Published : 17 Oct 2014 10:37 AM
Last Updated : 17 Oct 2014 10:37 AM

4-வது ஒரு நாள்: மே.இ.தீவுகளின் வேகப்பந்து வீச்சை சமாளிக்குமா தோனி படை?

இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இமாசலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று நடக்கிறது.

கடல் மட்டத்தில் இருந்து 1,317 மீ. உயரத்தில் பனி சூழ்ந்த மலைகளுக்கு நடுவே அமைந்திருக்கும் இந்த மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் போட்டியில் படுதோல்வி கண்ட நிலையில், 2-வது போட்டியில் வென்றதன் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியிருக்கிறது இந்தியா. 3-வது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுவிட்ட நிலையில் இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் இரு அணிகளும் களமிறங்குகின்றன. அதனால் இரு அணிகளுமே கடுமையாகப் போராடும்.

மிரட்டும் ரெய்னா

இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் தொடக்க ஆட்டக்காரர்கள் அஜிங்க்ய ரஹானே-ஷிகர் தவன் இருவரும் சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தித் தருவது முக்கியமாகும். மிடில் ஆர்டரில் நீண்ட நாட்களாக தடுமாறி வந்த கோலி, கடந்த போட்டியில் 4-வது வீரராக களமிறக்கப்பட்டதற்கு பலன் கிடைத்தது. அவர் 62 ரன்கள் குவித்தார். எனவே இந்த ஆட்டத்திலும் அவர் 4-வது வீரராகவே களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனி, அம்பட்டி ராயுடு ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். ரெய்னா, தோனி இருவரும் பார்மில் இருப்பது இந்தியாவுக்கு கூடுதல் பலமாகும்.

கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்

இந்தியாவின் வெற்றியில் வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில் சுழற்பந்து வீச்சு பெரிய அளவில் எடுபட வாய்ப்பில்லை என்பதால் வேகப்பந்து வீச்சாளர்களை நம்பியிருக்கிறது இந்தியா. அதனால் இந்தப் போட்டியில் புவனேஸ்வர் குமார், முகமது சமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா என 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஷாந்த் சர்மா களமிறங்கினால் அமித் மிஸ்ரா நீக்கப்படுவார். கடந்த இரு ஆட்டங்களையும் சேர்த்து மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் முகமது சமி இந்த ஆட்டத்திலும் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கணிக்க முடியாத மே.இ.தீவுகள்

கணிக்க முடியாத அணியாகத் திகழும் மேற்கிந்தியத் தீவுகளின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் மார்லான் சாமுவேல்ஸும், டுவைன் ஸ்மித்தும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். முதல் போட்டியில் சாமுவேல்ஸ் 126 ரன்களும், 2-வது போட்டியில் ஸ்மித் 97 ரன்களும் குவித்தது குறிப்பிடத்தக்கது.

எனினும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவாக விக்கெட்டுகளை இழப்பது அந்த அணிக்கு பிரச்சினையாக உள்ளது. கடந்த ஆட்டத்தில்கூட அந்த அணி வெற்றி பெறும் தருவாயில் இருந்தபோதும், கடைசி 8 விக்கெட்டுகளை 45 ரன்களுக்கு இழந்ததால் தோல்வியைத் தழுவியது. கெமர் ரோச், ரவி ராம்பால், ஜெரோம் டெய்லர், டேரன் சமி, ரஸல் என வலுவான வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டுள்ளது மேற்கிந்தியத் தீவுகளின் மிகப்பெரிய பலமாகும்.

மைதானம் எப்படி?

மலைப் பகுதியில் அமைந்துள்ள தர்மசாலா மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். பவுன்சர்கள் எகிறும் என ஆடுகள பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார். மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றாலும், இங்கு அடிக்கும் சாரல்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பலம் சேர்ப்பதாக அமையும் என தெரிகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த மைதானம் ஆரம்பத்தில் முற்றிலும் பந்துவீச்சாளர்களுக்கே சாதகமாக இருக்கும். இரவில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். அதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பீல்டிங்கையே தேர்வு செய்யும். இதற்கு முன்பு இங்கு பல ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றிருந்தாலும், ஒருநாள் போட்டி என எடுத்துக்கொண்டால் ஒரேயொரு போட்டி மட்டுமே நடைபெற்றுள்ளது. 2013-ல் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்துள்ளது. அதில் இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரெய்னா 83 ரன்கள் குவித்துள்ளார்.

இந்தியா: எம்.எஸ்.தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஷிகர் தவன், அஜிங்க்ய ரஹானே, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார், முகமது சமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முரளி விஜய், குல்தீப் யாதவ், அக்ஷர் படேல்.

மேற்கிந்தியத் தீவுகள்: டுவைன் பிராவோ (கேப்டன்), டுவைன் ஸ்மித், டேரன் பிராவோ, கிரண் போலார்ட், மார்லான் சாமுவேல்ஸ், தினேஷ் ராம்தின் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரஸல், டேரன் சமி, ரவி ராம்பால், கெமர் ரோச், ஜெரோம் டெய்லர், சுலைமான் பென், ஜேசன் ஹோல்டர், லியோன் ஜான்சன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x