Last Updated : 19 Jun, 2017 03:54 PM

 

Published : 19 Jun 2017 03:54 PM
Last Updated : 19 Jun 2017 03:54 PM

தலை நிமிர்ந்தே தாயகம் திரும்புகிறோம்: விராட் கோலி

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் தந்த அழுத்தமே இந்திய தோல்விக்கு முக்கியக் காரணம் என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. முதலில் ஆடிய பாக். அணி 338 ரன்கள் அடிக்க, இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி 158 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த இந்திய அணி மேற்கொண்டு பாகிஸ்தான் பந்துவீச்சு தந்த அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பாகிஸ்தானின் பந்துவீச்சு எங்களை அது போன்ற தவறான ஷாட்களை ஆட வைத்தது, அப்படியொரு அழுத்தம் உருவாக்கியது என கோலி கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து பேசுகையில், "துவக்க வீரர் ஃபகர் ஸமான் போன்ற வீரர்கள் போட்டியில் இப்படி ஆடும்போது அவர்களைத் தடுப்பது முகவும் கடினமாக ஆகிவிடும். அவரது 80 சதவித ஷாட்கள் அதிக ரிஸ்க் ஆனவை. ஆனால் அவை வீண் போகவில்லை.

சிலசமயங்களில் இது போன்ற சூழலில் ஒரு பந்துவீச்சாளராக, ஒரு கேப்டனாக, இன்று அவர் எதையும் சமாளிக்கும் வல்லமையுடன் உள்ளார் என்பதை ஒப்புக் கொள்ளவேண்டும்.

நாங்கள் அவர்களை தவறாக ஆட வைக்க முயற்சித்தோம் ஆனால் எங்கள் உத்தி எதுவும் கைகொடுக்கவில்லை.

என்ன இருந்தாலும் நாங்கள் தலை நிமிர்ந்தே தாயகம் திரும்புகிறோம். இறுதிப் போட்டி வரை முன்னேற உழைத்த அனைவருக்கும் அந்த பெருமை சேரும். இறுதிப் போட்டியில் எல்லா விதத்திலும் எங்களை விட அவர்கள் சிறப்பாக ஆடினார்கள். கடைசியில் நாம் கண்டிப்பாக எதிரணியின் திறமையை ஏற்றுக்கொண்டு மதிக்கவேண்டும்".

இவ்வாறு கோலி பேசியுள்ளார்.

இந்திய அணி அடுத்து மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x