Published : 02 Jan 2014 12:00 AM
Last Updated : 02 Jan 2014 12:00 AM
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா காலிறுதிக்கு முன்னேறினார். போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள வாவ்ரிங்கா தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் பெஞ்சமின் பெக்கரைத் தோற்கடித்தார். இந்த ஆட்டத்தின் இரு செட்களிலும் தலா இருமுறை பெக்கரின் சர்வீஸை முறியடித்தார் வாவ்ரிங்கா.
19-வது ஏர்செல் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. தரவரிசை அடிப்படையில் நேரடியாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பங்கேற்ற வாவ்ரிங்கா, அதில் சர்வதேச தரவரிசையில் 79-வது இடத்தில் உள்ள பெக்கரை எதிர்கொண்டார்.
பெக்கர் ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக ஆடினார். ஆனால் ஆரம்பத்தில் நிதானம் காட்டிய வாவ்ரிங்கா, 4-வது கேமில் ஏஸ் சர்வீஸை அடித்து அதிரடியில் இறங்கினார். 5-வது கேமில் பெக்கரின் சர்வீஸை எளிதாக முறியடித்து 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற வாவ்ரிங்கா, அடுத்த கேமில் மேலும் இரு ஏஸ் சர்வீஸ்களை பறக்கவிட்டார். அதில் முதல் ஏஸ் சர்வீஸ் 195 கி.மீ. வேகத்திலும், 2-வது ஏஸ் 200 கி.மீ. வேகத்திலும் சென்றன.
இதன்பிறகு 8-வது கேமில் கடுமையாகப் போராடிய பெக்கர், வாவ்ரிங்காவின் சர்வீஸைப் பிடிக்க முயன்றார். இதனால் இந்த கேம் 3 முறை டியூஸ் வரை சென்றது. எனினும் விடாப்பிடியாக போராடிய வாவ்ரிங்கா அதிவேக ஷாட்களை விளாசி, தனது சர்வீஸை மீட்டார். 9-வது கேமில் பெக்கர் மணிக்கு 210 மற்றும் 212 கி.மீ. வேகத்தில் சர்வீஸ்களை அடித்தபோதிலும், ஆக்ரோஷமாக ஆடிய வாவ்ரிங்கா 2-வது முறையாக பெக்கரின் சர்வீஸை முறியடித்து முதல் செட்டை முடிவுக்குக் கொண்டு வந்தார். 29 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த செட் 6-3 என்ற கணக்கில் வாவ்ரிங்கா வசமானது.
முதல் செட்டை இழந்ததால் 2-வது செட்டில் பதற்றத்தோடே விளையாடினார் பெக்கர். அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட வாவ்ரிங்கா, 2-வது கேமிலேயே பெக்கரின் சர்வீஸை முறியடித்து மேலும் நெருக்கடியை ஏற்படுத்தினார். 2-வது கேமில் பெக்கர் சராசரியாக 200 கி.மீ. வேகத்தில் சர்வீஸ் போட்டபோதும், அதற்கு பலன் கிடைக்கவில்லை.
4-வது கேமில் பெக்கரின் சர்வீஸை மீண்டும் முறியடிக்க வாவ்ரிங்கா முயன்றார். ஆனால் மறுமுனையில் ஆக்ரோஷமாக ஆடிய பெக்கர் கடும் போராட்டத்துக்குப் பிறகு தனது சர்வீஸை மீட்டார். இதன்பிறகு பெக்கரை அங்கும் இங்கும் ஓடவிட்டார் வாவ்ரிங்கா. இதனால் மேலும் பதற்றமடைந்த பெக்கர், 6-வது கேமில் எவ்வித போராட்டமும் இன்றி மிக சுலபமாக தனது சர்வீஸை இழந்தார். இதையடுத்து 7-வது கேமில் அபாரமாக ஆடிய வாவ்ரிங்கா, அந்த கேமோடு ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
பெடேனுடன் மோதல்
53 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வாவ்ரிங்கா 4 ஏஸ்களையும், பெக்கர் இரு ஏஸ்களையும் அடித்தனர். வாவ்ரிங்கா தனது காலிறுதிச் சுற்றில் ஸ்லோவேகியாவின் அஜஸ் பெடேனை சந்திக்கிறார். முன்னதாக அஜஸ் பெடேன்-ரஷியாவின் அலெக்சாண்டர் குட்ரியாவ்ட்சேவ் இடையிலான ஆட்டத்தில் முதல் செட்டை அலெக்சாண்டர் 6-1 என்ற கணக்கில் வென்றார். 2-வது செட்டில் பெடேன் 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது பெடேன் விலகினார். இதையடுத்து பெடேன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
300-வது வெற்றியை நோக்கி
2011 சென்னை ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றவரான வாவ்ரிங்கா, இந்த ஆட்டத்தில் வென்றதன் மூலம் சென்னை ஓபனில் 12-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இதுவரை சென்னை ஓபனில் 16 ஆட்டங்களில் விளையாடியுள்ள வாவ்ரிங்கா, 4-ல் மட்டுமே தோல்வி கண்டுள்ளார். இதுவரை 299 ஏடிபி போட்டிகளில் விளையாடியுள்ள வாவ்ரிங்கா, காலிறுதியில் வெற்றி பெறும் பட்சத்தில் 300 ஏடிபி போட்டிகளில் வெற்றி கண்ட 4-வது ஸ்விட்சர்லாந்து வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.
வெற்றி குறித்துப் பேசிய வாவ்ரிங்கா, “இது நல்ல தொடக்கம். எனது சிறப்பான செயல்பாடு மகிழ்ச்சியளிக்கிறது. கொஞ்சம் மழை இருந்தது. சிறப்பாக விளையாட முயற்சித்தேன். சிறப்பாக விளையாடிவிட்டதாக நினைக்கிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT