய வீராங்கனை தத்யானா கோட்டோவா ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவருடைய சாதனை அழிக்கப்பட்டு, அந்தப் போட்டியில் 2-வது இடத்தைப் பிடித்த இந்திய வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ், முதலிடத்தைப் பிடித்ததாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சர்வதேச தடகள சம்மேளனத்தின் இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் அஞ்சு பாபி ஜார்ஜ் தங்கப் பதக்கமும், அமெரிக்காவின் கிரேஸ் உப்ஷா வெள்ளிப் பதக்கமும், பிரான்ஸின் யூனிஸ் பர்பர் வெண்கலப் பதக்கமும் வென்றதாக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உலக தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அஞ்சு பாபி ஜார்ஜ் பெற்றுள்ளார்.
இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள அஞ்சு பாபி ஜார்ஜ், “2005 உலக தடகள பைனல் போட்டியில் நான் தங்கப் பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டிருப்பதாக இந்திய தடகளம் சம்மேளனம் தெரிவித்தது. அதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன். எனது 9 ஆண்டுகால காத்திருப்புக்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது. எனது காலத்தில் நீளம் தாண்டுதலில் பங்கேற்ற ரஷிய வீராங்கனைகள் சிலர் மீது எனக்கு சந்தேகம் இருந்தது. அவர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியிருக்கலாம் என நினைத்தேன்” என்றார்.
2005-ல் ஹெல்சிங்கில் நடைபெற்ற உலக தடகளப் போட்டியின்போது தத்யானா கோட்டோவாவிடம் இருந்து பெறப்பட்ட ரத்த மாதிரிகளில் ஊக்கமருந்து மருந்து பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டி முதல் அடுத்த 8 ஆண்டுகள் வரையிலான காலத்தில் அவரிடம் இருந்து பெறப்பட்ட ரத்த மாதிரிகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தும்படி சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் உத்தரவிட்டது. அதன்பேரில் 2005 உலக தடகள பைனலின்போது தத்யானாவிடம் இருந்து பெறப்பட்ட மாதிரியை சோதித்ததில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அஞ்சு பாபி ஜார்ஜுக்கு தங்கப் பதக்கம் அறிவிக்கப்பட்டிருப்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இந்திய தடகள சம்மேளனத்துக்கு இதுவரை வரவில்லை. இது தொடர்பாக இந்திய தடகள சம்மேளன தலைவர் அடில் சுமாரிவாலா கூறுகையில், “அஞ்சு விவகாரத்தில் சர்வதேச சம்மேளனத்திடம் இருந்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வரும் என எதிர்பார்க்கிறோம். அதற்காகக் காத்திருக்கிறோம்” என்றார்.
ஹெல்சிங்கி உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இரண்டாவது இடம்பிடித்த தத்யானா இப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதால், அதில் 5-வது இடம்பிடித்த அஞ்சு ஜார்ஜ், இப்போது 4-வது இடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் ரஷிய வீராங்கனைகள் தத்யானா லெபடேவா, இரினா சிமாஜினா, தத்யானா கோட்டோவா ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். இதில் அஞ்சு பாபி ஜார்ஜ் 5-வது இடத்தைப் பிடித்தார். இது தொடர்பாக பேசிய அஞ்சு ஜார்ஜ், 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கிலும் தத்யானா ஊக்கமருந்து பயன்படுத்தியிருக்கலாம் என எதிர்பார்க்கிறேன். அந்த ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவ ரான சிமாஜினா, 2006-ல்
ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு ரஷிய தடகள சம்மேளனத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளார். அவருடைய ரத்த மாதிரிகளும் மீண்டும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படுமானால் ஒலிம்பிக்கிலும் எனக்கு பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக நம்புகிறேன்” என்றார். -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT